நாம ஏதாவது கண்காட்சி போனால், வீட்டுக்கு ஏதாவது வாங்குகிறோமோ இல்லையோ
ஒரு ஐநூறு ரூபாய்க்காவது விதைகள் வாங்கினால் தான் வெளியே வருவது. அதிலும் இந்த
ஹைப்ரிட் விதை பாக்கெட் நிறைய படம் பார்த்தே விதை பாக்கெட்டுகள் நம் கைகளில்
வந்துவிடும். அது நமக்கு வேண்டிய காய்கறியா, நம்ம ஊருக்கு ஒழுங்கா வருமா
என்பதெல்லாம் இரண்டாவது தான். அப்படித்தான் இந்த Hot Pepper விதையும்.
மிளகாய் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என்று ஒரு கலவையாக மெழுகு போல அடுக்கிய அட்டை
படத்தை பார்க்கவே ரொம்ப அழகாய் இருந்தது. அப்புறம் என்ன, ஒரு பாக்கெட் வாங்கியாகி விட்டது. பத்து விதைக்கு விலை வெறும் 55 ரூபாய் தான் :)
இந்த சீசனில் மற்ற மிளகாய்கள் ரொம்பவே சொதப்பியது. காலாவதியான
ஹைப்ரிட் விதையும், நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகளும் சுமாரான
விளைச்சலையே கொடுத்தது. நிறைய செடிகள் இலை சுருண்டு போய் சரியாகவே வரவில்லை (இது
கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு ஏரியா). அதை எல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் இந்த Hot Pepper விளைச்சல் தேவையான மிளகாயை கொடுத்தது (அதனால் நான் ஹைப்ரிட் விதையை
எல்லாம் பரிந்துரைக்கவில்லை :) )
மொத்தம் பத்து விதையில் எட்டு போல முளைத்திருக்கும். அதில் ஒரு மூன்று
செடியை மாடியில் பையில் வைத்துவிட்டு, சிலவற்றை தரையில் வைத்து விட்டேன். தரையில்
வைத்த செடிகள் சுமாராகவே காய்த்தது. ஆனால் மாடியில் வைத்த செடி காய்த்து
கொட்டிவிட்டது. பறித்ததில் நிறைய காயபோட்டு வற்றலுக்கே பயன்படுத்தும் அளவுக்கு
மூன்று செடிகளிலும் விளைச்சல்.
மிளகாயை பார்க்கவே அழகு. இதை சிலர் ‘வானம்பாடி மிளகாய்’ ‘வானம்
பார்த்த மிளகாய்’ என்றார்கள். மற்ற மிளகாய் எல்லாம் தரை பார்த்து கொண்டிருக்க,
இந்த மிளகாய் வானம் நோக்கி வளர்கிறது. வெளிர் பச்சை நிறத்தில் ஆரம்பித்து ஆரஞ்சு
நிறம் மாறி கடைசியில் சிவப்பு நிறத்தில் மாறுகிறது. எல்லா நிறத்திலும் செடியில்
மிளகாய் பார்க்க கிட்டத்தட்ட Ornamental Chilli மாதிரி
இருக்கிறது. தோட்டத்தில் வரிசையாய் வைத்து விட்டால் ஒரு அலங்கார செடி போல ஆகிவிடும்
போல.
கீழே இருப்பது வெறும் ஒரு செடி தான். பூங்கொத்து மாதிரி இது மிளகா கொத்து.
நாங்களும் அதே மாதிரி அடுக்கி போட்டோ எடுப்போம்லா :)