Thursday, July 3, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-1



நிறைய பேர் தோட்டம் பற்றி கேட்கும் போதெல்லாம் என்ன காய்கறி போட்டிருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். நான் ‘என்ன போடவில்லை என்று கேளுங்க என்பேன். இடம் இருக்குதோ, இல்லையோ, நம்ம இடத்துக்கு வருதோ இல்லையோ, முடிந்த அளவுக்கு எல்லா காய்கறிகளையும் வைக்க முயற்சிப்பது, அதில் ஓன்று இரண்டு சொதப்பினாலும் ஓரளவுக்கு வெற்றி பெறுவது என்று தான் ஒவ்வொரு சீசனும் போவதுண்டு.
    
நான் பொதுவாய் வருடத்தில் இரண்டு சீசன் வைத்து நடுவது உண்டு. ஓன்று ஜுனில் ஆரம்பித்து அக்டோபர் வரை போகும் (சில செடிகள் அதையும் தாண்டி டிசம்பர் வரை போவதுண்டு). பிறகு நவம்பரில் ஆரம்பித்து ஏப்ரல் வரை போகும். இதில் ஜூன் தான் முக்கிய சீசனாக இருக்கும். கோடை முடிந்து வெயில் கொஞ்சமாய் குறைந்து செடி வளர ஏற்றதாய் இருக்கும். மழையை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. எங்கே பெய்கிறது :-(. அப்படி பெய்தால் செடிகளுக்கு நல்லது தான். மே மாதம் தொடக்கத்தில் விதைத்து விட்டால், ஜூன் தொடக்கத்தில் நாற்று எல்லாம் நட தயாராய் இருக்கும். நட்டி விட்டால் ஜூலை தொடக்கத்தில் இருந்து நமக்கு காய்கள் கிடைக்க ஆரம்பிக்கும். ஒரு நான்கு மாதம் காய்கறி கடைக்கு போக தேவை இல்லை :-)
 
கடந்த மூன்று ஆண்டுகளாக தோட்டம் போட்டாலும், இந்த ஜூன் சீசனை கொஞ்சம் விரிவாக, திட்டமிட்டு முயற்சிக்க முடிவு செய்து ஆரம்பித்தேன். நண்பர்கள் நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் ஒரு முக்கிய காரணம், இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்று ஒரு ஆர்வத்தை கொண்டு வந்திருக்கிறது.

முடிந்த அளவுக்கு எல்லா காய்கறிகளையும் இந்த சீசனில் கொண்டு வந்துவிடும் ஒரு முடிவோடு ஆரம்பித்தேன். Coir Pith Based Terrace Garden ஆரம்பித்த பிறகு இடப்பிரச்சனை கொஞ்சம் குறைந்திருக்கிறது. சில காய்கறிகளை மாடிக்கு ஷிப்ட் செய்ததால் நினைத்த அளவுக்கு இடம் எடுக்க முடிந்தது.

முதலில் இந்த சீசனின் பட்டியலை பார்க்கலாம்,

முக்கிய அடிப்படை காய்கறிகள் – தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டைக்காய், அவரை, சீனி அவரை (கொத்தவரை)

கொடிகள் – புடலை (குட்டை மற்றும் நீண்ட நாட்டு வகை), பாகல் (ரெகுலர் மற்றும் மிதி பாகல்), பீர்க்கங்காய், சுரைக்காய், வெள்ளரி

இங்க்லீஷ்/கிழங்கு வரை காய்கறிகள் – கோஸ், காலி ஃப்ளவர், Broccoli, கேரட், பீட்ரூட், குடை மிளகாய், பீன்ஸ்

கீரை வகைகள் – அரை கீரை, சிறு கீரை, பாலக் கீரை, பருப்புக் கீரை, புளிச்சக் கீரை (gongura), வெந்தயக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, கொத்தமல்லி, புதினா  

இதர வகைகள் – தட்டை பயறு, Sweet Corn, இஞ்ஜி   

இடம் திட்டமிடல் - எந்த இடத்தில எந்த செடியை வைக்கலாம் என்று. பட்டியல் தயாரானதும் ஒரு பேப்பரில் தோட்டத்தில் இருக்கும் இடத்தை சின்னதாய் ஒரு மேப் போட்டு காய்கறியை ஒவ்வொரு பகுதிக்கும் குறித்து, நம் பட்டியல் அதில் அடங்குகிறதா என்று பார்க்கலாம். அடங்கவில்லை என்றால், போன பதிவில் சொன்ன மாதிரி ஆக்கிரமிப்பு தான். அப்படியே ஒரு எட்டு வீட்ட சுத்தி வந்தீங்கன்னா,  எப்படியும் தேவையான இடத்தை தேற்றி விடலாம்.

