Sunday, October 25, 2015

மாடித் தோட்டம் – Part-2 (Growing Media – வளர்ப்பு ஊடகம்)



விகடனில் எனது ப்ளாக் பற்றி பார்த்து வந்த சில அழைப்புகளை வைத்து இன்றைய ‘மாடித்தோட்டம்’ நிலவரம் பற்றி நிறைய புரிந்து கொள்ள முடிந்தது. ‘பிதாமகன்’ சூர்யா ரேஞ்சில் ‘வாங்க சார். வாங்க. விட்டா கிடைக்காது. போனா வராது’ என்று மாடித் தோட்டம் அமைத்துக் கொடுக்க கிளம்பி இருக்கும் கூட்டம் ஒரு புறம், 36 வயதினிலே பார்த்து விட்டு எப்படியும் சில கல்யாண வீட்டு ஆர்டர்களை பிடித்தே தீருவது என்று கூட்டம் மறுபுறம். இவர்களுக்கு இடையில் என்னை போல ‘நம்மளையும் எல்லாவற்றுக்கும் அலைய விட்ருவாய்ங்களோ’ என்று கவலையில் ஒரு கூட்டம்.

சில அழைப்புகளை இங்கே பதிகிறேன். யாரையும் புண்படுத்தவோ, கிண்டல் செய்யவோ பதியவில்லை. இப்போதைய நிலவரத்தை புரிந்து கொள்ளவே பதிகிறேன்.  

அழைப்பு - 1     

20 ஆயிரம் செலவு செய்தேன். பத்துக்கு பத்து அளவில் Share Net  எல்லாம் அமைத்து இருபது பையில் செடியோடு வைத்து விட்டு போனார்கள். இரண்டு வாரம் நல்லா இருந்த செடிகள் இப்போது வளர்ச்சியே இல்லாம நிக்குது. ஏன்னே தெரியல’

பைகளில் என்ன என்ன கலந்தார்கள் என்று தெரியுமா? என்று கேட்டதற்கு ‘தெரியலையே. எல்லாமே கலந்து கொண்டு வந்து அப்படியே செட் செய்து விட்டு போய்விட்டார்கள். கேட்கவும் இல்லை. இப்போது போனில் அழைத்தால் எடுக்க மாட்டேங்கிறார்கள்.’

அழைப்பு – 2

3700 ரூபாய் வாங்கிக் கொண்டு இருபது பைகளில் செடியோடு வைத்து விட்டு போனார்கள். செடி எல்லாமே பழுத்து போய் வாடி நிற்கிறது. என்ன செய்றது’

என்னிடம் இருந்து அதே கேள்வி “பைகளில் என்ன என்ன கலந்தார்கள் என்று தெரியுமா?”

“வெறும் களிமண் தான். கிளறி பார்த்தால் கண்ணாடி சில்லு எல்லாம் இருக்குது. அவர்களை அழைத்துப் பார்த்தால் எடுக்க மாட்டேன்கிறார்கள்’

கொடுமைக்கு எங்கோ ரோட்டோரத்தில் உள்ள மண்ணை பைகளில் நிரப்பி 3700 ரூபாயை வாங்கிக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

அழைப்பு – 3

“முளைத்து ரெண்டு வாரமா நல்லா தான் வந்தது. அப்புறம் அப்படியே நிற்கிறது”

அதே கேள்வி “பையில் என்னவெல்லாம் கலந்து வைத்தீர்கள் மேடம்?”

“காயிர் பித் மட்டும் தான் சார்”

“வெறும் காயிர் பித் மட்டும் தானா. அப்புறம் உரம் கூட போடவில்லையா?”

“இல்லைங்க. அப்படி தான் சொல்லிக் கொடுத்தாங்க”

இதற்கு பெயர் தான் உயிரோடு வைத்து கொல்வது. பாவங்க அந்த செடி, சீக்கிரம் கொஞ்சம் மண்புழு உரம் போட்டு விடுங்க என்று சொல்லி வைத்தேன்.

அழைப்பு - 4

மேலே உள்ள அழைப்புகளை எல்லாம் விட நான் மிகவும் அதிர்ச்சியான ஒரு அழைப்பு

“விகடன்ல உங்க பேட்டி பார்த்தேன் சார். அந்த பச்சக் கலர்ல பை எல்லாம் இருக்குது இல்லையா. அது எல்லாம் எங்கே சார் கிடைக்கும். அதுல மண் போட்டா செடி நல்லா வருமா சார். நல்லா லாபம் வருமா சார் (யாருக்கு???)”

அவர் கேட்கும் தோரனையை பார்த்து ‘வாழ்க்கைல செடியே வளர்த்திர்க்க மாட்டார்’ என்ற ஒரு டவுட்டில் “எதுக்கு கேக்கறீங்க” என்று கேட்டேன்.

