Friday, January 18, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – கேரட்



கோஸ், காலி ஃப்ளவர் வரிசையில் இப்போது கேரட். இங்கே கோவையில் சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் இரண்டாவது மாடியில் தோட்டம் அமைத்திருக்கிறார். என்னை போலவே வீட்டுத் தோட்டம் அமைப்பதில் அவர்களுக்கு ரொம்ப விருப்பம் உண்டு. அங்கே ஒரு தடவை கேரட் நிறைய விளைந்திருந்தது. கேரட் என்றாலே ஊட்டி மாதிரி மலை பிரதேசங்களில் மட்டும் வரும் என்று நினைத்த எனக்கு இங்கேயே அதுவும் இரண்டாவது மாடி வெயிலிலே வந்திருப்பதை பார்த்து ரொம்ப ஆச்சரியம். பிடுங்கி சாப்பிட்டு பார்த்தபோது நன்றாக இருந்தது. 

செடியை பற்றி விசாரித்த போது கேரட்டுக்கும் விதைகள் கிடைக்கும் என்று தெரிந்தது. போன ஜுனில் இங்கே அக்ரி இன்டெக்ஸ் போன போது கேரட் விதைகள் கிடைத்தது. விதைகள் சீரகம் போல இருக்கிறது. கேரட் செடியை அப்படியே விட்டு விட்டால் பூக்குமாம் (சில வருடங்கள் எடுக்கும் போல). அதில் இருந்து தான் விதை எடுக்கிறார்கள்.



மலைபிரதேச செடி என்பதால் கொஞ்சம் உயரமான படுக்கை போல ஒரு பாத்தி எடுத்துக்கொண்டேன் (செங்கலை செங்குத்தாக வைத்து அமைக்கலாம்). இதனால் நீர் தேங்கி நிற்பதை தவிர்க்கலாம். ரொம்ப வெயிலை தவிர்க்க கொஞ்சம் வெயிலும் நிழலுமான இடம் இருப்பதும் நல்லது. லேசாக கிளறி விதைகளை தூவி விட்டேன். ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பித்து விட்டது. 

முதலில் செடி அவ்வளவாக நன்றாக வரவில்லை. கொஞ்சம் சுருண்டு கொண்டு வளர்ச்சி சரி இல்லாதது போல தெரிந்தது. பிறகு எதிர்பார்த்ததை விட செழுமையாக வளர ஆரம்பித்து விட்டது. செடி எந்த வித நோய் தாக்குதலும் இல்லாமல் வந்தது ரொம்ப ஆச்சரியம். 

கிழங்கு வகைகள் வளர்ப்பதில் ஒரு பிரச்னை மண்ணுக்குள் என்ன நடக்கிறது என்று ஒன்றும் தெரியாது. கிழங்கு வைக்கிறதா இல்லையா, ஏதும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்கிறதா இல்லையா என்று சில செடிகளை அவ்வப்போது கிளறி தெரிந்து கொள்ளலாம். 

டிசம்பரில் அறுவடை செய்தபோது எதிர்பார்த்ததை விட நல்ல விளைச்சல். கேரட்டும் நல்ல திரட்சியாக வந்திருந்தது. கொஞ்சம் தான் அறுவடை செய்திருக்கிறேன். இன்னும் நிறைய செடிகள் பறிக்காமல் நிற்கிறது. நிறைய செடிகள் ரொம்ப நெருக்கமாக போய் விட்டது. நாற்று எடுத்து சரியான இடைவெளி விட்டு நட்டிருக்கலாம். மண்ணை நிறைய மணல், இலை கழிவுகள் கொண்டு இன்னும் கொஞ்சம் தளர்வாக தயார் செய்திருக்கலாம்.

கேரட் அறுவடை செய்ய கிட்டத்தட்ட ஆறு மாதம் பிடிக்கிறது. தக்காளி, வெண்டை மாதிரி வீட்டு உபயோகத்திற்கு என்று பயிருட்டு விளைச்சல் எடுப்பது கடினம் தான். ஆனால் ஆசைக்காக ஒரு ஓரமாக கொஞ்சமாக போட்டு வைக்கலாம்.













