Saturday, January 23, 2016

2015- சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – அறுவடை (பகுதி – 2)



குட்டி மஞ்சள் தக்காளி

பார்ப்பதற்கு செர்ரி தக்காளி (Cherry Tomato) மாதிரி இருந்தாலும் இது நாட்டுத் தக்காளி தான். நண்பர் பரமேசிடம் வாங்கிய விதைகளில் இதுவும் ஓன்று. நான் ‘குட்டி’ என்பதை சரியாக கவனிக்காமல் ‘மஞ்சள் தக்காளி’ என்பதை மட்டும் படித்து நிறைய செடிகளை போட்டு விட்டிருந்தேன். கொத்து கொத்தாய் பூக்கும் போதே இது சாதாரண தக்காளி மாதிரி இல்லையே என்று கொஞ்சம் சந்தேகம் வந்தது. பிறகு விதை பாக்கெட்டை படித்து பார்த்ததில் ‘குட்டி மஞ்சள் தக்காளி’ என்றிருந்தது. நாட்டு தக்காளியில் இப்படி ஒரு வகை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தட்டில் வைத்துப் பார்த்தால் புதிதாய் ஏதோ ஸ்வீட் அடுக்கி வைத்த மாதிரி ஒரு அழகு. சாம்பாருக்கு ஒரு கை நிறைய அப்படியே அள்ளி போட்டுக் கொள்ளலாம்.







செர்ரி தக்காளி (Cherry Tomato)

ரொம்ப நாள் செர்ரி தக்காளி முயற்சிக்க வேண்டும் என்று ஒரு கண்காட்சியில் ஹைப்ரிட் விதை பாக்கெட் ஓன்று வாங்கி வந்திருந்தேன். செடி கன்னாபின்னாவென்று நீளமாய் வளர்கிறது. ஒரு கயிறு கட்டி அதில் சுற்றி விட்டால் நல்லது. கிட்டதட்ட மேலே பார்த்த குட்டி மஞ்சள் தக்காளி மாதிரி தான். ஆனால் நிறம் மட்டும் நல்ல அடர் சிவப்பு. தற்போது விளைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறது





நாட்டுத் தக்காளி

விதை நண்பர் பரமேசிடம் வாங்கியது. ஜூலையில் நடவு செய்த செடிகள் காய்த்து கொட்டியது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு விளைச்சல் எடுக்க முடிந்தது. அதனால் அக்டோபர் வாக்கில் மறுபடி கொஞ்சம் நாற்று எடுத்து நிறைய பைகளில் வைத்து விட்டேன். இப்போது அந்த செடிகள் நன்றாகவே காய்த்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் தக்காளி கிலோ ஐம்பது, அறுபது என்று போன இந்த வேளையில் தேவைக்கு அதிகமாகவே காய்த்து கொண்டிருக்கிறது. 




மிளகாய்        

நாட்டு விதைகளில் ரொம்பவே சொதப்பியது மிளகாய் தான். இலைச் சுருட்டல் நோய் வந்து பெரிதாய் விளைச்சல் எடுக்க முடியவில்லை. மிளகாய் மறுபடி போட்டும் சில பிரச்சனைகள் வருகிறது. சீசன் பிரச்சனையா, நோய் பிரச்சனையா என்று என்று தெரியவில்லை. இந்த சொதப்பலை நான் போன பதிவில் கூறிய கார மிளகாய் (Hot Pepper) விளைச்சலை கொண்டு சரி செய்து கொண்டேன். மிளகாய் இந்த தை பட்டத்தில் சரியாய் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறேன்.

குடை மிளகாய்

குடை மிளகாய் செடி கத்தரி, தக்காளியை விட ஒரு எளிதாக காய்க்கும் செடி ஆகி போனது. இந்த விளைச்சலை ஏற்கனவே என்னுடைய முதல் வீடியோவின் இறுதியில் கொடுத்திருந்தேன். விதை Omaxe Hybrid Seed, இணையத்தில் வாங்கியது. அதில் அடர் ஊதா நிறத்தில் நிறைய காய்த்தது. ஆரஞ்சு மஞ்சள், சிவப்பு நிறமும் நிறைய கிடைத்தது. வெள்ளை நிறம் முயற்சித்து எந்த செடியிலும் வெள்ளை நிற குடைமிளகாய் வரவில்லை.