“மாடித் தோட்டம் அமைச்சி கொடுக்கறத ஒரு பிசினஸ் மாதிரி பண்ணலாம்னு இருக்கேன். நல்லா போவுதா சார்”  என்றார்

“கவலையே படாதீங்க. உங்களுக்காக தான் பல கஸ்டமர்ஸ் வெயிட்டிங். சீக்கிரம் வந்து ஜோதில ஐக்கியமாகுங்க. லேட் பண்ணாதீங்க. அலர்ட் ஆகி கூட்டம் கலைஞ்சிற போவுது” என்று சொல்லி வைத்தேன்.

மேலே கூறிய யாரையும் குற்றம் சொல்ல முடியாது. நான் முன்பு கூறிய மாதிரி நிறைய பேருக்கு தோட்டம் மீது நிஜமான ஈடுப்பாட்டை விட, எங்க வீட்டிலும் மாடித் தோட்டம் இருக்கு, நாங்களும் ஆர்கானிக் காய்கறி பறிக்கிறோம் என்ற கூட்டத்தில் உறுப்பினராய் சேரும் ஆர்வம் மட்டுமே இருக்கிறது. செடிகளைப் பற்றியோ, தோட்டம் பற்றியோ சில அடிப்படை புரிதல்களை தெரிந்து கொள்ளாமல் ஆரம்பித்து தோல்வியில் முடிகிறது.  உண்மையாகவே ஆர்வம் இருப்பவர்கள் சிலர், லேகியம் விற்கும் கூட்டத்திடம் மாட்டி தப்பு தப்பாய் முயற்சி செய்து தோல்வியில் முடிகிறது.

எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம்.

இங்கே கோவையில் மாடித்தோட்டம் கம்பெனிகளுக்கு குறைவு கிடையாது. தொடக்கத்தில் இங்கே ஒரு கண்காட்சியில் பார்த்து, ஒரு கம்பெனிக்கு நேரில் போய் விசாரித்தேன். 3/4 அடி அளவில் ஒரு Polythene Grow Bag (இருபது ரூபாய் பெறும்), அதன் உள்ளே ஒரு கிலோ அளவில் (800 grams) ஒரு காயிர் பித் கட்டி (இது ஒரு இருபது ரூபாய்). அது தவிர மேகி நூடுல்ஸ் உள்ளே சின்னதாய் பவுச் இருக்குமே அது மாதிரி ஒரு ஐந்து பவுச். என்னவென்று கேட்டதற்கு கடல்பாசி சாறு (extract)  என்றார்கள்.  அப்புறம் பத்து ரூபாய் விதை பாக்கெட்டை பத்தாய் பிரித்து அதில் ஒரு விதை பாக்கெட். எல்லாம் சேர்த்து விலை வெறும் Rs.200 தான்.  


வெறுமனே காயிர் பித்தில் செடியை வைத்து வாரம் ஒரு முறை அந்த பவுச்சில் இருக்கும் சாற்றை நீரில் கலந்து விட்டால் போதும் என்றார்கள். அஞ்சு பாக்கெட் என்றால் ஐந்து வாரம் தான் வரும். அஞ்சு வாரத்திலேயே காய்க்கிற மாதிரி ஏதும் கத்தரி, தக்காளி விதை கண்டுபிடித்திருக்கிறார்களோ என்ற டவுட்டில் ‘அஞ்சு வாரத்துக்கு அப்புறம் மேடம் என்ன செய்ய. அதுக்குள்ளே செடி எல்லாம் காய்க்காதே’ என்று கேட்டேன். ‘அதுக்கு தான் சார் இன்னொரு பவுடர் இருக்கு’. என்று ஆம்வே பாட்டில் மாதிரி ஒன்றை எடுத்தார்கள்’ (எந்த அமேசான் காட்டில் இருந்து இந்த அரியவகை முலிகைகளை கொண்டு வருகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்). ‘இத ஒரு ஸ்பூன் எடுத்து வாரம் ஒரு முறை நீரில் கரைத்து விட்டா போதும்’ என்றார்கள். ‘ஆர்கானிக்’ தான் என்றார்கள் (இத சொல்லலன்னா நாங்க எல்லாம் தெரிச்சி ஓடிருவோம்னு தெரியும் போல). அங்கே Booster, Stimulant, Shield என்ற பெயரில் எக்கச்சக்க ஐட்டங்கள் கூறினார்கள். நான் செடி வளர்க்க போவது எங்க வீட்டு மொட்டை மாடியிலா இல்லை International Space Station-னிலா என்று ஒரு சந்தேகம் வந்து போனது. எவனையும் சொந்தமாய் சிந்திக்க விடக்கூடாது, நாம் வளர்க்கும் ஒவ்வொரு செடிக்கும் அவர்களை நம்பியே இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அப்படி என்ன தான் அந்த கடல்பாசி சாறு என்று தெரிந்து கொள்ள ஒரே ஒரு Kit மட்டும் வாங்கி வந்தேன்.

