புதிய தலைமுறை இதழில் நான்
போன வாரம் புதிய தலைமுறை இதழில் ‘பசுமைப் பக்கங்கள்’ என்ற தலைப்பில்
எனது கட்டுரை வந்துள்ளது (அந்த கட்டுரையில் எனது பங்கு மிக குறைவு தான். தருமபுரி
வேளாண் உதவி இயக்குனர் திரு.மதுபாலன் அவர்களின் கட்டுரை என்று தான் சொல்லவேண்டும்). எனக்கு இந்த வாய்ப்பு அளித்த புதிய தலைமுறை குழுவுக்கும், சின்னதுரை
அவர்களுக்கும் எனது நன்றி.
அமைந்தால் எல்லாமும் நன்றாக மொத்தமாய் அமையும் போல. போன வாரம் விகடன்.
இந்த வாரம் புதிய தலைமுறை என்று எனக்கு ஒரு சிறிய அடையாளம் கிடைத்திருப்பது
குறித்து சந்தோசம்.நிச்சமாக இந்த இரண்டு கட்டுரைகளும் தோட்டம் சம்மந்தமாக சிலரை
அணுக எனக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
அக்ரி இன்டெக்ஸ் 2015
இந்த வருட அக்ரி இன்டெக்ஸ் நிறைவாக முடிந்தது. ஞாயிறு காலை
குடும்பத்தோடு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு கிளம்பி விட்டோம். போன வருடம் அளவுக்கு
அடிதடி எல்லாம் இல்லை. நல்ல கூட்டம் தான். ஆனாலும் ஸ்டால்களை எல்லாம் பொறுமையாக
பார்க்க முடிந்தது. ப்ளாக் நண்பர்கள் சிலரை சந்திக்க முடிந்தது. நண்பர் தாமஸ்
ரூபனை நேரில் சந்திக்க முடிந்தது. எனக்கான ஒரு பெரிய பை நிறைய அவர் தோட்டத்தில்
இருந்து அவரை, பீன்ஸ், மஞ்சள்,எலுமிச்சை என்று ஒரு பெரிய காய்கறி கூடையையே
விதைக்காக கொண்டு வந்திருந்தார். ரொம்ப சந்தோசமாய் இருந்தது.
அடுத்த அக்ரி இன்டெக்ஸ் போது முடிந்தால் நாம் ப்ளாக் நண்பர்கள்
எல்லாம் சந்தித்து மொத்தமாய் ஸ்டால் விசிட் செய்யலாம்.
இந்த வருட பர்சேஸ் என்று பார்த்தால் முக்கியமாய் ஒரு Battery Operated Power Sprayer வாங்க ரொம்ப நாள் ஒரு ஆசை இருந்தது. சின்னதாய் Hand Sprayer வைத்து பஞ்சகாவ்யா, வேப்பம்புண்ணாக்கு தெளிப்பதற்குள் போதும் என்றாகி
விடுகிறது. மரங்களுக்கு Hand
Sprayer வேலைக்காவதில்லை. கொஞ்சம்
செலவானாலும் ஒரு Power
Sprayer வாங்கலாம் என்று
நினைத்திருந்தேன். ஐந்தாறு கடைகளில் நிறைய brand இருந்தது.
விலை Rs.2300-ல் இருந்து Rs.4000
வரை வருகிறது. கிட்டதட்ட எல்லாமே சைனா இறக்குமதி பொருட்களை இங்கே
அசெம்பிள் செய்து அவர்கள் பிராண்ட் போட்டு விற்கிறார்கள். சிலர் மட்டும் ஆறுமாதம்
வாரண்டி என்றார்கள். நிறைய பேர் வாரண்டி எல்லாம் கிடையாது என்று தான்
விற்க்கிறார்கள். ஒன்றரை வருடம் பிரச்னை இல்லாமல் பேட்டரி வரும், அதன் பிறகு பேட்டரி
மற்ற வேண்டிய வருமாம். அதற்கு Rs.1000 – Rs.1500 ஆகலாம்.
கொஞ்சம் விலை அதிகம் தான். ஆனாலும் பயன்படும் என்று Rs.2800-ல் ஓன்று வாங்கி விட்டேன். பேட்டரி இல்லாமல் இதே வகையில் Manual Type Rs.700 – Rs.900 க்கு கிடைக்கிறது.
