Thursday, February 28, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – கீரைகள்


கீரைகள் வீட்டுத் தோட்டங்களில் முக்கியமாக வளர்க்க வேண்டிய ஓன்று. இப்போது இருக்கும் நவீன விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டிற்க்கு ஒன்றும் குறைவில்லை. நிறைய விளைச்சல் எடுப்பதற்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி பற்றி நிறைய எழுதலாம் (பிறகு). இது கீரைகளில் தெளிக்கும் போது அது இலைகளில் உறிஞ்சிக் கொள்ளும் விகிதம் காய்கறிகளை ஒப்பிடும் போது அதிகம். அதனால் தான் கடைகளில் கீரைகள் ரொம்ப பிரெஷ்ஷா பூச்சி அரிப்பு ஓன்று கூட இல்லாமல் கிடைக்கிறது. லேசாய் பூச்சி அரித்தாலும் நாம் வாங்குவதும் இல்லை. ஆனால் பொதுவாய் கீரைகளை நிறைய பூச்சிகள் வந்து சாப்பிடும். பூச்சியே சாப்பிட தகாத இலையில் எவ்வளவு ரசாயன மருந்துகள் இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். 

இங்கே வீட்டில் முடிந்த அளவுக்கு கீரைகள் தோட்டத்தில் இருந்து தான் பயன்படுத்துவோம். கீரைகள் வளர்ப்பது மிகவும் எளிது. சில கீரைகள் (புதினா, பொன்னாங்கண்ணி) நமக்கு தொடர்ந்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கும். மாடி தோட்டங்களிலும் எளிதாக வளர்க்கலாம். ஊடு பயிராக மற்ற செடிகளின் இடைவெளியில் போட்டு வைக்கலாம்.  
 
ஏற்கனவே மணத்தக்காளி கீரை பற்றி தனியாக ஒரு பதிவில் எழுதி இருந்தேன். அதனால் மற்ற கீரைகள் பற்றி பார்க்கலாம்.

சிறுகீரை மற்றும் அரைக்கீரை
     இதன் விதைகள் பொதுவாக எல்லா உரக்கடைகளிலும் கிடைக்கிறது.  கீரைகளில் ரொம்ப ருசியான கீரை என்று இதை சொல்லலாம். ஒரு பாத்தியில் கிளறி விதைகளை தூவி விட்டால் போதும். வளர்ந்தவுடன் போதும் என்ற அளவுக்கு பிடுங்கி கொள்ளலாம். குட்டீஸ்களுக்கு பொதுவாய் கீரை என்றால் பிடிப்பது இல்லை. ஆனால் இந்த கீரைகளை கொஞ்சம் பருப்பு எல்லாம் போட்டு கடைந்து எடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள். இந்த கீரை வகையில் தண்டங்கீரையும் அடங்கும். ஆனால் அம்மா தண்டங்க்கீரை அவ்வளவாய் நல்ல கீரை இல்லை என்பார்கள். அதனால் வளர்ப்பது இல்லை.

     அரைக்கீரையில் சில நேரம் பூச்சி வந்து இலையை அரித்து விடும். நான் பொதுவாக சாம்பலை செடிகளுக்கு மேலே தூவி விடுவேன் (விறகு எரித்து வரும் சாம்பல்). ஓரளவுக்கு கட்டுபாட்டில் வரும்.    
 

 



பொன்னாங்கண்ணி கீரை
 நிறைய சத்துள்ள ஒரு கீரையாக பொன்னாங்கண்ணி கீரையை சொல்லலாம். கண் பார்வைக்கு ரொம்ப நல்ல கீரை. இங்கே கோவையில் வேறு ஒரு கீரையை தான் பொன்னாங்கண்ணி கீரை என்கிறார்கள். பச்சையும், முழு பிங்க் நிறத்திலும் இந்த கீரை வரும். செடியில் இருந்து பறித்த கீரையில் இருந்து ஒரு குச்சியை வைத்தால் வளர்ந்து விடும். வேண்டும் போது தேவையான அளவு வெட்டி எடுத்துக் கொள்ளலாம். பிறகு தளிர் விட்டு வளர்ந்து விடும்.
     பொன்னாங்கண்ணி கீரையில் பூச்சி அரிப்பு வந்து இலையில் சின்ன சின்னதாய் ஓட்டை விழும். தண்ணீர் விடும் போது வேகமாக நீரை செடி மீது பீச்சி அடிப்பதன் மூலம் அந்த பிரச்சினை கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. 
 


