Showing posts with label Kovai Agri Index. Show all posts
Showing posts with label Kovai Agri Index. Show all posts

Saturday, June 14, 2014

தகவல் - அக்ரி இன்டெக்ஸ் 2014 (Agri Intex 2014)

அக்ரி இன்டெக்ஸ் பற்றி போன வருட பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறேன். வீட்டு தோட்டம் ஆர்வம் இருக்கும் கோவை வாசிகளுக்கு வருடா வருடம் வரும் ஒரு திருவிழா மாதிரி தான் இது. தோட்டம் பற்றி, விவசாயம் பற்றி, செடிகள் பற்றி நிறைய விசயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். முன்பு தோட்டத்திற்க்கு தேவையான நிறைய பொருட்களுக்கு அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்களை நம்பி தான் இருந்தேன். அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம்.


நமது ப்ளாக் நண்பர்கள் சிலர் ‘அக்ரி இன்டெக்ஸ் பற்றி விசாரித்தார்கள். வெளி ஊர்களில் இருந்தும் கூட சில நண்பர்கள் விசாரித்தார்கள். சிலர் நமது தோட்டத்தை பார்க்கவும் என்னிடம் விசாரித்திருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் இந்த வருடம் ‘அக்ரி இன்டெக்ஸ்போகலாமே என்று தோன்றியது. இந்த வருடம் 18-July (Fri) - 21-July (Monday) தேதிகளில் வருகிறது. இன்னும் சரியாக ஒரு மாதம் தான் இருக்கிறது. நான் எப்படியும் கண்டிப்பாய் போவேன். அங்கு வர நினைத்திருக்கும் நண்பர்கள் 20-July (ஞாயிற்று கிழமை) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அங்கே கொடிசியா வளாகத்திலேயே சந்திக்கலாம். அப்படியே மொத்தமாய் ஒரு ரவுண்ட் ஸ்டால் விசிட் போகலாம். அப்படியே நம்ம தோட்டதிற்க்கும் ஒரு விசிட் போட்டுடலாம். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் ஒரு மெயிலை (gsivaraja@gmail.com) தட்டி விடுங்க. பிளான் போட்டுடலாம்.




முந்தைய அக்ரி இன்டெக்ஸ் பற்றிய பதிவுகள்,


Sunday, July 21, 2013

அக்ரி இன்டெக்ஸ் (Agri Index) 2013



நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த வருட அக்ரி இன்டெக்ஸ் (Agri Index 2013),  இரண்டு வாரங்களுக்கு முன்பு (July 12 – 14) ரொம்ப சிறப்பாகவே முடிந்தது. ஞாயிறு காலை 9 மணிக்கெல்லாம் குடும்பமாய் கிளம்பி விட்டோம். கொடிசியா வளாகத்தில் Hall A, B, C முழுக்க நூற்றுக்கணக்கான ஸ்டால்கள். போன வருடம் பார்த்த நிறைய ஸ்டால்களை இந்த வருடமும் பார்க்க முடிந்தது. வழக்கம் போல வளாகத்துக்கு வெளியே கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் நர்சரி கார்டன் என்று நிறைய.