ஒவ்வொரு செடியிலும் நமது தேவைக்கு ஏற்ற மாதிரி எத்தனை வேண்டும் என்று முடிவு செய்யணும். சில நேரம் சில செடிகளை அளவுக்கு அதிகமாய் போட்டு (குறிப்பாய் கத்தரி, தக்காளி) கிலோ கணக்கில் காய்த்து கொட்டும். ஆனால் மற்ற செடிகளுக்கு இடம் இல்லாமல் போய் விடும்.         

இந்த சீசனுக்கு கொடி வகைகள் நிறைய இருந்ததால், இருக்கும் ஒரு கொடி பத்தாது. மாடியில் போன சீசனில் ஒரு கொடி அமைத்தும், வெயிலுக்கும், காற்றுக்கும் போட்ட எல்லாமே ஊற்றி கொண்டது. அதை இந்த முறை கொஞ்சம் Shade Net வாங்கி தற்காலிகமாய் ஒரு வேலி அமைத்து காற்றின் தாக்கத்தை கட்டுபடுத்தி தயார் செய்தேன். மூன்றாவதாக, வீட்டின் முன்புறம் உள்ள முதல் பாதியில் வருடத்தின் ஒரு பாதி தான் வெயில் விழும், பிறகு நிழல் வந்து விடுகிறது. கொஞ்சம் உயரமாய் இருந்தால் வெயில் வரும். அதிலும் ஒரு கொடி அமைக்க ரொம்ப நாளை நினைத்தது, அதையும் செய்து முடித்தேன். மொத்தம் மூன்று கொடிகள் இந்த சீசனுக்கு தயார்.  

நிலம் தயார் படுத்துதல் – நாம் தொடந்து நிலத்தில் விளைச்சல் எடுப்பதால், அதில் உள்ள சத்துக்கள் குறைந்து கொண்டே வரும். முதலில் நன்றாக ஒரு மண் வெட்டியில் கொத்தி கிளறி விட வேண்டும். நான் நிறைய உரம் எல்லாம் போடுவதில்லை. எனக்கு தெரிந்த ஒரே உரம், இங்கே TNAU-ல் கிடைக்கும் மண்புழு உரம் தான். அதுவும் வருடத்திற்கு இரு முறை  வாங்கி ஒவ்வொரு பாதிக்கும் ஐந்து கிலோ போல் போட்டு விடுவேன் (நிலம் தயார் செய்யும் போது). 

இந்த முறை சில மெயின் பாத்திகளில் புதிதாக மண்ணையே மாற்றி விட்டேன். தோட்டம் ஆரம்பித்தபோது அந்த பாத்திகளில் அவ்வளவாய் செம்மண் போடவில்லை. அதனால் புதிதாய் செம்மண் வாங்கி போட்டுவிட்டேன். அதனால் உரம் ஏதும் இந்த முறை போடவில்லை.

வழக்கம் போல மாடி தோட்டத்திற்க்கு Coir Pith, Vermi Compost, செம்மண கலவை தான். 

அடுத்த பதிவில், விதை தேர்வு பற்றி எழுதுகிறேன். முடிந்த அளவுக்கு இந்த தொடரை சீக்கிரம் முடிக்க முயற்சிக்கிறேன் (இல்லாவிட்டால் அடுத்த சீசனே வந்து விடும்)

நண்பர்களில் எத்தனை பேர் உங்கள் வீடுகளில் தோட்டம் போட்டிருகிறீர்கள் என்று தெரியவில்லை. இந்த சீசனில், அப்படி தோட்டம் போட்டிருக்கும் நண்பர்களின் தகவல்களையும் எதிர்பார்கிறேன். முடிந்தால்  படங்களுடன் உங்கள் தோட்டம் பற்றியும், நீங்கள் கற்று கொண்ட விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றாய் தோட்டம் பற்றி நிறைய கற்றுக் கொள்ளலாம்.      

(தொடரும்)

 
Preparing the Land

Terrace - Spinach Garden

Terrace - English Vegetables

Front - for Creepers

Terrace - ShareNet - for Creepers


Friday, June 20, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – Carnation மற்றும் Dianthus

நம் தோட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமாய் ஒரு வரிசை. பொதுவாய் நான் காய்கறி செடிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. பூக்கள் என்று பார்த்தால், பிச்சிப் பூ (ஜாதி பூ), முல்லை, நாட்டு ரோஜா, மல்லி, சாமந்தி தவிர பெரிதாய் ஏதும் வைக்கவில்லை.