இவர்கள் தான் கோவையின் மாடித்தோட்ட முன்னோடிகள். ‘மாடித்தோட்டத்தை உய்விக்க வந்த உத்தமரே’ என்று சீக்கிரம் யாரேனும் பட்டம் இவர்களுக்கு கொடுக்கலாம் (இல்லை ஏற்கனவே கொடுத்திருக்கலாம்). இப்படி பட்டவர்களிடம் என்னை போல தொடக்கத்தில் சிக்குண்டு போனவர்கள் பட்டியல் நீளமாய் இருக்கும்.  


     
மேலே சொன்ன சம்பவங்கள் போதும் என்று நினைக்கிறேன். இப்போது பதிவுக்குள் வரலாம். மாடித் தோட்டம் தொடங்கும் அனைவருக்கும் வரும் முதல் கேள்வி, நான் எதை எல்லாம் கலந்து வளர்ப்பு மீடியா தயார் செய்ய வேண்டும் என்பது தான். இது தான் நம் தோட்டத்தின் முதுகெலும்பு எனலாம்.    

சிலர் Grow Bag-ல் வெறும் செம்மண், மணல் கலந்து ரோஸ் தொட்டி வைப்பது போலவே ஆரம்பித்து தோல்வியில் முடிகிறது (நானும் கூட தொடக்கத்தில் இதை செய்திருக்கிறேன்). செம்மண், மணல் மட்டும் மாடியில் வைத்து ஆரம்பித்தால், நீர் ஊற்ற ஊற்ற மண் இறுகி, செடி வளர்ச்சி இல்லாமல் போய் விடும். மாடித் தோட்டத்திற்கு என்று குறிப்பிட்டு இப்படித் தான் வளர்ப்பு மீடியா இருக்க வேண்டும் என்று யாரும் வரையறுக்க வில்லை. அவரவருக்கு ஒரு கலவை, அதில் ஓரளவுக்கு விலை குறைவாகவும் அதே சமயத்தில் நல்ல விளைச்சலும் கொடுக்கும் கலவையை எடுத்துக் கொள்கிறோம்.

வீட்டுத் தோட்டம் என்று போகும்போது அதை ஆர்கானிக் முறையில் அமைப்பது மிக அவசியம். NPK போன்ற சில இரசாயன உரங்களை பயன்படுத்தியும் சிலர் செய்கிறார்கள். பொழுதுபோக்கு (Hobby) என்ற வகையில் அது ஒன்றும் தப்பில்லை. அவர்கள் இரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதை மட்டும் தவிர்த்து கொள்கிறார்கள். ஆனால் முழுவதுமே இயற்கை முறையில் தோட்டம் அமைக்கும் போது ஒரு முழு திருப்தி கிடைக்கிறது.

இயற்கை முறை எனும் போது நமக்கு நிறைய மண்புழு உரம் தேவைப்படுகிறது. நான் இது வரை மண்புழு உரம் தவிர வேறு ஒன்றும் பயன்படுத்தியதில்லை. தேவைப்பட்டதும் இல்லை. இயற்கை உரம் என்ற பெயரில் இப்போது கடைகளிலும், நர்சரிகளிலும் விதவிதமான உரங்கள் கிடைக்கிறது. கொஞ்சம் சாம்பலும், அதில் கொஞ்சம் இரசாயன NPK உரத்தை கரைத்து கலந்து விட்டால் தெரியவா போகிறது. போட்டால் செடி நன்றாக தான் வரும். அதனால் முடிந்த அளவுக்கு வெறும் மண்புழு உரம் கொண்டு அமைத்தால் போதும். நாமே பெரிய அளவில் காய்கறி கழிவுகளை கொண்டோ, மக்கிய சருகுகளை கொண்டோ உரம் தயாரிக்க முடிந்தால் அதையும் பயன்படுத்தலாம்.

அடுத்ததாக செம்மண். ஒரு செடி எல்லா விதத்திலும் நன்றாக வளர (வளர்ச்சி, பூப்பது, காய் பிடிப்பது, விளைச்சல்) கிட்டதட்ட 14  வித தனிமங்கள் தேவைப் படுகிறது. மண்புழு உரத்தில் அவை எல்லாம் இருக்கும் என்று கூற முடியாது. அப்படி எதாவது ஓன்று குறையும் பட்சத்தில் செடி ஏதாவது குறைவை காட்ட ஆரம்பிக்கும் (இலை பழுத்து போவது, பூ உதிர்வது, காய் வெம்பி போவது). அவை எல்லாமும் மண்ணில் இருக்கிறது. அதனால் தான் நல்ல செறிவுள்ள மண்ணில் வளர்க்கும் போது நாம் எதைப் பற்றியும் கவலைப்பட தேவை இல்லை. நாம் மாடித் தோட்டம் வளர்ப்பு ஊடகத்தில் (Growing Media) கொஞ்சம் செம்மண் கலந்து கொண்டால் தேவையான தனிமங்களை செடி அதில் இருந்து எடுத்துக் கொள்ளும்.

