Tuesday, December 4, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – வெங்காயம்


வெங்காயம் விலை எகிறிப்  போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில் (போன வாரம் சின்ன வெங்காயம் கிலோ ஐம்பது, அறுபது ரூபாய் இருந்தது) தோட்டத்தில் இருந்து இந்த வாரம் வெங்காயம் பற்றிய பதிவு. 

வெங்காயம் என்பது நம் சமையலில் ஒரு முக்கியமான காய்கறி. வெங்காயம் போடாமல் ஏதாவது சமைப்பார்களா என்பது சந்தேகமே. 

சின்ன வயதில் சமையல் அறையில் ஏதாவது வெங்காயம் முளைத்து கிடந்தால் எடுத்து வந்து நட்டு வளர்ப்போம். இங்கே வெங்காயத்திற்கு TNAU-ல் விதைகள் கிடைப்பதை பார்த்து ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது. பிறகு Google பண்ணி பார்த்த போது, வெங்காயச் செடி நன்றாக வளர்ந்ததும் பூ பூக்கும் என்றும், அந்த பூ முற்றியதும் அதில் இருந்து விதை எடுக்கலாம் என்றும் விவரங்கள் கிடைத்தது.

சரி நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்று ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து நட்டேன். நன்றாக வளர்ந்ததும் ஒவ்வொரு இலை நுனியிலும் வெள்ளையாய் ஒரு மொட்டு வந்து, பூத்தது. பூ நன்றாக பெரிதானதும் உள்ளே சின்னதாய் கருப்பாய் (எள் மாதிரி) விதைகள் கிடைத்தது. 





அந்த விதைகளையே ஒரு சோதனை முயற்சியாக ஒரு சிறிய இடத்தில் விதைத்தேன். ஒரு வாரத்தில் முளைத்து விட்டது. எதிர்பார்த்ததை விட வெங்காயம் பெரிதாகவே வந்திருக்கிறது. 









சின்ன வெங்காயம் விதை TNAU-ல் வாங்கியது. மண்ணை லேசாக கிளறி விட்டு தூற்றி விட்டேன். புல் மாதிரி தான் வளர்ந்து கிடந்தது. செடி முற்றி லேசாக பழுப்பு நிறம் கொடுத்து வாட துவங்கும் போது அறுவடை செய்தேன். நன்றாக திரட்சியான சின்ன வெங்காயம், செடிக்கு ஒன்றாய் காய்த்திருந்தது. சின்ன வெங்காயத்தை வாங்கி நாம் அப்படியே விதைத்தும் நடவு செய்யலாம். 

அடுத்த முறை இன்னும் கொஞ்சம் பெரிய இடத்தில் மற்ற காய்கறிகள் போலவே பயிரிடலாம் என்றிருக்கிறேன். வெண்டை மாதிரி செடிகளுக்கு இடையே ஊடுபயிராக நடலாம். 







21 comments:

  1. படங்களுடன் பதிவு
    வீட்டுத் தோட்ட ஆர்வத்தைத் தூண்டிப்போகிறது
    பயனுள்ள பதிவுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்க. நன்றி.

      Delete
  2. நல்லது. நானும் முளைச்சுக்கிடக்கும் வெங்காயத்தை நட்டு வச்சுருவேன். ஒரு முறை படப்புதிரில் வெங்காயப்பூவைப்போட்டு என்னன்னு கேட்டுருந்தேன்:-)


    வெங்காயத்தாளை (இலைகளை) இளசா இருக்கும்போது எடுத்துச் சமையலில் சேர்க்கலாம். ஸ்ப்ரிங் ஆனியன்ஸ்ன்னு சொல்வாங்க.

    நிறைய கிடைச்சால் வெங்காயவடகம் போடவும் செய்யலாம்.

    சுலபமா முளைக்கும் வகைத் தாவரம் என்பதால் வேலையும் கம்மி.

    முக்கியமா ரோஜாச்செடிகளுக்கடியில் வெங்காயம் ஒன்னு நட்டால் ரோஜாவை பூச்சிகள் அண்டாது. ( அதுக்குக்கூடத் தெரியுது பாருங்க!!!!)