கொடிகள்

கொடியை பொறுத்த வரையில் சொதப்பல் இந்த சீசனிலும் தொடர்கிறது. நான் என்ன தான் முயற்சித்தாலும் எல்லாமும் கருப்பு கொடியை தான் காட்டுகின்றன. எல்லாவற்றிலும் சொல்லி வைத்தது போல ஒரே ஒரு காய். அதையும் பறித்து குழம்பு வைத்து சந்தோஷ பட்டுக் கொண்டோம். செடியில் அவரை காய்க்கிற மாதிரி, செடி பாகல், செடி புடலை, செடி சுரை என்று இருந்தால் நல்லா இருக்கும் போல. ஜூலையில் தரையில் வைத்த புடலை, பாகல் எல்லாம் ஏகத்துக்கு சொதப்ப ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் பிடுங்கி விட்டு பைகளிலேயே காயர் பித் வைத்து செய்து பார்க்கலாம் என்று செப்டம்பரில் இன்னொரு நடவு செய்தேன். பாகல் செமையாக வந்தது. வெற்றி.. வெற்றி என்று மனசு லேசா கூவ ஆரம்பிப்பதற்குள் செடியின் தண்டு எல்லாம் தடித்து செடி அப்படியே குன்றி போனது. புடலையும், பீர்கனும் ஏகத்துக்கு பூத்து கடைசியில் ஒரே ஒரு காய் மட்டும் கொடுத்தது. சுரையில் வெறும் பூ மட்டும் தான். கடுப்பில் செடி வாடி போகட்டும் என்று தண்ணீரே ஊற்றாமல் ஒரு வாரம் விட்டு விட்டேன். திடீரென்று ஒரு காய் மட்டும் கண்ணில் தட்டுபட, இதிலும் ஒரு காய் பறிக்கனும்னு இருக்கும் போல என்று மறுபடி நீர் ஊற்ற ஆரம்பித்து இருக்கிறேன்.

செடிக்கும் கொடிக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. முக்கிய வித்தியாசம் கொடியில் மட்டும் தான் ஆண் பூ, பெண் பூ என்று இருக்கிறது. பெண் பூவில் பூவின் காம்பிலேயே சிறிதாக காய் இருக்கும். அது மட்டும் தான் காய்க்கும். தவிர பெண் பூ பூத்தாலும் அது அயல்  மகரந்த சேர்க்கையை நிறைய சார்ந்திருக்கிறது. தோட்டத்தில் தேனீ, வண்ணத்து பூச்சிகள் வரத்து ஏதும் இல்லை என்றாலும் பிரச்சனை தான். அதை சரி செய்ய நாமே hand pollination செய்யலாம் (ஒரு ஆண் பூவை பறித்து காயோடு பூத்திருக்கும் மலர் மேல் லேசாய் தேய்த்து விடலாம்). கொடிக்கு அதற்குண்டான சத்துக்களோ, தகுந்த சீசனோ அமையவில்லை என்றால் ஆண் பூவாக தான் வருகிறது. சீசன் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் (நண்பர் ஒருவர் கொடி அவரை பனி காலத்தில் (மார்கழி) நன்றாக காய்க்கும் என்றார். அதற்கு ஏற்றார் போல ஆகஸ்ட், செப்டம்பரில் விதைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்).

கொடியை பொறுத்தவரை சவால் நிறையவே இருக்கிறது. சீக்கிரம் கற்றுக் கொண்டு எதாவது உருப்படியாய் இந்த தை படத்திலாவது செய்ய வேண்டும்.  



  

புது வரவுகள்

ஏற்கனவே நாம அசுவினி, மாவுப் பூச்சி என்று போராடிக் கொண்டிருக்க, இந்த சீசனில் புதிதாய் இரண்டு பூச்சிகள் வந்து கடுப்பை கிளப்பிவிட்டு செத்து போயின.

கொடி எல்லாம் சொதப்பிக் கொண்டிருக்க மிதிபாகல் மட்டும் அழகாய் காய்த்துக் கொண்டிருந்தது. இது பொறுக்காமல் மஞ்சளாய் ஒரு பூச்சி கூட்டம் வந்து மொத்தமாய் செடியை மொட்டை அடித்துவிட்டது. கொடி முழுவதும் பரவி இலையை தின்று தீர்த்துவிட்டது. கடுப்பில் மொத்த செடிக்கும் தீ வைத்து காலி செய்தேன். கொடுமை என்னன்னா, பெரிய பாகல் சரியாய் வரலை என்று மீண்டும் விதை போட்டு அப்போது தான் முளைத்த நாற்றுகளையும் காலி செய்துவிட்டன. 