பருப்புக் கீரை
கோவை வந்து தான் இந்த கீரை பற்றி கேள்விப்பட்டேன். இங்கே விவசாய கல்லூரியில் விதை கிடைத்தது. பருப்பு போட்டு கடைந்து கூட்டு வைத்தால் செம ருசியாக இருக்கிறது. போன வருடம் கத்தரியில் ஊடு பயிராக போட்டிருந்தேன்.
 


முருங்கை கீரை
 ஊரில் எல்லாம் இது ஒரு முக்கியமான கீரை. வாரம் ஒரு தடவையாவது முருங்கை கஞ்சி வைப்பார்கள். அவ்ளோ ருசியா இருக்கும். கூட்டும் வைக்கலாம். இங்கே கோவையில், ஒரு பெரிய மரம் இருந்தது. அது முறிந்து விழுந்த பிறகு, தோண்டி எடுத்து விட்டு மாதுளை வைத்து விட்டேன். இருந்தாலும் அந்த மரம் வேரில் இருந்து தளிர்த்து வளர்த்து கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகிவிட்டது. வெட்ட வெட்ட இன்னமும் தளிர்த்து கொண்டே இருக்கிறது. நாங்களும் கீரைக்காக வளர்த்து பிறகு வெட்டி விட்டுவோம். இந்த மரத்தால் எங்கள் வீட்டில் முருங்கை கீரைக்கு பிரச்சனை இல்லை. 



புதினா
புதினா கீரை ஒரு சிறந்த மூலிகை செடி. வீட்டில் புதினா சட்னி, துவையல் நிறைய செய்வதுண்டு. கடையில் புதினா வாங்கும் போது தூர எறியும் குச்சிகளை நட்டு வைத்தால் போதும், ஒரு வாரத்தில் தளிர் விட ஆரம்பித்து விடும். வளர்ந்தவுடன் தேவையான அளவு வெட்டி எடுத்து கொள்ளலாம். பிறகு தளிர்த்து விடும். தொட்டிகளில் வளர்க்க ஏற்ற கீரை புதினா. 



கொத்தமல்லி
புதினா மாதிரி மல்லியும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. கொத்தமல்லியை நாம் கீரையாக அவ்வளவு பயன்படுத்துவது கிடையாது. கொத்தமல்லியில் சட்னி, சாதம் செய்யலாம். கிச்சனில் இருக்கும் முழு மல்லியில் இருந்து கொஞ்சமாய் எடுத்து தூவி விட்டால் போதும். வளர்ந்து  விடும். நன்றாக வளர்ந்ததும் பிடுங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். பூப்பதற்கு முன் பறிப்பது நல்லது.  
இதை தவிர, அகத்திக் கீரை, புளிச்சக் கீரை, பாலக்கீரை, வல்லாரை, வெந்தயக்கீரை என்று இன்னும் நிறைய கீரைகள் உண்டு. இதில் பாலக்கீரை இங்கே தோட்டத்தில் போன வருடம் சரியாக வரவில்லை. நிறைய பூச்சி வந்து சாப்பிட்டுவிட்டு போய் விட்டது. மீண்டும் முயற்சித்து பார்க்க வேண்டும். மற்ற கீரைகளும் அடுத்த முறை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

Friday, January 18, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – கேரட்



கோஸ், காலி ஃப்ளவர் வரிசையில் இப்போது கேரட். இங்கே கோவையில் சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் இரண்டாவது மாடியில் தோட்டம் அமைத்திருக்கிறார். என்னை போலவே வீட்டுத் தோட்டம் அமைப்பதில் அவர்களுக்கு ரொம்ப விருப்பம் உண்டு. அங்கே ஒரு தடவை கேரட் நிறைய விளைந்திருந்தது. கேரட் என்றாலே ஊட்டி மாதிரி மலை பிரதேசங்களில் மட்டும் வரும் என்று நினைத்த எனக்கு இங்கேயே அதுவும் இரண்டாவது மாடி வெயிலிலே வந்திருப்பதை பார்த்து ரொம்ப ஆச்சரியம். பிடுங்கி சாப்பிட்டு பார்த்தபோது நன்றாக இருந்தது. 

