நமது மாடி தோட்டத்தில் இருந்து முதல் அறுவடை. சிறிய அளவிவில் ஒரு
சோதனை முயற்சியாக சில காய்கறிகளை மட்டும் வைத்து தொடங்கி இருந்தேன். இதில் கீரைகள்
ரொம்பவே எளிதாகவும், வேகமாகவும் வளர்கிறது. பாலக்கீரை, பருப்புக்கீரை, அரைக்கீரை
மூன்றையும் கீரைக்கான பெரிய பைகளில் போட்டிருந்தேன். ரொம்ப செழிப்பாக
வந்திருக்கிறது.
அடுத்து முள்ளங்கி. நான் இதுவரை கிழங்கு வகைகளில் உருளை, கேரட்,
பீட்ரூட் முயற்சி செய்திருக்கிறேன். இதில் பீட்ரூட் மட்டும் சொதப்பியது. பொதுவாய்
கிழங்கு வகைகளை தரையில் விதைக்கும் போது மண்ணின் தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது.
மண் இறுகி இருந்தால் சரியாக வருவதில்லை. நாம் மாடிதோட்டத்தில் Coir Pith
Based media பயன்படுத்தும் போது இது போன்ற கிழங்கு வளர ரொம்ப
எளிதாய் இருக்கிறது. மண் இறுகிப்போகும் பிரச்னை இருப்பதில்லை.
முள்ளங்கியை நான் இப்போது தான் முதன்முறையாக முயற்சி செய்கிறேன்.
முள்ளங்கி விதைகள் எளிதாகவே கிடைக்கிறது. (இப்போது கிடைத்த Do it Yourself
Kit-ல் கூட ஒரு பெரிய பாக்கெட் இருக்கிறது). முள்ளங்கியை
நேரடியாகவே நடலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருந்தால் போதும். நான் முதலில்
சின்னதாய் ஒரு பையிலும் (மொத்தம் எட்டு செடிகள்), பிறகு ஒரு நீண்ட பையிலும்
(மொத்தம் 24 செடிகள்) போட்டு விட்டேன்.
நீங்கள் படத்தில் பார்க்கும் நீண்ட பை, 3 அடிக்கு
1 ஒரு அடி அளவுள்ளது. இது சாதாரணமாக சப்போட்
இல்லாமல் வைக்க முடியாது. இங்கே அதனால் நான் சின்னதாய் ஒரு டிசைன் போட்டு, இங்கே நமது
நண்பர் ஒருவரின் சிறிய தொழிற்சாலையிலேயே கொடுத்து செய்து வாங்கி கொண்டேன். இந்த Frame
Structure வைத்து நாம் இன்னும் பெரிய பைகள் கூட (பத்து அடி
நீளம் கூட) அமைக்க முடியும். இந்த Frame-களை சில
கம்பெனிகள் பையோடு சேர்த்தே விற்கின்றன. ஆனால் விலை மிக அதிகமாக இருக்கிறது.
முள்ளங்கியின் முளைப்பு திறன் நன்றாகவே இருக்கிறது. கிட்டதட்ட எல்லாமே
முளைத்து வளர்ந்தது. முள்ளங்கியின் ஒரு சிறப்பு, முளைத்து இரண்டு மாதத்திலேயே
நமக்கு அறுவடைக்கு வந்துவிடுகிறது. கேரட் மாதிரி மாத கணக்கில் காத்துக்
கொண்டிருக்க வேண்டியதில்லை. செடிகள் முதலில் இருந்தே செழிப்பாக வளர்ந்தது. கொஞ்ச
நாளில் கிழங்கு உருவாவது மேலேயே தெரிய ஆரம்பித்தது. முள்ளங்கி கிழங்கு கொஞ்சம்
வெளியே தெரியும் படியே வருவதால் நமக்கு வசதி. கிழங்கு அறுவடைக்கு தயாரா என்பதை
நாம் கண்ணால் பார்த்தே, வேண்டும் போது பிடுங்கி கொள்ளலாம்.
ஒரே ஒரு முறை சின்ன பையில் இருந்த செடியில் பூச்சி தாக்குதல்
இருந்தது. ஆரஞ்சு நிறத்தில் கருப்பாய் புள்ளி போட்ட சின்னதாய் வண்டுக் கூட்டம்.
எல்லா இலைகளையும் எக்கச்சக்க முட்டைகளை போட்டு இருந்தன. இப்போது வேப்பிலை சாறு,
இஞ்ஜி சாறு எல்லாம் தெளித்து பார்த்து அலுத்து விட்டது. (இதில் இன்னும் நிறைய
கற்றுக்கொள்ள வேண்டிய இருக்கிறது). ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து மொத்தமாய்
எல்லா செடியின் இலைகளையும் கையால் கழுவி விட்டுவிட்டேன். பிரச்னை முடிந்தது. அதன்
பிறகு வரவே இல்லை. ( இந்த அவரை செடியில் பூச்சிகளுடன் போராட்டம் இந்த வருடம்
அதிகமாகவே இருக்கிறது. எங்கே இருந்து தான் செடியை கண்டுபிடிக்கின்றன என்று
தெரியவில்லை. நானும் குப்பையை அள்ளி போட்டு பார்த்தேன், இஞ்ஜி சாறு தெளித்து
பார்த்தேன், சோப்பு நீர் தெளித்து பார்த்தேன். ஒன்றும் வேலைக்காகவில்லை. நண்பர்கள்
விவரம் தெரிந்தால் உதவுங்கள்).