    ReplyDelete
    Replies
    1. //ஒரு முறை படப்புதிரில் வெங்காயப்பூவைப்போட்டு என்னன்னு கேட்டுருந்தேன்// இதை நானும் என்னுடைய அலுவலகத்தில் செய்தேன் :-). யாருக்கும் தெரியலை.

      //முக்கியமா ரோஜாச்செடிகளுக்கடியில் வெங்காயம் ஒன்னு நட்டால் ரோஜாவை பூச்சிகள் அண்டாது// இது நல்ல ஐடியாவா இருக்கே.. மற்ற செடிகளுக்கும் பொருந்தும் தானே :-)

      Delete
  3. நாங்களும் சிறுவயதில் முளைத்த வெங்காயம் ஒன்றையும் விடுவதில்லை நாட்டி விடுவோம்.

    படத்தை போட்டு ஆசையைக் கிளப்பறீங்கள்.

    இங்கு வெங்காயத் தோலிகளை பூச்சட்டியில் பசளைக்காக போடுவேன் அதில் ஓரீரண்டு முளைத்து வரும் அதை பார்த்து மகிழ்வேன் :))

    ReplyDelete
    Replies
    1. //இங்கு வெங்காயத் தோலிகளை பூச்சட்டியில் பசளைக்காக போடுவேன் அதில் ஓரீரண்டு முளைத்து வரும் அதை பார்த்து மகிழ்வேன்// ஆமாம். நாம குப்பைன்னு அள்ளி போடற வெங்காயம் கூட சில நேரம் முளைத்து விடும்.

      //படத்தை போட்டு ஆசையைக் கிளப்பறீங்கள்// நான் படம் போடுவதே அதுக்காக தான் :-௦). இதை பார்த்தா சில பேருக்கு வீட்டுத் தோட்டம் மேல் ஆசை வரும் இல்லையா..

      Delete
  4. I live in flat and I find your article interesting. can U brief what is the cycle time for this onion? i,e after how many days manure to be placed, when to harvest, where to get seeds in chennai?

    (Sorry for not writing in Tamil.)

    Regards

    Aarveeyar

    ReplyDelete
    Replies
    1. Hi Aarveeyar, the usual onion takes around 3 months when we plant from onion. From seed, it is almost taking 5 months to harvest.

      You can check any nursery garden in Chennai. I found few in Chennai having many seed. You can check there. Otherwise, you can go with the onion itself

      Delete
  5. சிவா சார், வெங்காயம் சூப்பரா இருக்கு! முளை வந்த பெரிய வெங்காயம் ஒன்றை தொட்டியில் நட்டு வைச்சிருக்கேன், தழையுதா என்று பார்க்க! :)

    நீங்க நம்ம பக்கத்து ஊர்தான் என்று தெரிந்ததில் மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். பெரிய வெங்காயமா, வெரி குட். வெயிட் பண்ணி பாருங்க, பூக்கும். ரொம்ப திரட்சியா செடி வரலன்னா காத்திருக்காதீங்க. வெங்காயம் அறுவடை பண்ணிருங்க :-)

