ஜூன் மாதத்தில் தொடங்கிய இந்த சீசன் செடிகளின் தற்போதைய நிலவரத்தை பார்க்கலாம். நிறைய பேர் இந்த ஆடி பதினெட்டில் (ஆடிப்பெருக்கு) விதைத்து இந்த சீசனை ஆரம்பித்து இருப்பீர்கள். நான் பொதுவாக மே மாதத்திலேயே ஆரம்பித்து விடுவேன். ஆடிக்கு காத்திருப்பதில்லை.
செடிகள் எல்லாம் இப்பொது பூத்து பிஞ்சி பிடிக்க ஆரம்பித்து
இருக்கின்றன. தோட்டத்தின் தற்போதைய நிலவரம்,
வெண்டை, அவரை செடிகளில் இன்னும் ஒரு வாரத்தில் காய் பறிக்கலாம்.
இன்னும் ஒரு மாதத்தில் கத்தரி, தக்காளி, மிளகாய் செடிகளில் காய் பறிக்க
ஆரம்பிக்கலாம்.
தக்காளியில் மூன்று வகை (நண்பர் பரமேசிடம் வாங்கிய மஞ்சள், நாட்டு
தக்காளி மற்றும் பழைய ஹைப்ரிட் US Seeds (DIY Kit-ல்
கொடுத்தது. இதில் மஞ்சள் தக்காளி கலக்கலாய் வந்திருக்கிறது. செடியை பார்த்தாலே
அவ்ளோ செழிப்பாக இருக்கிறது. தொடக்கத்தில் நாட்டு தக்காளி செடிகள் கொஞ்சம் சுமாராக
தான் தெரிந்தது. இப்போது கொஞ்சம் செழிப்பாக தெரிகிறது. ஹைப்ரிட் செடி ரொம்பவே
சுமார். எதிர்பார்த்தது தான். ஹைப்ரிட் விதைகள் காலாவதி ஆகி விட்டது. இருந்தாலும்
போட்டு விட்டேன். மிச்சம் இருப்பதை தூர போட்டு விட வேண்டும்.
கத்தரியில் மூன்று வகை. நண்பர் பரமேசிடம் வாங்கிய பச்சை கத்தரி, ஓடவை
ஊதா கத்தரி மற்றும் நான் வருடா வருடம் விதை எடுத்து பயன்படுத்தும் வெள்ளை கத்தரி. மூன்றுமே
பட்டையை கிளப்புகிறது. செடிகளை பார்த்தாலே அவ்ளோ செழிப்பு. அவ்ளோ பெரிய இலைகள். பொதுவாக
ஒரு செடியின் ஆரோக்கியத்தையும், விளைச்சலையும் நான்கு இலைகள் வரும் போதே சொல்லி
விடலாம். இந்த கத்தரி செடிகளின் இலைகள் ஒரு வாழை இலை போல அவ்ளோ பெரிய, திரட்சியான
இலைகள். விளைச்சல் கண்டிப்பாக நன்றாக இருக்கும். அதை தான் ‘விளையும் பயிர்
முளையிலேயே தெரியும்’ என்றார்கள். சுமாரான விதையை போட்டுவிட்டு நாம் என்ன தான்
உரமாக அள்ளிப் போட்டு குட்டிக்கரணம் போட்டாலும் விளைச்சல் எடுக்க முடியாது.
மிளகாயில் மூன்று வகை. நண்பர் பரமேசிடம் வாங்கிய சீனி மிளகாய், சம்பா
மிளகாய் மற்றும் DIY Kit-ல் வந்த பழைய ஹைப்ரிட் US Seeds. நாட்டு
வகை இரண்டும் நன்றாக வந்திருக்கிறது. காலாவதியான ஹைப்ரிட் விதை சுமார் தான். கொஞ்சமாவது
காய்க்கும் என்று நினைக்கிறேன்.
இந்த சீசனின் முதல் பதிவில் சொன்ன மாதிரி, வந்த ஒரே ஒரு கண்டங்கத்தரி,
தூதுவளை செடிகளை வெற்றிகரமாக தேற்றி இப்போது பெரிய பைகளில் வைத்திருக்கிறேன்.
பிறகு தான் அவைகளுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும்.
மாடியில் குடைமிளகாய் இப்போது தான் மொட்டு வைத்திருக்கிறது.
கிடைத்த
கொஞ்ச இடைவெளியில் மாடியில் வைத்த முலாம் பழம் இரண்டு பிஞ்சி பிடித்திருக்கிறது. சீக்கிரம்
‘என் வீட்டுத் தோட்டத்தில்’ முலாம் பழம் இடம் பெறலாம். பார்க்கலாம்.
பேபி கார்னும், ஸ்வீட் கார்னும் செழிப்பாக வளர்ந்து நிற்கிறது.
இன்னும் கதிர் பிடிக்கவில்லை.