இந்த வருடம் முக்கியமாக தேனீ வளர்ப்பு பற்றி விவரம் அறிந்து இங்கே தோட்டத்தில் சில பெட்டிகள் வைக்கும் சாத்தியம் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்து வைத்திருந்தேன். எனவே முதலில் ஈரோடு அருகில் உள்ள ஒரு தேனீ பண்ணை சார்பில் இருந்த ஒரு ஸ்டாலுக்கு முதல் விசிட். வீட்டுத்தோட்டத்தில் கூடு வைப்பதற்கான சாத்தியங்கள், எத்தனை வைக்கலாம், விலை விவரங்கள், தேனீ வளர்ப்பு பயிற்சி விவரங்கள் பற்றி விசாரித்து பார்த்தேன். ஒரு நாலு சென்ட் தோட்டத்தில், மரங்கள் நிறைய இருக்கும் பட்சத்தில் ஐந்து தேனீ பெட்டிகள் வைக்கலாம் என்றார்கள். சுற்றிலும் மூன்று கிலோ மீட்டர் வரை சென்று தேன் எடுக்குமாம். இந்தியன் தேனீ, இத்தாலியன் தேனீ என்று இரு வகை இருக்கிறது (அவர்கள் வைத்திருந்தது இந்தியன் தேனீ). ஒரு பெட்டி தயார் செய்ய Rs,1500.  ஈரோட்டில் ஒரு முழு நாள் பயிற்சி மற்றும் சில உபகரணங்கள் இலவசம் என்றார்கள். Honey Extractor  மட்டும் ஒரு Rs,1500. மொத்தம் ஐந்து பெட்டி வைக்க Rs,9000  செலவு. ஆர்டர் செய்தால், பெட்டி தயார் செய்து ஓன்று அல்லது இரண்டு மாதத்தில் வீட்டில் வந்து அமைத்து கொடுத்து விடுவார்களாம். தேனீ வளர்ப்பு பற்றி சுத்தமாய் விவரம் இல்லாமல் அவரப்பட்டு Rs,9000 கொடுத்து வர மனமில்லை. வரும் போது தேனீ வளர்ப்பு பற்றி ஒரு CD மட்டும் வங்கி வந்தேன். ஆனால் பெட்டி அமைப்பது பற்றி ஒரு திட்டம் மனதில் இருக்கிறது. (இங்கே கோவை வேளாண் பல்கலை கழகத்திலேயே வாரம் தோறும ஒரு பயிற்சி வகுப்பு நடக்கிறது.விசாரித்துப் பார்க்க வேண்டும்).



வீட்டில் தான் என்னை கொஞ்சம் கலவரமாய் பார்த்தாள். வீட்டை சுற்றி செடியும், கொடியுமாய், பத்தாதற்க்கு சுற்றித் திரியும் பறவைகள், அணில் எல்லாம் வீட்டைச் சுற்றி தான். இப்போ தேனீ. இனி வீட்டுக்கு வெளியே நடமாட விடமாட்டான் போல என்பது போல ஒரு கலவரம்.

வெளியே ஒரு ரவுண்ட் சுற்றி விட்டு, Hall C-ல் இருந்து ஆரம்பித்தோம். Hall C முழுக்க கோவை வேளாண் பல்கலை கழகத்தின் ஸ்டால்கள் தான். முதலிலேயே இருந்த Seed ஸ்டாலில் சில விதைகளும், அடுத்து தென்னைக்கு டானிக்கும் வாங்கிக்கொண்டேன். விதை ஆராய்ச்சி பற்றி, பருத்தி, நெல், கரும்பு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனி ஸ்டால்கள் நிறைய. Hall C ஐ முடித்து விட்டு B ஐ தொடர்ந்தோம்.

வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து தருவோம் (Sq.Feetக்கு ஒரு குறிப்பிட்ட தொகை) என்று நிறைய ஸ்டால்கள் இருந்தன. மாடி தோட்டத்திற்கு தேவையான பைகள் (தொட்டிக்கு பதிலாக), Green House அமைப்பதற்கு வலைகள் என்று நிறைய. செடி வைக்கும் பை ஏழு-எட்டு வருடங்களுக்கு அப்படியே இருக்கும் என்றார்கள். சோதனைக்காக நானும் இரண்டு பைகள் வாங்கி வந்தேன் (Rs.70 each).  லோக்கல் விதை கடை ஓன்று (கலர் கலராய் உலகத்தில் இருக்கும் அத்தனை காய்கறி, பூ விதைகளும் கிடைக்கும். பாக்கெட் பத்து ரூபாய் தான்). நானும் அதில் கொஞ்சம் செடி பீன்ஸ், கொடி பீன்ஸ் என்று ஒரு ஐந்து பாக்கெட் வாங்கி கொண்டேன் (செடி வந்தால் தான் உண்டு). இதே போல் இன்னொரு ஸ்டாலிலும்  கிழங்கு வகையில் இருந்து வரும் பூ செடிகள் (ஜெர்பரா, டெய்லியா வகை) நிறைய இருந்தது.

