Monday, November 19, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – சுண்டைக்காய்


முன்பெல்லாம்  “உணவே மருந்து. மருந்தே உணவு’ என்ற நிலை தான் இருந்தது. ஊரில் எல்லாம் வாரா வாரம் ஞாயிறு சாயங்காலம் பார்த்தால் எல்லோர் வீட்டிலும்  வேப்பிலை, இஞ்சி என்று ஏதாவது உரலில் போட்டு இடித்து, நாம எங்கே விளையாண்டு கொண்டிருந்தாலும் பிடித்து ஒரு தம்ளர் குடித்தால் தான் விடுவார்கள். கண்டங்கத்தரி, தூதுவளை என்று நிறைய செடிகள் எல்லோர் வீட்டிலும் நிற்கும். காய்ச்சல், தலைவலி, சளி என்று எல்லாவற்றும் மருந்து செடி கொடிகளில் இருந்தே வைத்திருப்பார்கள்.

அப்படி ஒரு செடி தான் சுண்டைக்காய். இது கத்தரி, கண்டங்கத்தரி செடி இனம். இலையும் செடியும் ஓன்று போல தான் இருக்கும். இதன் காய் சிறுகசப்பு சுவை உடையது. நாம் பொதுவாக வத்தக் குழம்புகளில் பார்க்கலாம். இது பொதுவாக எல்லா கடைகளில் கிடைப்பது இல்லை.ஆனால் வீட்டில் வளர்ப்பது ரொம்ப எளிது. 

இது செடி என்றாலும் சிறிய மரம் என்று சொல்லும் அளவுக்கு பெரிதாக வளரும். அதனால் நடும் போதே நிறைய இடம் இருக்குமாறு பார்த்து நட வேண்டும். ரொம்ப கவனிப்பு ஏதும் தேவை இல்லை. தண்ணீர் மட்டும் பாய்த்தால் போதும். நோய் தாக்குதல் ஏதும் இருப்பதில்லை. 

ஒவ்வொரு இலைக்கும் இடையில் கொத்தாய் பூக்கள் பூக்கும். ஒரு கொத்தில் 50  காய்கள் வரை வரும். இதனால் ஒரு செடியிலேயே எக்கச்சக்கமாய் காய் பறிக்கலாம். எங்கள் தேவைக்கு போக நிறைய அக்கம் பக்கம் இருப்பர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு ஒரு செடியே நிறைய காய்க்கிறது. 

நாங்கள் இதை வைத்து கார குழம்பு செய்வதுண்டு. மோரில் ஊற வைத்து வத்தலும் போடலாம். ஊரில் எல்லாம் சுண்ட வத்தல், முறுக்கு வத்தல் எல்லாம் சாப்பாட்டில் தவறாமல் இருக்கும்.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்;  வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காய் செடியில் கொத்துக்கொத்தாய் சிறிய காய்கள் பார்க்க ரொம்ப அழகு. இங்கே தோட்டத்தில் படம் எடுக்க எனக்கு ரொம்ப பிடித்த ஒரு செடி. என் தோட்டத்தில் இருந்து சில படங்கள்,













சுண்டைக்காயை  வைத்து நிறைய பேச்சு வழக்கு உண்டு. 'சுண்டக்கா பய" "சுண்டக்கா சைஸ்ல இருந்துக்கிட்டு ஏன்னா வரத்து வரான்" என்று, சிறிய என்று பொருளில் பேச்சு வழக்கு உண்டு. சரி, சுண்டைக்காயை கொஞ்சம் close-up வைத்து பெரிசா எடுத்தா எப்படி இருக்கும் என்று நினைத்து எடுத்த இரண்டு படங்கள் கீழே.




14 comments:

  1. ஆஹா... என்ன அழகு...!

    நாங்கள் வளர்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் அவர்களே. கண்டிப்பாக வளர்க்கலாம். வருட கணக்கில் காய் கொடுக்கும்.

      Delete
  2. அடடடா...... அருமை!!!

    பச்சைச் சுண்டைக்காயைப் பருப்பு போட்டு கூட்டு செஞ்சு பாருங்க. கசப்புக்கு லேசா புளி விட்டால் போதும். சூப்பரா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி டீச்சர். நாங்க இது வரை கூட்டு வச்சி பார்த்ததில்லை. நீங்க சொல்றத பார்த்தா சூப்பரா தான் இருக்கும் போல. கண்டிப்பா வீட்டில் சொல்லிடறேன்.

      Delete
  3. நல்ல மகசூல் போலிருக்கு. சுண்டைக்காய் வத்தக்குழம்பின் ருசியே தனிதான்.

    ReplyDelete
    Replies
    1. :-) ஆமாம். நல்ல தான் காய்க்கிறது. :-)

      Delete
  4. சுண்டங்காய் காற்பணம் சுமைகூலி முக்காற்பணம் எனும் சொல்வழக்குமுண்டு. இதை சமைத்துச்சாப்பிட்டதில்லை. குளோசப் படங்கள் கட்டயம் போடவும்.
    இது பழுத்தால் நிறம் என்ன?
    உங்கள் நிலத்தின் அளவு என்ன? எல்லாம் வளக்கிறீர்களே! அதனால் கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இது பழுப்பதில்லை. அப்படியே முற்றி காய தொடங்கி விடும்.
      இடமா, காலி இடம் ஒரு 3 சென்ட் இருக்கும். அதில் தான் இவ்வளவும் வைத்திருக்கிறேன் :-)

      Delete
  5. ஆகா! கிராமத்து எங்கள் வீட்டை நினைவுக்குக் கொண்டுவருகின்றது.

    நீங்கள் கூறியதுபோல சுண்டங்காய் நிறையக் காய்க்கும் உறவினர்களுக்குக் கொடுப்போம். பொரித்த காரக் குழம்பு வைப்போம்.

    இப்பொழுது மால்களில் கண்டால் வாங்குவேன். பெரும்பாலும் முற்றிய காய்தான் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி. சுண்டைக்காய் முற்றினால் ரொம்ப கசக்கும் என்று நினைக்கிறேன். ஓரளவு பெரிதானவுடன் பறித்தால் ருசி நன்றாக இருக்கும்.

      Delete
  6. Valthukkal.. ippadi oru alagana veettuthottam amaithatharku..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா அவர்களே. :-)

      Delete
  7. can we have your email id?

    ReplyDelete