வழக்கமான பிரச்சனை கொடிகள் தான். செடி என்று வைத்த கொடி அவரை செழிப்பாக
சுற்று சுவற்றில் படர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. சீக்கிரம் மொட்டு வைக்கும்
என்று நினைக்கிறேன். ஆனால் முக்கியமாய் எதிர்பார்த்த புடலை பூவாய் பூத்து
தள்ளுகிறது. ஆனால் பிஞ்சி ஏதும் பிடிக்க மாட்டேன்கிறது. உரம், மண் எல்லாம் நன்றாக
தான் இருக்கிறது. போட்ட விதை சரி இல்லை என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு மாதம்
பார்த்துவிட்டு பிடுங்கி போட்டுவிட்டு புதிதாய் தான் போட வேண்டும். மிதி பாகல்
காய்க்க ஆரம்பித்து இருக்கிறது. ஆனால் பெரிதாய் விளைச்சல் கிடைக்காது என்று
நினைக்கிறேன் (ஐந்து செடிகள் நிற்கிறது). பெரிய பாகல் ஓன்று இனி தான் விதைக்க
வேண்டும்.
வெள்ளரி கொடியில் பிஞ்சி தெரிகிறது. காய் பறிக்கும் அளவுக்கு வருகிறதா
என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சுரைக்காய் மெதுவாய் தான் வந்து
கொண்டிருக்கிறது. இன்னும் பந்தலை எட்டிப் பிடிக்கவில்லை. மொத்தத்தில் வழக்கம் போல
கொடிகளில் சொதப்பல் இந்த சீசனிலும் தொடர்கிறது.
முட்டைக்கோஸ் தொட்டியில் வைத்ததும், தரையில் வைத்ததும் நன்றாக
வந்துகொண்டிருக்கிறது. கோஸ் வந்தால் தான் விளைச்சலை பற்றி கூற முடியும்.
வெங்காயம் கொஞ்சம் சொதப்பல் தான். போன முறை விளைச்சல் எடுத்த Omaxe விதை மீதம் இருந்ததில் ஓன்று கூட முளைக்கவில்லை. விதை காலாவதி
ஆகவில்லை. ஒரு வேலை சரியாக திறந்த பாக்கெட் விதைகளை பாதுக்காக்கவில்லை என்று
நினைக்கிறேன். அந்த விதை பாக்கெட் கூட திறக்காமலேயே வைத்திருந்த இன்னொரு வகை பெரிய
வெங்காயம் கூட ரொம்ப குறைவாகவே முளைத்தது (ஒரு அறுபது விதைகளில் பதினைந்து தான்
முளைத்தது – 25%
germination rate தான்). இந்த விதையும்
காலாவதி ஆகவில்லை. ஆனாலும் சரியாக முளைக்கவில்லை.
இந்த முறை அக்ரி இன்டெக்ஸ்-ல் TNAU-ல் வாங்கிய சின்ன
வெங்காயம் நன்றாக முளைத்திருக்கிறது. இனி தான் எடுத்து நட வேண்டும். இன்னும் இந்த
அக்ரி இன்டெக்ஸ்-ல் வாங்கிய ஒரு பாக்கெட் வெள்ளை பெரிய வெங்காயமும், சிவப்பு பெரிய
வெங்காயமும் விதை இருக்கிறது. இந்த வாரம் நடலாம் என்று இருக்கிறேன்.
இந்த சீசனில் பூச்சி தாக்குதல் என்று பார்த்தால், அசுவினி பூச்சிகள்
அவரை செடி விதையில் இருந்து வெளியே
எட்டிப் பார்பதற்கும் வந்து உட்கார்ந்து கொள்கின்றன. வழக்கம் போல கோலா பானம் தான்
நமக்கு கை கொடுக்கிறது. இரண்டு முறை பூச்சிகள் வந்தது. கோலா தெளித்து விட்ட பிறகு
எந்த பிரச்னையும் இல்லை. இந்த International பிராண்ட்டுகளில் கருப்பு
கோலாவுக்கு மட்டும் தான் இந்த மகத்துவம் இருக்கிறதா இல்லை ஆரஞ்சு கலர், ஆப்பிள்
கலர் என்று மற்ற வகைகளிலும் இந்த மகத்துவம் இருக்கிறதா என்று ஒரு சின்ன ஆராய்ச்சி
செய்யலாம் என்று இருக்கிறேன் :) .
வெண்டையில் வெள்ளை சாறுரிஞ்சும் பூச்சிகள் ஒரே ஊரு செடியில் வர
ஆம்பித்தது. எல்லாவற்றையும் கையால் நீக்கி விட்ட பிறகு இப்போது பிரச்னை இல்லை.
ஆனாலும் வெண்டையை தினமும் கவனித்து வருவது அவசியம். செடிகளின் மீது ஏதும் எறும்பு
நடமாட்டம் இருந்தால் உடனே கவனிக்க வேண்டும்.
முலாம் பழத்தில் இலைப்பேன் தாக்குதல் நிறையவே வந்து விட்டது. அதனாலேயே
செடி கொஞ்சம் திணற ஆரம்பித்து விட்டது. நீரில் வேப்பம் புண்ணாக்கு கலந்து தெளித்து
ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இலைகளின் அடியில் தான் பூச்சிகள்
இருப்பதால் கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக
ஒவ்வொரு இலையாக திருப்பி வைத்து வேப்பம் புண்ணாக்கு நீரை தெளிக்க வேண்டிய
இருக்கிறது. எப்படியும் கட்டுக்குள் கொண்டு வந்து அறுவடை எடுத்து விடலாம்.