ஒரு கடையில் மல்லி, முல்லை நாற்றுகளுக்கு இடையே சம்பந்தமே ஒரு நாற்று இருக்க, போய் விசாரித்து பார்த்தேன். சந்தனமரம் நாற்று என்றார்கள். அடடா! இந்த நாற்று எல்லாம் விற்பார்களா? வீட்டில் வளர்க்கலாமா? என்று ஆச்சரியம். நான் ஆர்வமாய் விசாரிப்பதை பார்த்து பக்கத்தில் இருந்த ஒருத்தர் ‘நீங்க வச்சி வளர்ங்க. ஆனா வளர்ந்தவுடன் வெட்டிட்டு போயிருவாங்க என்றார் நக்கலாக. எதுக்கு வம்பு என்று வந்து விட்டேன்.

Hall B முடிக்கவே மதியம் ஆகிவிட்டது. அப்புறம் வளாகத்தை விட்டு வெளியே வந்து கொண்டு போன வெஜிடபிள் பிரியாணியை ஆற அமர ஒரு மரத்தடியில் அமர்ந்து ஒரு கட்டு கட்டிவிட்டு பிறகு தொடர்ந்தோம் :-) 

இன்னொரு ஸ்டாலில் இலைகளில் இருந்து செடி உற்பத்தி என்று எலுமிச்சை, மல்லி, முல்லை போன்ற நாற்றுகள் விற்றுகொண்டிருந்தார்கள். விதை இல்லாமல், வெறும் இலையை மண்ணில் புதைத்து வைத்து செடி உற்பத்தி. நிறைய பேர் போட்டி போட்டு வாங்கி கொண்டிருந்தார்கள். சில செடிகள் சாம்பிளுக்கு மண் இல்லாமல், தொங்க விட்டிருந்தார்கள். இலையில் இருந்து செடி வளர்ந்திருந்தது. (ஆனா, செடி வளர்ந்து காய்க்குமா-ன்னு ஒரு கேள்வி கேட்டேன். அதெல்லாம் நன்றாகவே காய்க்கும் என்றார்கள்). நிறைய மண் நிரப்பிய சின்ன சின்ன பைகளில் இலைகளை மண்ணில் புதைத்து வைத்திருந்தார்கள். நான் ஒன்றும் வாங்கவில்லை.

ISUZU- வின் Business Class Car (MU-7) ஓன்று பார்வைக்கு விட்டிருந்தார்கள். விலை வெறும் 28 லட்சம் தானாம். எத்தனை விவசாயிகள் புக் செய்தார்கள் என்று தெரியவில்லை. அங்கே அங்கே நிறைய ராகி மாவுல பிஸ்கட், தோசை மாவு என்று நிறைய ஸ்டால்கள். ஒவ்வொரு ஹாலிலும் சில விவசாய கருத்தரங்குகள் போய் கொண்டிருந்தது. ஒரு ஏழெட்டு பேர் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தார்கள். கூட்டமே இல்லாத கடுப்பில் ‘இது விவசாய கண்காட்சி. இங்கே எதுக்கு தோசை மாவு, இட்லி மாவு, பிஸ்கட் எல்லாம் விக்கறானுங்க. இது என்ன சமையல் கண்காட்சியா என்று மைக்கில் கத்திக்கொண்டிருந்தார் ஒருவர். நானும் போய் என் ஆதரவையும் தெரிவிக்கலாம் என்று ஆசை தான். ஆனால் குடும்பமாய் போய் விட்டதால் முடியவில்லை. ‘அடுத்த முறை வரும் போது உங்களை எல்லாம் கழட்டி  விட்டுட்டு தான் வரணும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். என் பொண்ணு  ‘அதெல்லாம் முடியாது, அடுத்த வருசமும் எனக்கு அந்த ராகி, குதிரைவாலி பிஸ்கட் எல்லாம் வேணும். நானும் வருவேன் என்றாள் :-).