செடியை பற்றி விசாரித்த போது கேரட்டுக்கும் விதைகள் கிடைக்கும் என்று தெரிந்தது. போன ஜுனில் இங்கே அக்ரி இன்டெக்ஸ் போன போது கேரட் விதைகள் கிடைத்தது. விதைகள் சீரகம் போல இருக்கிறது. கேரட் செடியை அப்படியே விட்டு விட்டால் பூக்குமாம் (சில வருடங்கள் எடுக்கும் போல). அதில் இருந்து தான் விதை எடுக்கிறார்கள்.



மலைபிரதேச செடி என்பதால் கொஞ்சம் உயரமான படுக்கை போல ஒரு பாத்தி எடுத்துக்கொண்டேன் (செங்கலை செங்குத்தாக வைத்து அமைக்கலாம்). இதனால் நீர் தேங்கி நிற்பதை தவிர்க்கலாம். ரொம்ப வெயிலை தவிர்க்க கொஞ்சம் வெயிலும் நிழலுமான இடம் இருப்பதும் நல்லது. லேசாக கிளறி விதைகளை தூவி விட்டேன். ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பித்து விட்டது. 

முதலில் செடி அவ்வளவாக நன்றாக வரவில்லை. கொஞ்சம் சுருண்டு கொண்டு வளர்ச்சி சரி இல்லாதது போல தெரிந்தது. பிறகு எதிர்பார்த்ததை விட செழுமையாக வளர ஆரம்பித்து விட்டது. செடி எந்த வித நோய் தாக்குதலும் இல்லாமல் வந்தது ரொம்ப ஆச்சரியம். 

கிழங்கு வகைகள் வளர்ப்பதில் ஒரு பிரச்னை மண்ணுக்குள் என்ன நடக்கிறது என்று ஒன்றும் தெரியாது. கிழங்கு வைக்கிறதா இல்லையா, ஏதும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்கிறதா இல்லையா என்று சில செடிகளை அவ்வப்போது கிளறி தெரிந்து கொள்ளலாம். 

டிசம்பரில் அறுவடை செய்தபோது எதிர்பார்த்ததை விட நல்ல விளைச்சல். கேரட்டும் நல்ல திரட்சியாக வந்திருந்தது. கொஞ்சம் தான் அறுவடை செய்திருக்கிறேன். இன்னும் நிறைய செடிகள் பறிக்காமல் நிற்கிறது. நிறைய செடிகள் ரொம்ப நெருக்கமாக போய் விட்டது. நாற்று எடுத்து சரியான இடைவெளி விட்டு நட்டிருக்கலாம். மண்ணை நிறைய மணல், இலை கழிவுகள் கொண்டு இன்னும் கொஞ்சம் தளர்வாக தயார் செய்திருக்கலாம்.

கேரட் அறுவடை செய்ய கிட்டத்தட்ட ஆறு மாதம் பிடிக்கிறது. தக்காளி, வெண்டை மாதிரி வீட்டு உபயோகத்திற்கு என்று பயிருட்டு விளைச்சல் எடுப்பது கடினம் தான். ஆனால் ஆசைக்காக ஒரு ஓரமாக கொஞ்சமாக போட்டு வைக்கலாம்.













Sunday, December 30, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – சீத்தா


 சீத்தாப்பழம் (Custard Apple), அவ்வளவாக கண்டுகொள்ளப் படாத  ஒரு பழம். விதைகள் நிறைய இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ருசியிலும், அதில் அடங்கி இருக்கும் சத்துக்களிலும் மற்ற பழங்களை விட குறைந்தது இல்லை.  ஊரில் எல்லோர் வீட்டிலும், தோட்டங்களிலும் இருக்கும். இதன் பூவையும் பறித்து சாப்பிட்டுக் கொண்டு திரிவோம்.

இதுவும் எங்க ஊர் சந்தையில் இருந்து வாங்கி வந்த செடி தான். வைத்து ஒரு வருடத்தில் காய்க்க தொடங்கி விட்டது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் காய்க்கிறது. இந்த தடவை ஒரு 25 – 30 காய் கிடைத்தது. 

சீத்தா எளிதாக வளரும் ஒரு மரம். நோய் ஏதும் தாக்காது. குறைந்த நீர் இருந்தாலும் நன்றாக வரும். தனி கவனம் எடுத்து ஏதும் கவனிக்க வேண்டியதில்லை. எல்லா மரத்திற்கும் உரம் வைக்கும் போது இதற்கும் கொஞ்சம் வைத்து விட்டால் போதும்.  