ஆச்சரியமாய் இந்த முறை மாமரம் கோடை சீசன் முடிந்தவுடன் மறுபடி ஜூலையிலும் பூத்தது. டிசம்பர் குளிரில் கொத்து கொத்தாய் மாம்பழங்கள் சாப்பிட்டோம் J. கோடை சீசன் அளவுக்கு இல்லை என்றாலும் பதினைந்து கிலோ அளவுக்கு காய் கிடைத்தது. காய்க்கும் பருவத்தில் அங்கங்கே மாமரம் காய்ந்தது போல தெரிந்தது. அச்சோ, ஏதோ நோய் போல என்று நினைத்து பெரிதாய் ஏதும் பார்க்கவில்லை. காய் பறிக்க மேலே ஏறிய போது தான் அத்தனையும் பூச்சி தாக்குதல் என்று தெரிந்தது. கம்பளி பூச்சி மாதிரி, ஆனால் வித்தியாசமாய். உடம்பில் லேசாய் பட்டுவிட்டால் கூட ஊசி குத்தின மாதிரி ஒரு வலி. அப்படியே அந்த இடம் முழுவதும் தழுத்து விடுகிறது. இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் மாமரம் மொத்தமும் காலி ஆகி இருக்கும். நிறைய கிளைகளை வெட்டி மொத்தமாய் போட்டு கொளுத்தி காலி செய்தேன். இந்த கோடை சீசனுக்கு மறுபடி நிறைய பூத்து பிஞ்சி பிடித்திருக்கிறது.




மொத்தத்தில் போன ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை சீசன்) அடிப்படை காய்கறிகளில் நாட்டு ரகம் கொண்டு சிறப்பாய் அமைந்தது. கொடிகளை சாதாரணமாக எடுத்து ஆரம்பிக்காமல் இன்னும் கவனம் எடுத்து இந்த தை பட்டத்தில் செய்ய வேண்டும். இந்த தை பட்டத்திற்கு விதை போட்டு இப்போது தான் விதைகள் எல்லாம் முளைத்து விட்டன. சில புது வரவுகள், புது முயற்சிகள் இருக்கிறது. விவரமாய் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

40 comments:

  1. எல்லாமே நல்லா இருக்கு...ஊரில் எலுமிச்சை மரத்தில் அந்த புழுவை பார்த்திருக்கேன் அண்ணா..தக்காளி இந்த சைஸ் தானா? டேஸ்ட் எப்படி இருந்தது அண்ணா??

    ReplyDelete
    Replies
    1. எலுமிச்சையில் வேறு மாதிரி ஓன்று தான் வரும். இன்னும் கருப்பாய் இருக்கும். இவைகள் கொஞ்சம் பச்சை நிறம். இப்படி நான் பார்த்ததில்லை.

      ஆமாம். தக்காளி சைஸ் அது தான். டேஸ்ட் தக்காளி டேஸ்ட் தான். பெரிதாய் வித்தியாசம் தெரியவில்லை. அப்படியே எடுத்து சாப்பிட நன்றாக இருக்கிறது :)

      Delete
  2. தக்காளி மனதை கொள்ளைகொள்கிறது. கூடவே அதற்கான உழைப்பும் தெரியுது. மிளகாயும் அழகா இருக்கு.

    விதை போட்டு, தண்ணீர் ஊற்றி, வளர்த்ததற்கு ஒரு காயாவது காய்ப்போமே என்ற நன்றியுணர்ச்சிதான் அது ! ஹும், மாம்பழத்தின் படங்களையும் போட்டு பொறாமைகொள்ள வைத்திருக்கலாம் :)))

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்.

      //விதை போட்டு, தண்ணீர் ஊற்றி, வளர்த்ததற்கு ஒரு காயாவது காய்ப்போமே என்ற நன்றியுணர்ச்சிதான்// :)) இருக்கலாம்..

      மாம்பழம் படத்தை மிஸ் பண்ணிட்டேன். இணைத்து விடுகிறேன். சொல்லப்போனால் இன்னும் இரண்டு காய் பறிக்கும் பருவத்தில் கிடக்கிறது. இந்த வாரம் தான் பறிக்க வேண்டும். கோடை பூக்கள் பிஞ்சும் பிடித்து விட்டது.