21 comments:

  1. அட, கேரட்டும் வெள்ளாமை எடுத்திட்டீங்களா? :)

    சின்ன விதையில் இருந்து கேரட் அறுவடை வரை புகைப்படங்கள். பொறுமையாக எடுத்து தொகுத்து குடுத்திருக்கீங்க. நான் இங்கு காய்கறி செடிகள் அதிகம் வளர்க்கலை. ஆசைக்கு சில சின்ன தொட்டிகளில பூக்கள் வளர்க்கிறேன். கேரட்-முள்ளங்கி எல்லாம் நல்லா வரும் என்று இங்கே நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கேன். டீடெய்லான பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மகி. சும்மா ஒரு முயற்சி தான். ஆனால் பெரிய அறுவடை எல்லாம் எடுக்க முடியாது. நிறைய மாதம் காத்திருக்க வேண்டும் :-)

      நீங்களும் காய்கறி இடம் இருந்தால் போட்டு விடலாமே?

      Delete
  2. படிக்க மிகவும் ஆர்வமூட்டும் பதிவு. வழக்கம் போல.

    ReplyDelete
  3. எங்கள் வீட்டு மாடியில் முயற்சிசெய்துபார்க்கவேண்டும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி. முயற்சி செய்து பாருங்கள். ரொம்ப வெயிலாய் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

      Delete
  4. கரட் நன்றாக விளைந்திருக்கின்றதே வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. hoi super carrot

    -thangaraj

    ReplyDelete
    Replies
    1. நான் அனுப்பின கேரட் விதைய போட்டியாடா :-) . படம் எடுத்து அனுப்பு..

      Delete
  6. கலக்கிவிட்டீர்கள்.
    நிலத்தை அரைப்பங்கு குருகு மணலால் தயார் செய்தால், கிழங்கு நீளமாகவும் திரட்டியாகவும் வரும்.
    கரட் இலையிலும் வறுவல் செய்யலாம். எறியவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி யோகன். ஆமாம். இன்னும் மணலை நன்றாக தயார் செய்ய வேண்டும்.

      அப்படியா.. கேரட் இலையை பயன் படுத்தலாமா? நாங்கள் ஒரு முறை பீட்ரூட் இலையை கீரை மாதிரி வைத்தோம். இதை பயன்படுத்தவில்லை. அடுத்த முறை பார்க்கலாம்.

      Delete
  7. அருமையான பதிவு. வல்லாரை கீரை எப்படி வளர்க்கலாம்னு தெரிந்தால் சொல்லுங்கள். உதவியாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இங்கே சொந்தகாரர் ஒருவர் வீட்டில் வல்லாரை கீரை செடி வைத்திருந்தார்கள். நானும் ஓன்று கேட்டிருக்கிறேன். விவரம் கிடைத்ததும் சொல்கிறேன்.

      Delete
  8. வணக்கம் சிவா, அருமையான பதிவு. வல்லாரை கீரை எப்படி வளர்கனும்னு தெரிந்தால் சொல்லுங்களேன். உதவியாய் இருக்கும். நான் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் இருக்கிறேன். இங்கே ஒரு நர்செர்யில் வல்லாரை செடி வாங்கினேன். பெரிய தொட்டியில் வளர்க முடியுமானு தெரியலை.

    ReplyDelete
  9. உங்களின் பொறுமைக்குப் பரிசுதான் இந்த கேரட் விளைச்சல்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கண்ணதாசன் அவர்களே.

      Delete
  10. கோவை மண் எல்லா செடிகளுக்கும் உகந்ததாக இருக்கும் போல்.கேரட்டும் நன்றாக வந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் குமார் .. கோவை க்ளைமேட் அப்படின்னு நினைக்கிறேன். கேரட், கோஸ், காலி ஃப்ளவர் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது.

      Delete
  11. அருமை.

    நான் கேரட், பீட்ரூட் சமைக்கும்போது அதன் தலைப்பக்கத்தை வட்டமாக அரிஞ்சு ஒரு சாஸரில் வச்சுக் கொஞ்சம் த்ண்ணீர் தெளிச்சுவிடுவேன். சில நாட்களில் முளைக்கத்தொடங்கும். சும்மா ஒரு ஃபேன்ஸிக்கு ஜன்னல் கட்டையில் வைப்பதுதான்.

    பூமியில் நட்டு வைப்பதில்லை. இங்கே ஒன்னரைக்கிலோ கேரட் 99 செண்டுக்குச் சீப்படுது. இதுலே நாம்வேற என்னத்துக்குன்னுதான்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி டீச்சர்.

      ஒ. இப்படியும் முளைக்கும? நல்லா இருக்கே.. ஆனால் கிழங்கு வைக்குமா என்ன?

      Delete