நான் முன்பு கூறியது போல, நாம் எங்காவது கண்ணை கவரும் விதை பாக்கெட்டை பார்த்துவிட்டால் கை நம நம என்று அரிக்கும். அதை வாங்கி நமது கலெக்க்ஷனில் சேர்த்தால் தான் நிம்மதி. அப்படித் தான், ஒரு கண்காட்சியின் போதும் கண்ணை கவரும் நிறைய நம்தாரி (Namdhari Seeds – NS) பூ விதைகள் கலெக்ஷனில் வந்து சேர்ந்தது. அப்படி கிடைத்தது தான் இந்த Carnation மற்றும் Dianthus பூ விதைகள். விதை வாங்கிய பிறகு தான் எங்கே வைக்க என்று இடம் தேடுவது எல்லாம் நடக்கும்.



வீட்டை சுற்றி நாம் தோட்டத்திற்க்கு இடம் கைப்பற்றுவதே பெரிய கதையை இருக்கும். ஒவ்வொரு செடியாய் வர வர, மண்வெட்டியை வைத்துக்கொண்டு நாமும் சுற்றி சுற்றி எங்கே பாத்தி எடுக்கலாம் என்று நடந்து கொண்டிபோம். ‘துணி காய போடும் இடத்தையாவது விட்டு வைங்க. என்னால மாடிக்கெல்லாம் தினமும் நடக்க முடியாது என்று பதறி போய் வீட்டில் ஓடி வருவாங்க. நாமும் முடிந்த அளவுக்கு கொஞ்சமாய் நடக்க மட்டும் இடம் விட்டு எப்படியும் ஒரு பாத்தி அதிலும் ரெடி செய்து விடுவோம்.    

Carnation மற்றும் Dianthus பூக்களை பற்றி கூற வேண்டும் என்றால், இரண்டுமே கிட்டதட்ட ஒரே இனம் தான், மிக சில வித்தியாசங்களை தவிர. Dianthus செடியின் இலைகள் கொஞ்சம் கரும்பச்சை நிறத்தில், புல் போல நீளமாய் இருக்கும். Carnation செடி இலை, இளம் பச்சை நிறத்தில், இலை கொஞ்சம் அகலமாய் இருக்கும். Dianthus செடி கொஞ்சம் கொடி போல நீளமாய் போகிறது. பூவில் பெரிதாய் வித்தியாசம் இல்லை.
Carnation Plant

Dianthus Plant


இந்த முறை, முதல் தடவையாய் plastic Container-ல் முயற்சிக்கலாம் என்று சின்ன தொட்டியில் இருந்து கொஞ்சம் பெரிய தொட்டி வரை வாங்கினேன். இவைகளை நர்சரிகளில் வாங்குவதை விட, சில Departmental Store-ல் விலை மிக குறைவாக கிடைக்கிறது (நான் இங்கே Kannan Departmental Store-ல் வாங்கினேன்). விலை பத்து ரூபாயில் இருந்து முப்பது ரூபாய் வரை ஆனது.


இரண்டு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பித்தன. விதைகள் கொஞ்சம் பெரிதாகவே இருப்பதால் நாம் தனி தனியாக Nursery Tray-ல் போடலாம். இரண்டுமே 100% முளைப்பு திறன் இருந்தது ஆச்சரியம்.


செடிகளுக்கு Coir Pith & Compost  கலவையையே தொட்டிகளில் எடுத்துக் கொண்டேன். செடிகள் கொஞ்சம் வளர்ந்ததும் plastic Container-ல் மாற்றி விட்டேன். எதிர்பார்த்ததை விட எளிதாகவே வளர்ந்தது. பூக்கள் நிறைய நிறத்தில், Double shaded எல்லாம் வந்திருக்கிறது. இதை இன்னும் பெரிய தொட்டிகளில் மாற்றி நன்றாக கொண்டு வர வேண்டும்.
நாம் கிளைகளை அவ்வப்போது வெட்டி விட, செடி நன்றாகவே தளிர்த்து வரும்.




   Carnation செடிகள் பொதுவாகவே எளிதாய் வரும். ரொம்ப எளிதாய் படர்ந்து விரியும். எளிதாய் கிளையை ஒடித்து வைத்து புதிய நாற்று தயாரிக்கலாம் (நான் இன்னும் முயற்சிக்கவில்லை).

காய்கறிகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பதால், இது போல நிறைய முயற்சிப்பது இல்லை. இந்த செடிகள் வெற்றிகரமாய் வந்திருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் தேடி, வீட்டைச் சுற்றி இன்னும் கொஞ்சம் இடத்தை ஆட்டையை போடலாம் என்று தான் தோன்றுகிறது (வீட்டைச் சுற்றி நடக்க கொஞ்சம் இடம் இருந்தால் போதும் தானே) J








இது வரை கிடைத்திருக்கும் வண்ணங்கள்இவை Carnation மலர்கள் 







கீழே உள்ளவைகள் Dianthus மலர்கள்,



Saturday, June 14, 2014

தகவல் - அக்ரி இன்டெக்ஸ் 2014 (Agri Intex 2014)

அக்ரி இன்டெக்ஸ் பற்றி போன வருட பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறேன். வீட்டு தோட்டம் ஆர்வம் இருக்கும் கோவை வாசிகளுக்கு வருடா வருடம் வரும் ஒரு திருவிழா மாதிரி தான் இது. தோட்டம் பற்றி, விவசாயம் பற்றி, செடிகள் பற்றி நிறைய விசயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். முன்பு தோட்டத்திற்க்கு தேவையான நிறைய பொருட்களுக்கு அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்களை நம்பி தான் இருந்தேன். அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம்.