      Delete
  3. cherry tomato taste superaga irrukirathu, chedi green house top varai poi vittadhu. kodi vagaigal nov,december-l nandraga varukirathu, naan avasarapattu sila chedigalai yeduthu pottu vitten, vittu vaitha chedical nandraga vanthirikkiradhu. neengal koria oodaga vikithathilthan vaithullen, avarai,beans bagil maatri vitten. thiru.paramesh avargal kooria palathania vithaippai seithullen. milagai december mathal irunthu niraya kaikirathu. ungal thottam visit plan seithirikkergala?

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். செர்ரி தக்காளி கொடி மாதிரி போய் கொண்டே இருக்கிறது. சரியாக கயிறு வைத்து அதில் சுற்றி விட்டால் தான் சரி போல.

      நவம்பர், டிசம்பர் தான் கொடி நன்றாக காய்க்கும் போல. இனி அடுத்த முறை அதற்கேற்றார் போல விதைக்க வேண்டும்.

      பலதானிய விதைப்பு பற்றி இன்னும் நான் பார்க்க வில்லை. பார்க்கிறேன்.

      இந்த மார்ச் வாக்கில் ஒரு தோட்டம் விசிட் திட்டமிடலாம் என்று இருக்கிறேன். சீக்கிரம் அறிவிக்கிறேன்.

      Delete
  4. Superb siva anna!enakkum milagayil a the problem.unga veetukku vanthu unga chedi eklam parthathu pola irukku.v in wresting to read ur blog.I became a great fan of ur garden,ur writing n ur photography. All the best anna!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி. உங்களிடம் போன வாரம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் புதிய தோட்டத்திற்கு எனது வாழ்த்துகள். ஏதும் உதவி, விவரம் தேவைப்பட்டால் மடல் அனுப்புங்கள்.

      Delete
  5. வா.வ் சூப்பரா இருக்கு சிவா. பாடுபாட்டதற்கு வீண்போகல. இந்த குட்டி தக்காளி இங்கு சும்மா சாப்பிடுவாங்க. சாலட்க்கு எடுப்பாங்க.நல்லாயிருக்கும். குடமிளகாய் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா.

      அங்கே சாலட் எல்லாம் நிறைய சாப்பிடுவீங்க இல்லையா.. இலை (கீரை), காய்கறி எல்லாம் போட்டு கலந்து அதில் இந்த தக்காளியில் போட்டால் ஆழகு தான்.

      Delete
  6. Anna capsicum eppadi valarppathu?slwhr can I get d seeds??

    ReplyDelete
    Replies
    1. சகோதரி. குடைமிளகாய் விதை ஹைப்ரிட் விதை (Omaxe brand). அதை http://omaxehybridseeds.com/ இணையத்தில் இருந்து வாங்கி கொள்ளலாம்.

      Delete
  7. கண்கொள்ளாகாச்சி.மிகவும் அருமை.

    ReplyDelete
  8. Hi siva,

    SUper. Can I get the small naatu thakali and grren brinjal?

    Thanks with Regards,
    Vallamuthu M.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.

      இவை அனைத்தும் நண்பர் பரமேசிடம் வாங்கிய விதைகள் தான். இந்த பதிவில் விவரம் கொடுத்துள்ளேன். பாருங்கள்
      http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html

      Delete
  9. சிவா சார் வணக்கம். எங்க வீட்டுல காலி இடம் இருக்குது கலிமன் வகை அதுல கத்திரி வெண்டை வெங்காயம் எல்லாம் வச்சோம் செடியும் சரியா வரல காயும் சரியா காய்க்கல தண்ணீர் தினமும் ஊத்தினோம் ஆனா ஒரு பலனும் இல்லை. அப்பா சொன்னாங்க கலிமன் இருகலா இருக்கு அதுதான், செம்மனும் மனலும் 2 லோடு அடிச்சு பாக்கலமுனு சொல்கிறார், ஆனா எனக்கு எனமோ மன்னுல சத்து இல்லனு தோனுது எதாவது ஐடியா சொல்லுங்க சிவா சார்

    ReplyDelete
    Replies

    1. களிமண் என்றால், செம்மண்ணா இல்லை கரிசல் மண்ணா? ஆற்று மணல் கலப்பதால் மண்ணின் இறுகிய தன்மை கொஞ்சம் குறையும். விளைச்சல் மற்ற காரணிகளை சார்ந்தும் இருக்கிறது.