இப்போது ஒவ்வொன்றையும் எந்த விகிதத்தில் கலந்து நமது வளர்ப்பு ஊடகம் தயாரிப்பது என்பது அடுத்த கேள்வி. மாடித்தோட்டம் என்பது ஊடகங்களால் மாடியை விட மிக உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, தோட்டம் பொருட்கள் விலை எல்லாம் எதிர்பார்த்தது போலவே எகிறி விட்டது. இன்று Rs.100-க்கு வாங்கும் 5Kg Coir Pith Block, ஒரு வருடத்திற்கு முன்பு வரை Rs.50-க்கு கிடைத்தது. TNAU-ல் கிலோ Rs.5-க்கு ஒரு வருடத்திற்கு முன் கிடைத்த மண்புழு உரம், இப்போது கிலோ Rs.10. அதனால் நாம் தயாரிக்கும் ஊடகம் செடிக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதாகவும், அதே சமயத்தில் விலை அதிகமாக ஆகாதவாறும் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

“பொழுதுபோக்காக செய்யும் விசயத்துக்கு விலை எல்லாம் பார்க்க கூடாது” “நம்ம வீட்டிலேயே ஆரோக்கியமான காய்கறி கிடைக்குது. கணக்கு எல்லாம் பார்க்க கூடாது” என்பதெல்லாம் வியாபார உலகத்திற்கு மட்டுமே தேவையான ஒரு விவாதம். Rs.200 செலவு செய்து ‘Growing Kit’ என்ற பெயரில் ஒரே ஒரு பையை வாங்கி அதில் பத்து ரூபாய்க்கு கீரை வளர்ப்பது தேவையே இல்லை.  

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வளர்ப்பு ஊடகம் தயாரிக்க வேண்டும். எனது தோட்டத்தின் வளர்ப்பு மீடியா என்றால் grow bag-ன் அடி பாதி அளவு (ஒரு அடி grow bag என்றால் அரை அடி உயரத்திற்கு) வெறும் Coco Peat. மேல் பாதி Coco Peat, மண்புழு உரம், செம்மண் 2:2:1 விகிதத்தில் நன்றாக கலந்து நிரப்பிக் கொள்வது. எந்த விதமான Coco Peat ப்ளாக் என்றாலும் சிறியதாக உடைத்து ஒரு பக்கெட் நீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து கையால் பிழிந்து எடுத்து பயன்படுத்தவும். Low EC, High EC, Washed, Un-Washed என்று நம்மை குழப்ப எக்கச்சக்க வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். Low-EC, Washed  ப்ளாக் என்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம். நான் இது வரை எது மலிவாக கிடைக்கிறதோ அதை வாங்கிக் கொள்வேன். எந்த ப்ளாக் வாங்கினாலும் ஒரு வாஷ் செய்தால் போதும். செடி வளர்ந்து வரும் போது வாரத்திற்கு ஒரு முறை, ஒரு உள்ளங்கை பாதி அளவுக்கு மண்புழு உரம் தூவி நீருற்றி விடவும். செடி பூக்க ஆரம்பித்ததில் இருந்து வாரம் ஒரு முறை ஒரு உள்ளங்கை அளவுக்கு மண்புழு உரம் போட்டு நீருற்றி விடவும். இதை தவிர உர மேலாண்மைக்கு நான் வேறு ஏதும் செய்வதில்லை.

எனது வளர்ப்பு ஊடகம் விகிதம் சரி தானா. இல்லை இதை விகிதம் குறைவாக மாற்றி (இன்னும் கொஞ்சம் விலை குறைவாக) விளைச்சல் எடுக்க முடியுமா என்று சின்னதாய் ஒரு ஆராய்ச்சி செய்து பார்த்தேன். மண்புழு உரம் மட்டும், செம்மண் மட்டும், மண்புழு உரம் + செம்மண் சம பங்கு இப்படி பல கலவைகளை எடுத்து ஒரே மாதிரியான செடிகளை வைத்து வளர்த்து பார்த்தேன்.