இந்த வருடம் அக்ரி இன்டெக்ஸ்ல் என்னுடைய Purchase என்று பார்த்தால்,

Nursery Tray -  ரொம்ப நாளாகவே தேடிக் கொண்டிருந்த ஒரு பொருள். சில நர்சரியில் விசாரித்த போது, பெங்களூரில் இருந்து வரவழைத்து தருவதாக சொன்னார்கள். விலையும் அதிகமாக சொன்னார்கள். இந்த முறை அக்ரி இன்டெக்ஸ்ல் ஒரு கடையில் கிடைத்தது. விலை இருபது ரூபாய் தான். ஒரு ஐந்து Tray வாங்கினேன். தேங்காய் நார் துகள்களை பரப்பி, விதைத்து விட்டால், செடி வளர்ந்ததும் எடுத்து  நட எளிதாய் இருக்கும். முயற்சி செய்து பாப்போம்.

வழக்கம் போல நிறைய விதைகள், தென்னை டானிக்,

Organic Farming – Pest and Disease Control பற்றி ஒரு CD, வேம்பு, இஞ்சி, பூண்டு என்று இயற்கையாய் பூச்சிக் கொல்லி தயார் செய்வது பற்றியது. இந்த ஏரியா இன்னும் அவ்வளவாய் கற்றுக்கொள்ளாத ஒரு பகுதியாகவே இருக்கிறது. இந்த வருடம் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஒரு திட்டம். அதற்கு இந்த சி.டி கொஞ்சம் உதவியாய் இருக்கும். அதோடு முன்னம் கூறியது போல, தேனீ வளர்ப்பு பற்றி ஒரு CD.

மாடி தோட்டம் அமைக்க இரண்டு Bags. காணால் போன Shovel ஓன்று புதிதாய். அவ்வளவு தான்.

எல்லாம் மறுபடி ஒரு சுற்று சுற்றி விட்டு கிளம்ப மணி நான்கு ஆகிவிட்டது. மதியத்திற்கு அப்புறம் கூட்டம் எக்கச்சக்கமாய் ஆகி விட்டது. எந்த ஸ்டாலிலும் நின்று பார்க்க, விசாரிக்க முடியவில்லை. மொத்தத்தில், இந்த வருட அக்ரி இன்டெக்ஸ்ம் ரொம்ப திருப்திகரமாய் முடிந்தது.

சில படங்கள். Sorry for the very poor quality pictures. என்னுடைய Hi-Fi Mobile Camera-வில் இவ்வளவு தான் வரும். ரொம்ப கூட்டம் வேறு. கூட்டத்தில் முடிந்த அளவுக்கு எடுக்க முடிந்த படங்கள் இவ்வளவு தான் :-)


The Entrance



India’s first 100 hp Jaya Tractor ( to spoil the soil in better way :-) )



Stalls (Engineering Divisions)






Seed Shop 



Terrace Garden stall


Plant from Leaf




சந்தன மர நாற்று 



The crowd



விவசாயிகளின் வாகனம் (The business class MU-7)


My Purchases


Saturday, June 29, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – எலுமிச்சை


பதிவுக்கு போவதற்கு முன்பு ஒரு தகவல். கோவையில் இருப்பதில் ஒரு நன்மை இங்கே இருக்கும் விவசாய கல்லூரி. உரம், விதைகள் என்று தோட்டத்திற்கு வேண்டிய பொருள்கள் தரமாக வாங்க முடியும். இன்னொன்று, கோவையில் வருடா வருடம் கொடிசியா வளாகத்தில் நடக்கும் அக்ரி இன்டெக்ஸ் (Agri Intex). இது ஒரு விவசாய கண்காட்சி (விழா எனலாம்). 

இந்த வருடம் ஜூலை 11  ல் இருந்து ஜூலை 14 வரை.


கண்டிப்பாய் போய் பாருங்கள் (நான் இரண்டு நாளும் அங்கே தான் சுற்றிக்கொண்டு இருப்பேன்). விவசாயம், தோட்டம் பற்றி ஆர்வம உள்ள அனைவரும் தவறாமல் காண வேண்டிய ஒரு கண்காட்சி. இங்கே வந்தால் தான், இந்தியாவில் விவசாய துறை எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று காணலாம். தோட்டத்திற்கு வேண்டிய அத்தனை பொருள்களும் (செடிகள், விதைகள், Tools, விவரங்கள்) கொட்டிக் கிடக்கும். 2012 அக்ரி இன்டெக்ஸ் பற்றி இந்த பதிவில் எழுதி இருக்கிறேன்.