நமது ப்ளாக் நண்பர்கள் சிலர் ‘அக்ரி இன்டெக்ஸ் பற்றி விசாரித்தார்கள். வெளி ஊர்களில் இருந்தும் கூட சில நண்பர்கள் விசாரித்தார்கள். சிலர் நமது தோட்டத்தை பார்க்கவும் என்னிடம் விசாரித்திருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் இந்த வருடம் ‘அக்ரி இன்டெக்ஸ்போகலாமே என்று தோன்றியது. இந்த வருடம் 18-July (Fri) - 21-July (Monday) தேதிகளில் வருகிறது. இன்னும் சரியாக ஒரு மாதம் தான் இருக்கிறது. நான் எப்படியும் கண்டிப்பாய் போவேன். அங்கு வர நினைத்திருக்கும் நண்பர்கள் 20-July (ஞாயிற்று கிழமை) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அங்கே கொடிசியா வளாகத்திலேயே சந்திக்கலாம். அப்படியே மொத்தமாய் ஒரு ரவுண்ட் ஸ்டால் விசிட் போகலாம். அப்படியே நம்ம தோட்டதிற்க்கும் ஒரு விசிட் போட்டுடலாம். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் ஒரு மெயிலை (gsivaraja@gmail.com) தட்டி விடுங்க. பிளான் போட்டுடலாம்.




முந்தைய அக்ரி இன்டெக்ஸ் பற்றிய பதிவுகள்,


Monday, June 2, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – கருணைக் கிழங்கு





நாம் வழக்கமாய் போடும் செடிகளை தவிர, எப்போதாவது வித்தியாசமாய் முயற்சிப்பது நம்ம தோட்டத்தை இன்னும் fresh-ஆக வைத்துக் கொள்ள உதவும். நாமாக முயற்சித்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்தால் சந்தோசம் தானே.  

முன்பு இது போல தான் உருளைகிழங்கு முயற்சி செய்து ஓரளவுக்கு பலனும் கிடைத்தது. இப்போது கருணை கிழங்கு. இதை பிடி கரணை என்றும் சொல்கிறார்கள். குழம்பு வைக்க வாங்கிய சில கிழங்குகள் நல்ல Fresh-ஆ தெரிந்தது. முளை விடுவது போல இருந்தது. சரி, ஒரு Try விட்டு பார்க்கலாம் என்று ஒரு மூன்று கிழங்குகளை எடுத்து முளைக்க போட்டு விட்டேன்.

இது போல பெரிய செடிகளை (பப்பாளி, முருங்கை செடிகள் போல) படத்தில் உள்ளது போல சின்ன Nursery Bag-ல் போட்டு விடலாம். இந்த பைகள் விலை குறைவு தான். கிலோ கணக்கில் கிடைக்கிறது. நான் போன முறை இங்கு Agri Index-ல் வாங்கினேன்.

கிழங்கை முளை விட்டு வர சரியாக ஒரு மாதம் ஆனது. கொஞ்சம் பொறுமை அவசியம். எப்படி வரும் என்றே தெரியாமல் முயற்சிப்பதிலும் ஒரு த்ரில்லிங் இருக்கு. சின்னதாய் ஒரு பூ மொட்டு மாதிரி வர ஆரம்பித்தது. அது பெரிதாகி வெடித்து உள்ளே இருந்து ஒரு குடை போல இலைகள் விரிந்து செடி மலர்ந்தது. இரண்டு செடிகளை தரையிலும், ஒன்றை ஒரு பெரிய Nursery Bag-லும் வைத்து விட்டிருக்கிறேன்.  

இந்த செடியில் ஒரு விஷேசம், செடியில் குருத்து ஏதும் இல்லை. முதலில் வரும் மூன்று இலைகள் தான் இருக்கிறது. புதிதாய் ஏதும் இலை வர குருத்து ஏதும் இல்லை. பக்க கிளை மட்டும் ஓன்று வருகிறது.  
 
கிழங்கு வர இன்னும் நான்கு-ஐந்து மாதம் ஆகலாம் என்று நினைக்கிறேன். அதனால் இதை Part-1 ஆக கொடுக்கிறேன். எப்படி கிழங்கு வருகிறது என்பதை பொறுத்து சில மாதங்கள் கழித்து Part-2 வரலாம் :-)