இதன் கூட சுபிக்ஷா ஆர்கானிக் (முந்தைய ‘Arjun Grow Bags’)  முறை ஒன்றையும் சேர்த்துக் கொண்டேன் (சுபிக்ஷா ஆர்கானிக் நிறுவனர் அர்ஜுன் அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட ஒரு நல்லெண்ணம் உண்டு. இங்கே மாடித்தோட்டம் நிறுவனம் என்ற பெயரில் ஏகப்பட்ட கொள்ளை நிறுவனங்களுக்கு மத்தியில் உண்மையாகவே ஆர்வம் கொண்டு நிறைய முயற்சி செய்கிறார். நியாயமான விலையிலும் கொடுக்கிறார். அதை பிறகு ஒரு பதிவில் விவரமாக பகிர்ந்து கொள்கிறேன்). சுபிக்ஷா ஆர்கானிக் பரிந்துரைப்பது, வெறும் காயிர் பித் மட்டும் பைகளில் நிரப்பிக் கொள்வது (Growing Media என்று ஓன்று கிடையாது) , ஒவ்வொரு முறை செடிக்கு நீரூற்றும் போதும் பாதி உள்ளங்கை அளவு மண்புழு உரமும், அதில் பாதி அளவு இயற்கை உரமும் (அவர்களே அதை கொடுகிறார்கள். கிலோ Rs.30. கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, பஞ்சகாவியா கலந்தது என்றார்கள்) தூவி தண்ணீர் விட்டு வந்தால் போதும் என்றார்கள். எனக்கு நம்பிக்கை இல்லை (இதை அவரிடமே பேசி இருக்கிறேன்). சரி அதையும் தான் செய்து பார்ப்போமே என்று சேர்த்துக் கொண்டேன்.

நான் எடுத்துக் கொண்ட கலவையும், அதன் முடிவுகளும் கீழே. வெறும் மண்புழு உரம், வெறும் செம்மண் மட்டும் உள்ள கலவையில் செடிகள் சரியாய் வரவில்லை. சில செடிகள் நோய் வந்தது போல வளர்ச்சி இல்லாமல் போயின, சில சாம்பிளுக்கு இரண்டு காய் காய்த்து விட்டு அப்படியே நின்று போனது. உருப்படியாய் வந்தது A, B மற்றும் C கலவை. இதில் C தான் நான் வழக்கமாய் பயன்படுத்தும் கலவை. 



முடிவு,  சுபிக்க்ஷா ஆர்கானிக் கூறும் முறை சரியாக தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாய் உரம் இட்டு வரவேண்டும். தவிர அவர்கள் கொடுக்கும் இயற்கை உரமும் வாங்க வேண்டும். வளர்ப்பு ஊடகம் என்று தனியாக தயாரிக்க நேரம், இடம் இல்லாதவர்கள் இதை  முயற்சிக்கலாம். கலவை – B ( பையின் கால் பகுதி மட்டும் வளர்ப்பு ஊடகம்) செடியும் கிட்டத்தட்ட கலவை – C மாதிரி வளர்ச்சி சீராக இருந்தாலும், விளைச்சலில் கொஞ்சமாய் குறைவாக இருந்தது. கலவை – C (எனது வழக்கமான கலவை. கீழ் பாதி வெறும் காயிர் பித், மேல் பாதி 2:2:1 என்ற அளவில் காயிர் பித் : மண்புழு உரம் : செம்மண்) வழக்கம் போல செடிகள் நல்ல ஆரோக்கியமாக வந்தது. நல்ல விளைச்சலும் கூட.




A - Type

B - Type

C - Type

D - Type

E - Type

F - Type

G - Type
 

நீங்கள் கூட வேறு சில காம்பினேஷன் முயற்சித்து நல்ல பலன் பெற்றிருக்கலாம். அதையும் பகிர்ந்து கொள்ளலாம்.

வளர்ப்பு மீடியா தயார் செய்வது பற்றி ஒரு வீடியோ பதிவு தயார் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த வாரம் பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்)

43 comments:

  1. நல்ல விளக்கமான பதிவு. அருமை.

    ReplyDelete
  2. HI siva,
    Glad to introduce myself as an one of the beneficial of your blog i got this idea of starting terrace gardening 4 months before and surfed all websites and blogs. Though i have received ideas from few blogs yours is the one which gave me an in depth knowledge to hard stop surfing and execute my plan immediately.its 3 months old now and i have few plants, creepers and shrubs which are growing well and wanted to share the same with you as your blog influenced me for this.

    ReplyDelete
    Replies
    1. Happy to read your comment. Good to hear that some of my sharing helped you to start your new terrace garden. Please share any photos from your garden to my mail id, if possible. Happy gardening :)

      Delete
  3. கீரை செடிகளுக்கு தண்ணீர் எப்படி ஊற்ற வேண்டும் விளக்கமாக கூறவும்

    ReplyDelete
    Replies
    1. கீரைகளை விதைக்கும் போதே தூவி விடாமல், ஒரு கோடு மாதிரி போட்டு இடைவெளி விட்டு ஒரு நேர் கோட்டில் விதைக்க வேண்டும். அப்போது வளரும் போது ஒவ்வொன்றுக்கும் இடையில் இரண்டு இஞ்ச் அளவுக்கு இடைவெளியோடு வளரும். அந்த இடைவெளியில் மெதுவாக நீர் ஊற்றி வந்தால் கீரை செடிகளுக்கு பாதிப்பு இல்லாமல் வளர்க்கலாம்.