      அந்த இடத்தில் எவ்வளவு நேரம் வெயில் படும் என்று கூற முடியுமா? விதை எங்கு வாங்கினீர்கள்? எவ்வளவு நாள் கழித்து விதைத்தீர்கள் ?

      Delete
  10. Thakkali paarka arumaiyaga ulladhu Anna, vaazhthukal. Ungal minnanjal mugavariyai pagirndhukolla mudiyuma?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி.

      என்னுடைய மெயில் ஐடி விவரம் மேலே ப்ளாக் தலைப்பிலேயே கொடுத்திருக்கிறேன் (thooddamsiva@gmail.com).

      Delete
  11. hi brother vivasayam romba enaku pudikum., unga ovvoru post padichi paathen. romba naalaga unga blog note panni vachiruken. romba nalla iruku,

    congrats,,

    ReplyDelete
  12. உங்கள் பதிவுகள் ஒரு வருடங்களாக பார்த்து வருகிறேன் நன்றி

    ReplyDelete
  13. வணக்கம் சிவா,
    நான் உங்களின் ப்ளாக் பக்கத்தை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    நான் இப்போது சென்னையில் வசித்து வருகிறேன். வாடகை வீடு என்பதால் மொட்டை மாடியை உபயோகிக்க வீடு owner அனுமதிக்க மாட்டார்கள்.
    எனவே ஒரு மிகச்சிறிய பால்கனியில் முயற்சி செய்து இருக்கிறேன். நிறைய grow bag வைக்க முடியாததால், சிறிய பெயிண்ட் பக்கெட் வைத்து முயற்சியை ஆரம்பித்து இருக்கேன்.

    நன்றி சிவா
    ஒரு சண்டே அன்று போன் பண்ணி உங்களுடன் பேசுகிறேன்.

    ரமேஷ்,
    சென்னை

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. சின்ன இடம் இருந்தாலும் கீரை மாதிரி பயனுள்ள செடிகள் வளர்க்கலாம். தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள். முடிந்தால் மாடியில் கொஞ்சமாக வைக்க முடியுமா (ஓனர் அனுமதியுடன்) என்று பாருங்கள். அவர்க்கும் கொஞ்சம் கீரை, காய்கறி எல்லாம் கொடுக்கலாம் :)

      Delete
  14. Sir u r really great. Ungaluku theyriyira ovvoru visayathaium ellarum share pandringa. Nanum sekkiram enga new home LA gardening start pana poren sir. Nenga than ena kandipa guide pananum. Unga postings lam padichu na unga great fan aagiten.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your words :)

      Once you are about to start the garden, please share your queries. Will happy to answer and provide whatever guidance I can give.

      Delete
  15. Siva.. The Boss, I am just a fresher for this Terrace Gardening, planted Tomato, Avarai Chedi, Beans, Peerkan before 20 days in my Terrace and plants are all fine and in good shape, but i fear of rats, which may cause damage to Tomato plants especially, please suggest me a way to get rid of Rats..

    ReplyDelete
    Replies
    1. Sathish. All the best for your new garden. For rats, just go with the usual trap method. Don't go with any poision. But generally rat won't do any damage. Are they doing any damage to your garden?

      Delete
  16. கீரை/ கொத்துமல்லி ஈஸியா வளரும்னு சொல்லறாங்க.... எனக்கு ரொம்ப டிமிக்கி கொடுக்குதே�� அங்கொன்றும், இங்கொன்றுமாக தான் வளருது.. என்ன செய்வது?
    என்னவிதமான கலவை இடுவது?
    சிறுகீரை ஆரம்பத்திலேயே சாய்ந்து விடுகிறது
    எவ்வாறு பராமரிப்து? உதவி ப்ளீஸ் ��

    ReplyDelete
    Replies
    1. கொத்தமல்லி நல்ல விதைகளாக இருந்தால் மட்டுமே எல்லாம் முளைக்கும். காலாவதியான விதைகள் சுத்தமாக முளைப்பதில்லை. விதைகள் எங்கே வாங்கினீர்கள்?

      கீரைக்கு பாத்திகளில் கலவையாக தூவாமல் ஒரு நேர் கோட்டில் தூவி வந்தால் நீர் ஊற்ற இடம் இருக்கும். கீரையும் சாயாது. கீரை வளர்ப்பது சம்பந்தமாக ஒரு வீடியோ தயார் செய்து கொண்டிருக்கிறேன். சீக்கிரம் கொடுக்கிறேன்.

      Delete