இப்போ எலுமிச்சை பற்றி, நாம் தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும், ஒரு சில செடிகள் நமக்கு ரொம்ப விசேஷமாய் இருக்கும். அப்படி எங்க வீட்டுத் தோட்டத்தில் இந்த எலுமிச்சை செடிக்கு ஒரு தனி கவனம் எப்பவுமே இருக்கும். காரணம், நான் வாங்கிய செடிகளிலேயே ரொம்ப விலை கொடுத்து வாங்கிய ஒரு செடி இது தான். இங்கே, கணபதியில் ஒரு நர்சரி கார்டனில் ரோஜா வாங்க சென்ற போது, ஒரு எலுமிச்சையும் வாங்கலாம் என்று இதை பார்த்தோம். இது ஏதோ ஆஸ்ரேலியன் எலுமிச்சை (நம்ம ஊர் கொடி எலுமிச்சை தான்) என்றார்கள். வழக்கம் போல ‘நன்றாக காய்க்கும் என்று சான்றிதல். செடியின் விலை ரூ.280 என்றார்கள். நான் இதுவரை ஐம்பது ரூபாய்க்கு மேல் செடியே வாங்கியது இல்லை. ரூ.280 என்றால் ரொம்பவே அதிகம். இருந்தாலும், ஒரு ஆசையில் வாங்கி வந்தேன்.

வாங்கி வந்து வைத்த பிறகு, ஒரு வருடம் தரையை விட்டு மேலே வரவே இல்லை. வைத்த மாதிரி அப்படியே நின்றது. ரூ.280 மொய் தான் போல என்று நினைத்துக் கொண்டேன். கொடுத்த காசுக்காக இந்த செடிக்கு, உரம் வைப்பதில் இருந்து தண்ணீர் விடுவது வரை, எப்பவுமே தனி கவனம் இருக்கு. இரண்டாவது வருடம் செடியாய் இருக்கும் போதே ஒன்றிரண்டு பூக்கள் வந்தது. காய்க்க விடாமல் கிள்ளி போட்டுவிட்டேன். செடி இன்னும் கொஞ்சம் நன்றாக வளரட்டும் என்று.

எலுமிச்சையில் இலையை சாப்பிடும் ஒரு விதமான புழு வரும். நாம் பார்த்து நீக்கி விட்டால் போதும். தினமும் லேசாய் கவனித்து வந்தால் போதும். மற்றபடி வேறு எந்த பிரச்சனையும் இல்லை. வழக்கம் போல மற்ற செடிகளுக்கு வைக்கும் உரம் (மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு) போதுமானது. வேறு எந்த தனி கவனமும் தேவை இல்லை.

இந்த வருடம் செடி நிறைய கிளைகள் வந்து ஓரளவு உயரம் வந்தது. நிறைய பூக்கவும் செய்தது. இந்த வருடத்தில் இருந்து அறுவடை எடுக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக பூத்தது. திராச்சை கொத்து மாதிரி கிளை நுனியில் ஏழெட்டு காய்கள் கொத்தாய் காய்க்க, மேலே போன கிளைகள் எல்லாம் தரையை நோக்கி வந்து விட்டன. 

இந்தமுறை கிட்டத்தட்ட மொத்தம் 60 காய்கள் காய்த்திருக்கிறது. ஒவ்வொன்றும் பெரிதாய் 50 gm ல் இருந்து  100 gm வரை இருக்கிறது. கொடுத்த விலைக்கு, எதிர்பார்த்ததை விட எக்கச்சக்கமாய் காய்த்திருக்கிறது. போன வாரம் அறுவடை செய்தாகிவிட்டது. ஒரு நாற்பது காய் பறித்தோம். மொத்தம் 2 ½ கிலோ இருந்தது. இன்னும் ஒரு கிலோ போல் செடியில் கிடக்கிறது. பறித்ததில் ஒரு பெரிய கொத்தில் எட்டு காய்கள் (600 gms இருந்தது). காய்த்திலேயே பெரியதானது. வழக்கம் போல ஜூஸ் போடவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்திக் கொண்டோம்.