      Delete
    2. நன்றி சிவா சார் இதற்கு முன் நான் அப்படியே விதைகளை தூவி முளைத்தஉடன் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தேன் எல்லா செடிகளும் படுத்துவிட்டது இனி உங்கள் ஆலோசனை படி முயற்ச்சி செய்கிரென், உங்கள் ஆலோசனைகளூக்கு மீண்டும் ஒருமுறை நன்றி

      Delete
  4. நல்ல பதிவு அண்ணா... மற்றவர்களின் வியாபார யுக்திகளை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அபி. அந்த மாதிரி வியாபார உத்திகளை தெரிந்தும் நிறைய பேர் ஏமாறுகிறார்கள். அது தான் இன்றைய நிலைமை.

      Delete
  5. உங்கள் ஆராய்ச்சிக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள். மிகவும் பயனுள்ள பதிவு, ஒவ்வொரு பதிவும் அருமையாக இருக்கிறது. ஏமாற்றுபவர்களிடமிருந்து நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்,நல்ல விழிப்புனர்வுள்ள பதிவு சிவா. வீடியோ பதிவும் தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. வீடியோ பதிவு இன்னும் நிறைய கட்டிங் வொட்டிங் எல்லாம் இருக்கு. சீக்கிரம் ஆரம்பிக்கிறேன் :)

      Delete
  6. மிகவும் பயனுள்ளப் பதிவு. விரைவில் தொடங்குகிறேன்.

    ReplyDelete
  7. sariana tharunathil intha pathivai arambithrikerigal, thank u

    ReplyDelete
  8. Thank you so much.. Very useful.. Good research.. Hats off to you..

    ReplyDelete
  9. மிக அருமை, நண்பரே. அபாரமாக எழுதுகிறீர்கள். விவரமாக மட்டுமல்ல, அழகாகவும் விஷயங்களை தருகிறீர்கள். பலருக்கும் பயன் தரக்கூடிய பதிவாக உள்ளது. தொடரட்டும்...
    எனது வலைப்பதிவில் (www.anbudane.blogspot.com) மேலும் சில இடுகைகளை தந்துள்ளேன். கண்டு தங்களது கருத்துகளை பகிரவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. உங்கள் தோட்டத்தில் திராட்சை அருமை. மற்ற பதிவுகளையும் பார்க்கிறேன்.

      Delete
  10. எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் ! வீடியோவையும் பார்வையிட ஆவல் !

    ReplyDelete
    Replies
    1. ஏமாறுகிற கூட்டம் இருக்கிறவரை ஏமாற்றுகிற கூட்டம் இருக்க தான் செய்யும். :)

      வீடியோ இன்னும் எடிட்டிங் வேலை போய்கொண்டு தான் இருக்கிறது. இந்த வாரம் பதிவேற்ற முயற்சிக்கிறேன்

      Delete
  11. சிவா அண்ணா
    அருமையான பதிவு... ஒரு நல்ல வாய்ப்பை வீணாக்கிட்டீங்களேணா...
    ஆறே வாரங்களில் அருமையான மாடித்தோட்டம்.... உங்கள் வீட்டு மாடியை அமேசான் காடு போல மாற்றி தருகிறோம்... ஆறு வாரங்களுக்கு பிறகு உங்கள் மாடியில் விளையும் காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நாங்களே உதவுகிறோம்னு ஒரு விளம்பரம் கொடுத்திருந்தீங்கனா சதுரங்க வேட்டை ஹீரோ மாதிரி ஒரு ரவுண்டு வந்திருக்கலாம்...
    பதிவை படிச்சு சிரிக்கிறதா அழுவுறதான்னு தெரியல....
    ஏமாத்துரவங்க மேல தப்பா தேடிப்போய் ஏமாறவங்க மேல தப்பா... மாடித்தோட்டம்னா ஏதோ தொலைக்காட்சி பெட்டி போல நினைச்சுட்டாங்க போல ... யாரோ கொண்டு வந்து மாட்டி கொடுத்துட்டு போவாங்க நாம உக்காந்து பாத்தா போதும்னு நினைக்கிறாங்களோ... வளர்ப்பு பைக்குள்ள என்ன இருக்குதுனே தெரியாம எப்படி செடிய வளர்த்து கொண்டு வருவாங்க... நீங்க சொல்ற மாதிரியான வியாபாரிங்க மக்களுக்கு எந்த விவரமும் தெரிஞ்சிக்க விடுறதில்லை... தோட்டம் அமைக்கிறத ஏதோ ராக்கட் தொழில்நுட்பம் மாதிரி மெய்ண்டேன் பண்றாங்க.., முடிஞ்ச வரைக்கும் நாமளே பண்றது நல்லது முடியாத பட்சத்தில் உதவிக்கு ஒரு ஆள் வச்சுக்கலாம்.. ஆனா முழுக்க முழுக்க இன்னொருத்தரை நம்பி இருக்கிறதுக்கு சும்மா இருந்துக்கலாம்றது என்னோட கருத்து..