      Delete
  6. வழக்கம் போல நல்ல பதிவு. நன்றி

    ReplyDelete
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  8. தங்கள் தோட்ட வெங்காய படங்கள் , என் இளமைகாலத்துக்கு இட்டுச் சென்றது.
    ஈழத்தில் யாழ் குடாநாடு வெங்காயச் செய்கையிலும் முழு இலங்கைக்கும் வெங்காய வளங்குதலிலும் ,அதனால் வளமான வருவாயும் ஒருகாலத்தில் ஈட்டியது.இப்போ எல்லாம்
    தலைகீழாகிவிட்டது. ஈழத்தில் சின்னவெங்காயமே விரும்பிச் சமைப்பர். பெரிய வெங்காயம்
    விளைவிப்பதில்லை;(இப்போ விளைவிக்கிறார்களோ தெரியாது) இந்தியாவிலிருந்து இறக்குமதியானது அதனால் பம்பாய் வெங்காயம் என அழைக்கப்பட்டது. இதை சிங்களமக்களே அதிகம்
    சமைப்பர். குறிப்பாக சீனிச் சம்பல் என மாசிக் கருவாடு சேர்த்து, செய்வார்கள்; பாணுக்கு(ரொட்டி) தொட்டுக் கொள்ள அருமையான உணவு. குளிர்பதனப்பெட்டி இல்லாக் காலத்தில் 4- 5 நாட்களுக்குப் பழுதாகாது;
    இங்கு வந்தபின் வெங்காயத்தில் பல வகை பார்த்தேன்; மஞ்சள்,வெள்ளை,சிவப்பு மற்றும் சின்ன வெங்காயம்- விலை மிக அதிகம் கிலோ 4 யூரோ.சில வகை பிரஞ்சுச் சமையலுக்குக் கட்டாயம் சேர்ப்பார்கள். இதில் மஞ்சள் பொதுவானது சகல சமையலுக்கும் சேர்ப்பர் விலை மிக மலிவு கிலோ 30 சதம், வெள்ளை சிலவகை சமையலுக்கே, தாளுடன் கிடைப்பதால் நாம் இதை வறுப்போம், பிரஞ்சியர்கள் வினாகிரியில் ஊறவைத்து அச்சாறும் செய்வார்கள், கிலோ 2 யூரோ; சிவப் பொதுவாக பச்சையாக உண்ணும் சலாட் வகைகளுக்குச் சேர்ப்பர் கிலோ 2 யூரோ.
    இந்த சிவப்பு, வெள்ளை இதுவரையில் இலங்கை, இந்தியாவில் பயிரிடுவதாகத் தெரியவில்லை.

    அத்துடன் வெங்காயமென்றதும், பெரியார் ஞாபகத்தில் வருவார்; அவர் சமையலில் வெங்காயம் எவ்வளவு சேர்த்தாரோ தெரியவில்லை. ஆனால் பேச்சிலும், எழுத்திலும் வெங்காயத்தை வறுத்தெடுத்துள்ளார்.




    ReplyDelete
  9. நன்றி யோகன். விரிவான உங்கள் பகிர்தலுக்கு. பெரியார் தான் வெங்காயத்தின் கொள்கை பரப்பு செயலாளர் என்று நினைக்கிறேன் :-) :-)

    ஆமாம். நானும் வெள்ளை வெங்காயம் எல்லாம் பார்த்திருக்கிறேன். நான்கு யூரோ என்பது ரொம்ப அதிகமாக தெரிகிறது. ம்ம்ம்ம்..

    கிராமத்திலும் தொடக்கத்தில் சின்ன வெங்காயம் மட்டும் தான் புழக்கத்தில் இருந்தது. பெரிய வெங்காயத்தை பெல்லாரி என்பார்கள்.

    ReplyDelete
  10. இங்கே சின்ன வெங்காயம் ஷலாட் என்ற பெயரில் கிடைக்குது விலை 13 டாலர் கிலோ! இந்தியா போல இல்லாமல் கொஞ்சம் பெரிய சைஸ்!

    போனவாரம் இந்தியக்கடையொன்றில் ஃப்ரீஸர் செக்‌ஷனில் சின்ன வெங்காயம் பாக்கெட் ஒன்று கிடைச்சது. 3 டாலர். வெளியில் படம் பார்க்கவே ஜோரா இருக்கு. உள்ளே?

    இன்னும் பிரிச்சுப் பார்க்கலை. நளைக்கு வெங்காய சாம்பார்:-))))

    ReplyDelete
    Replies
    1. வெங்காய சாம்பாரா.. நைஸ் :-) . பாக்கெட்ட பிரிச்சி பார்த்து சாம்பார் எப்படின்னு சொல்லுங்க :-) :-)

      ஆமாம்..ஷலாட்..நானும் அமெரிக்காவுல இருக்கும் போது வாங்கி இருக்கிறேன்.

      Delete
  11. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
    எனதுபுதிய வலைத்தளத்தின் ஊடாக கருத்து இடுகிறேன்
    முகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_5109.html?showComment=1386811096290#c6470624461389458648

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி ரூபன். :-)

      Delete
  12. நன்றி மணிவண்ணன்.

    ReplyDelete