நன்றாக பழுத்த பழத்தின் ருசியே தனி தான். ஆனால் ரொம்ப கனிந்து விட்டால் சிதைந்து விடும் அளவுக்கு அதன் தோல் மென்மையாகி விடும். அதனால் தான் கடைகளில் கிடைக்கும் பழங்கள் காயாகவே பறித்து விற்பனைக்கு வருகிறது. அவைகள் பழுக்கும் போது அவ்வளவு ருசி இருப்பதில்லை. இங்கே வீட்டு செடியில் நன்றாக பழுக்கும் வரை விட்டு பறிப்போம். நன்றாக பழுத்து விட்டால் பழம் தானாகவே கீழே விழுந்து சிதைந்து விடும். நன்றாக பழுக்கும் திரட்சி வந்ததும், ஒரு துணியை வைத்து கிளையோடு கட்டி விட்டால் இதை தவிர்க்கலாம்.

எங்கள் வீட்டில் இருக்கும் பழ மரங்களில் ரொம்ப பிடித்த பழம் இது தான். இந்த தடவை ஊருக்கு பொங்கலுக்கு ஊருக்கு போகும் போது இன்னும் ஒரு செடி கொண்டு வந்து வைக்கலாம் என்று இருக்கிறேன்.









 

Tuesday, December 4, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – வெங்காயம்


வெங்காயம் விலை எகிறிப்  போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில் (போன வாரம் சின்ன வெங்காயம் கிலோ ஐம்பது, அறுபது ரூபாய் இருந்தது) தோட்டத்தில் இருந்து இந்த வாரம் வெங்காயம் பற்றிய பதிவு. 

வெங்காயம் என்பது நம் சமையலில் ஒரு முக்கியமான காய்கறி. வெங்காயம் போடாமல் ஏதாவது சமைப்பார்களா என்பது சந்தேகமே. 

சின்ன வயதில் சமையல் அறையில் ஏதாவது வெங்காயம் முளைத்து கிடந்தால் எடுத்து வந்து நட்டு வளர்ப்போம். இங்கே வெங்காயத்திற்கு TNAU-ல் விதைகள் கிடைப்பதை பார்த்து ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது. பிறகு Google பண்ணி பார்த்த போது, வெங்காயச் செடி நன்றாக வளர்ந்ததும் பூ பூக்கும் என்றும், அந்த பூ முற்றியதும் அதில் இருந்து விதை எடுக்கலாம் என்றும் விவரங்கள் கிடைத்தது.

சரி நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்று ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து நட்டேன். நன்றாக வளர்ந்ததும் ஒவ்வொரு இலை நுனியிலும் வெள்ளையாய் ஒரு மொட்டு வந்து, பூத்தது. பூ நன்றாக பெரிதானதும் உள்ளே சின்னதாய் கருப்பாய் (எள் மாதிரி) விதைகள் கிடைத்தது. 





அந்த விதைகளையே ஒரு சோதனை முயற்சியாக ஒரு சிறிய இடத்தில் விதைத்தேன். ஒரு வாரத்தில் முளைத்து விட்டது. எதிர்பார்த்ததை விட வெங்காயம் பெரிதாகவே வந்திருக்கிறது. 









சின்ன வெங்காயம் விதை TNAU-ல் வாங்கியது. மண்ணை லேசாக கிளறி விட்டு தூற்றி விட்டேன். புல் மாதிரி தான் வளர்ந்து கிடந்தது. செடி முற்றி லேசாக பழுப்பு நிறம் கொடுத்து வாட துவங்கும் போது அறுவடை செய்தேன். நன்றாக திரட்சியான சின்ன வெங்காயம், செடிக்கு ஒன்றாய் காய்த்திருந்தது. சின்ன வெங்காயத்தை வாங்கி நாம் அப்படியே விதைத்தும் நடவு செய்யலாம். 

அடுத்த முறை இன்னும் கொஞ்சம் பெரிய இடத்தில் மற்ற காய்கறிகள் போலவே பயிரிடலாம் என்றிருக்கிறேன். வெண்டை மாதிரி செடிகளுக்கு இடையே ஊடுபயிராக நடலாம்.