    நான் முதலில் காயிர் மண்புழு உரம் செம்மன் 2+1+2 என்ற விகிதத்தில் கலந்தேன்.. அதில் அவ்வளவாக வரவில்லை.. பிறகு 2+2+1 என்ற முறையில் கலந்த கலவையில் அருமையாக வருகிறது... இதுவரை பெரிதாக எந்த பிரச்சினையும் வரவில்லை..

    தக்காளி கத்தரி போன்ற அடிப்படை செடிகளின் ஆயுட்காலம் பலன் தரும் காலம் , எந்த சுழற்சி முறையில் பயிரிட்டால் வருடம் முழுவதும் பலன் பெறலாம் என்பது போன்ற தகவல்களை உங்கள் அனுபவத்தில் இருந்து பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்...
    நன்றி அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் இசக்கி.

      //சதுரங்க வேட்டை ஹீரோ மாதிரி ஒரு ரவுண்டு வந்திருக்கலாம்// நல்ல ஐடியா தான். ஆனா அங்கே ஏற்கனவே போட்டி அதிகமா இருக்கு :)

      //ஆறு வாரங்களுக்கு பிறகு உங்கள் மாடியில் விளையும் காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நாங்களே உதவுகிறோம்னு// முதல்ல கல்யாண வீட்டு ஆர்டர் புடிச்சி கொடுக்கலாம். அப்புறம் சிங்கபூர், மலேசியா, துபாய் என்று கிளைகள் ஆரம்பிக்கலாம்.

      நேற்று கூட இங்கே ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முன்னாடி திடீர் காய்கறி கடை. ஒரே கூட்டம். என்னடான்னு எட்டிபார்த்தா சின்னதா ஒரு அட்டையில் 'ஆர்கானிக் காய்கறிகள்' என்று எழுதி வச்சிருக்கான். பய பொழச்சுக்குவான் (அங்கே காரட், பீன்ஸ் வரை அப்படி ஒரு பிரெஷ். ஆர்கானிக் கடையில் எல்லாம் அப்படி கிடைப்பது இல்லை) :)

      //நான் முதலில் காயிர் மண்புழு உரம் செம்மன் 2+1+2 என்ற விகிதத்தில் கலந்தேன்.. அதில் அவ்வளவாக வரவில்லை.. பிறகு 2+2+1 என்ற முறையில் கலந்த கலவையில் அருமையாக வருகிறது... இதுவரை பெரிதாக எந்த பிரச்சினையும் வரவில்லை// எனக்கும் இந்த கலவை தான் செட் ஆகுது. ஒரு நண்பர் வெறும் கயிர்பித் + மண்புழு உரம் (1:1) என்ற விகிதத்தில் கலந்து செய்கிறேன். நன்றாக வருகிறது என்றார் (மண் அங்கே விலை அதிகமாம்). சில செடிகள் அதற்கும் நன்றாகவே வருகிறது.

      //தக்காளி கத்தரி போன்ற அடிப்படை செடிகளின் ஆயுட்காலம் பலன் தரும் காலம் , எந்த சுழற்சி முறையில் பயிரிட்டால் வருடம் முழுவதும் பலன் பெறலாம் என்பது போன்ற தகவல்களை உங்கள் அனுபவத்தில் இருந்து பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்// பண்ணலாம். இன்னும் கொஞ்சம் காலம் எடுத்து கற்றுக்கொண்டு பகிர்ந்து கொள்கிறேன். உன்னுடைய தோட்டத்தை பற்றி ஏதும் முகநூளில் எழுதினால் லிங்க் கொடு.

      Delete
  12. eppadi ippadi kalaukuringa oru masala post(message, humour , excitment) pottu thakkuringa , apart from your message i am waiting for your "eluthu nadai" . i am also from coimbatore planning to visit your garden . thank u

    ReplyDelete
    Replies
    1. நன்றி.
      பெயரை கூறாமல் சென்று விட்டீர்களே நண்பரே. தோட்டத்தில் இப்போது பெரிதாய் ஒன்றும் இல்லை. இப்போது தான் சீசன் முடிந்து வருகிறது. வரும் திட்டம் இருந்தால், தனி மடல் ஓன்று அனுப்புங்கள்.