நான் வாங்கிய Sprayer-ல் குறிப்பிட்டு சொல்லும் வசதி என்று சொன்னால் Dual Mode Selection-ஐ சொல்லலாம். ஒரே வேகத்தில் ஸ்ப்ரே செய்ய ஒரு செலக்சன். இன்னொரு Mode-ல் நமக்கு தேவையான அளவுக்கு ஸ்ப்ரேயரில் வேகத்தை வைத்துக் கொள்ளலாம்.
இது சின்ன செடிகளுக்கு அடிக்கும் போது தேவை படும். நான்கு விதமான Sprayer knob வருகிறது. நம் தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாம். கொடி,
மரங்களுக்கு அடிக்கும் போது நாம் Sprayer-ன்
நீளத்தை அதிகப் படுத்தி உயரமான செடிகளுக்கும் அடிக்கலாம். பேட்டரி இருப்பதால் எடை
ரொம்பவே அதிகமாக இருக்கிறது. வெறும் இடையே பத்து கிலோ இருக்கும் போல. அதை நீரால்
நிரப்பிய பிறகு 15 கிலோ வந்து விடுகிறது. முதுகில் மாட்டிக்கொண்டு தெளிக்க கொஞ்சம்
கடினமாக இருக்கிறது.
| Sprayer knobs |
| Sprayer speed selection control |
இது தவிர DIP
Irrigation ஓன்று செட் பண்ணி
பார்க்கலாம் என்று ஒரு ஸ்டாலை பார்த்ததும் விசாரித்தேன். Ebay தளத்தில் 25 செடிகளுக்கு,
50 செடிகளுக்கு என்று செட்டாக கிடைக்கிறது. இவர்கள்
செடிகளின் எண்ணிக்கை சொல்லாமல் 50 Sq. Meter (Rs.450), 100 Sq. Meter (Rs.900) ஏரியா அளவுக்கு என்று தனி தனி செட்டாக வைத்திருந்தார்கள். நான் சும்மா முயற்சித்து பார்க்கலாம் என்று 50 Sq. Meter ஓன்று வங்கி வந்தேன். வந்து வீட்டில் பார்த்தால் உள்ளே பாதி
பொருட்கள் இல்லை. இவ்வளவுக்கும்
நான் அறிவாளி மாதிரி எடுக்கும் போது மேலே இருக்கும் டப்பாவ எடுக்காம அடியில்
இருந்த டப்பாவ எடுத்தேன். அப்படி இருந்தும் இப்படி ஆகி போச்சே என்று ஒரே யோசனை. இரண்டு நாள் கழித்து அந்த கம்பெனியில் இருந்து
அழைத்து வந்தது. தப்பு நடந்து போனதாகவும், அங்கே இருந்த அனைத்து டப்பாவும் அப்படி இருந்ததாகவும்,
புதிதாக ஒரு செட் அனுப்புவதாகவும் கூறினார்கள். வந்தால் விவரமாக எழுதுகிறேன்.
இன்னொரு கடையில் நர்சரி ட்ரே ரொம்ப விலை மலிவாக கிடைத்தது. ஒரு தட்டு Rs.15-க்கும் மொத்தமாய் நர்சரிகளுக்கு வாங்கினால் Rs.13-க்கும் தருவதாக கூறினார். நான் ஒரு பத்து தட்டுகள் வாங்கிக்
கொண்டேன். விதைகளில் கொஞ்சம் பெரிய வெங்காயம் விதைகள், செர்ரி தக்காளி ஒன்றும்
வாங்கினேன்.
TNAU ஸ்டாலில் இருந்து சின்ன வெங்காயம், செடி அவரை, கீரை விதைகள்
வாங்கினேன். விலையை பத்து ரூபாயில் இருந்து இருபது ரூபாய் ஆக்கி
விட்டிருந்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு தான் பஞ்சகாவ்யா வாங்க TNAU போய் இருந்த போது அங்கே உள்ள வெண்டிங் மிஷினில் பத்து ரூபாய் என்று
தான் வைத்திருந்தார்கள். மண்புழு உரம் ஆறு ரூபாயில் இருந்து பத்து ரூபாய் ஆக்கி
இருக்கிறார்கள். விதைகளை பத்தில் இருந்து இருபதாக்கி இருக்கிறாகள். பஞ்சகாவியா என்பதில்
இருந்து நூறு ஆக்கி இருக்கிறாகள். எல்லா இடத்திலும் தோட்டம்
பொருட்களின் விலையை கடந்த இரண்டு வருடமாகவே கன்னா பின்னாவென்று ஏற்றுகிறார்கள். அதை
பற்றி விவரமாய் பிறகு பேசலாம்.