      Delete
  13. இயற்கை விவசாயம், மாடித்தோட்டம் என்கிற பெயரில் வியாபார நோக்குடன் பொருட்களை விளம்பரபடுத்துகிறார்கள் என்ற உங்களது கருத்தை சரியாக புரிந்து கொள்ள முடிந்தது.என்னைப்போல இன்னும் பலருக்கும் இந்த துறையில் வழிகாட்டியாக நீங்கள்... இருக்கிறீர்கள்.தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  14. வணக்கம் அண்ணா,இந்த growing media குறித்து தான் குழப்பமாக இருந்தது இந்த பதிவிற்க்காக தான் காத்திருந்தேன் எளிமையாக தெளிவுபடுத்தி விட்டீர்கள் அருமை அண்ணா.(பி.கு.நான் பயிரிட்டவையில் சிறுகீரை,தட்டைக்காய் சிறிது அறுவடை செய்து விட்டேன்).திருப்பூர் சரவணக்குமார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணா. உங்கள் அறுவடைக்கு எனது வாழ்த்துகள். தொடருங்கள்.

      Delete
  15. வணக்கம் அண்ணா
    உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் மிகவும் பயனுள்ள பதிவுகள். நான் என்னுடைய வீட்டில் பால்கனியில் தக்காளி செடிகள் தொட்டியில் வளர்த்து வருகிறேன். அவை செழித்து வளர்ந்தாலும் நிழலில் இருப்பதால் பூக்கள் மலர்ந்து உதிர்ந்துவிடுகின்றன என நினைக்கிறேன். உரமாக மாட்டு எருவும் காய்கறிகள் கழிவுகளும் இடுகிறேன். வேறு என்ன செய்தால் பூ உதிராமல் காய் பிடிக்கும் என்று கூறுங்கள். தென்காசி அனு

    ReplyDelete
    Replies
    1. ஹாய் அனு,

      நிழலில் செடி இருப்பது தான் முதல் பிரச்சனை. முக்கியமாக காய்கறி செடிகளுக்கு நிறைய வெயில் வேண்டும். குறைந்தது ஒரு நான்கு மணி நேரமாவது உச்சி வெயில் பட்டால் தான் காய்க்கும். எவ்வளவு வெயில் செடிக்கு கிடைக்கும் என்று கூறமுடியுமா?

      Delete
  16. Sir, I have been coming to your blog for reference every now and then and impressed by the sincerity with which you tender your garden and share the information, for the benefit of enthusiasts. Thank you so much for the service you are doing in sharing the knowledge.

    ReplyDelete
  17. அருமையான பதிவு, என்னை போல மாடி தோட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு எப்படி ஆரம்பிப்பது தேங்காய் நார் இயற்கை எரிவாயு, மண் எவ்வ்வளவு விகிதத்தில் எப்படி கலக்க வேண்டும் இது போன்ற அடிப்படை உதவிகள் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம். நீங்கள் கேட்கும் விவரங்களை தான் இதன் அடுத்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன். பார்த்தீர்களா என்று தெரியவில்லை.

      Delete
  18. Siva Sir. Its amazing sir. After long back i am going to start to grow plants in my home whatever may be flower or vegetable crops it gives pleasant feeling to us. i missed that for about five years because no space but last one year i have been follow your blog and i am going start some flower plants at least in some container because no terrace also. You are fore father for us and we are so much thankful to you sir for your information.

    ReplyDelete
    Replies
    1. Thanks Madam for all your nice comment. Happy to hear that my posts are helping people like you. Keep visiting and share your comments. Post your queries also if any

      Delete
  19. மிக அருமை, நண்பரே.

    ReplyDelete
  20. நண்பரே, சென்னையில் செம்மண் கிடைப்பது கடினமாக உள்ளது. மாற்று உண்டோ?

    தாம்பரம் அருகில் கிடைக்கும் இடம் தெரிந்தால் கூறவும்

    ReplyDelete
  21. செம்மண் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படுகிறது?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, செம்மண் கிடைக்கவில்லை என்றால் வீட்டைச்சுற்றி நல்ல தோட்ட மண் இருந்தால் கலக்கலாம். மழை நேரம் என்பதால் இப்போது கிடைப்பது கடினம். கொஞ்சம் காலம் கழித்து விசாரித்து பாருங்கள். இங்கு ஒரு சிமெண்ட் மூடை அளவு மண் ஐம்பது ரூபாய் ஆகிறது.

      Delete
  22. Payin mel pathi matrum paiyin kaal pathi puriya villai..please explain

    ReplyDelete
    Replies
    1. ஒரு அடி உயர பை என்றால் ஒரு அரை அடி உயரத்திற்கு...

      Delete
    2. Hai, we can get red soil in Chithra nursery in Mudichur Road near Tambaram

      Delete