Thursday, January 23, 2014

மாடி தோட்டம் – DO IT YOURSELF KIT மற்றும் பயிற்சி வகுப்பு



சென்னை மற்றும் கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். போன பதிவில் மாடி தோட்டம் பற்றி பார்த்தோம். ஒரு சிறிய மாடி தோட்டம் அமைக்க (இருபது Grow Bags வைத்து) தேவையான எல்லா பொருட்களையும் அரசு ‘நீங்களே செய்து பாருங்கள் – ‘ என்ற பெயரில் தோட்டக்கலை துறை மூலமாக கொடுக்க ஒரு திட்டம் அறிவித்து இருக்கிறார்கள். விவரங்கள் கீழே.

இதில் இருபது பாலிதீன் Grow Bags, ஒவ்வொன்றின் உள்ளேயே அதற்கு தேவையான Coir Pith Block.ஒரு பெரிய பாலிதீன் தரை விரிப்பு ஓன்று. விதைகள், தெளிப்பான் என்று ஒரு பெரிய பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். இதன் விலை Rs.3300 என்றும், இதை 50% மானியத்தில் Rs.1650 ல் கொடுப்பதாக கூறுகிறார்கள். Coir Pith Block, Grow Bags, Nursery Tray என்று தனி தனியாய் தேடி அலையாமல் ஒரு முதல் முயற்சியாய் செய்து பார்க்க நினைப்பவர்களுக்கு பயன் படலாம்.   
       
இணையத்தில் உள்ள பதிவு செய்யும் முறையில் Bank details எல்லாம் கேட்டிருந்தார்கள். நான் இங்கே கோவில்பாளையம் யூனியன் ஆபீசை தொடர்பு கொண்டு நேரில் போய் பேசினேன். நான் ஒரு Kit க்கு பதிவு செய்தேன் (ஒருவர் ஐந்து வரை வாங்கலாம். அதாவது மொத்தம் நூறு Grow Bags) . இப்போதைக்கு பேரையும், முகவரியையும் கேட்டு பதிவு செய்து கொண்டார்கள். முன் பணம் ஏதும் செலுத்த தேவை இல்லை. எப்போது கொடுப்பார்கள், எப்படி கொடுப்பார்கள் என்று கேட்டதற்கு, இதை Contract எடுத்திருக்கும் நிறுவனம் பெப்ருவரி, மார்ச் மாதத்திற்குள் கொடுக்க கெடு இருப்பதாக கூறினார். வீட்டிலேயே கொடுத்தாலும் கொடுக்கலாம் என்றார். ஆனால் தெளிவாக விவரம் இல்லை. 

பொருள் வரும் வரை பணம் கொடுக்க தேவை இல்லை. அதனால் தைரியமாய் பதிவு செய்து விட்டேன். இது Rs.3300 க்கு மதிப்பு உடையதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் கொடுத்திருக்கும் சைஸ் Grow Bags ஓன்று Rs.30 தான் பெறும. இப்படி கணக்கு போட்டாலும், Rs.1650 க்கு நஷ்டமில்லை. அது, அந்த நிறுவனம் கொடுக்கும் தரத்திலும் இருக்கிறது. எப்படி இருந்தாலும், முதல் முயற்சியை செய்ய நினைப்பவர்களுக்கு பயன்படும். 

மேலும்  விவரங்களுக்கு,

http://tnhorticulture.tn.gov.in/do-it-yourself-kit
 











கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம் என்ற பெயரில் விகடன் நிறுவனம் இங்கே கோவையில் (2-Feb , ஞாயிறு) ஒரு அரை நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்துகிறார்கள். அனுமதி இலவசம் தான். நான் போகிறேன். இந்த மாதிரி பயிற்சிகளுக்கு போகும் போது கோவையில் உள்ள நிறுவனங்கள் பற்றி தெரியவரும், சில நேரம் அங்கே இருக்கும் Stalls மூலம் சில பொருட்கள், விவரங்கள் கிடைக்கும். அதனால் நான் போகிறேன். விருப்பம் இருக்கும் நண்பர்கள் (ஞாயிற்று கிழமை தான்) கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.   
     
இந்த இரண்டு தகவல்களையும் நமது ப்ளாக் நண்பர் தங்கவேல் maravalam ப்ளாக்-ல இருந்து என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவருக்கு நன்றி. Maravalam ப்ளாக் வின்சென்ட் அவர்களுக்கும் நன்றி.



Tuesday, January 21, 2014

மாடித் தோட்டம் – முதல் முயற்சி

2014-ல் சில புதிய முயற்சிகளை திட்டமிட்டிருக்கிறேன். அதில் முதலாவதாக, மாடி தோட்டம். போன வருடம் மாடியில் கொடி வகைகள் வளர்ப்பதர்க்கு ஒரு பந்தல் அமைத்து செய்த முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. தொட்டியில் நடும் போது பாகல், புடலை எல்லாம் முளைத்து நன்றாக தான் வந்தது. ஆனால் கொஞ்சம் வளர்ந்ததும் செடி சோர்வாக, வளர்ச்சி குன்றி, ஒரு கட்டத்தில் காய்ப்பதற்கு முன்னமே முற்றிய செடி போல் ஆகி காய்ந்து விட்டது. அதே நேரத்தில் கீழே வெறும் தரையில் வைத்த செடி எந்த கவனிப்பும் இல்லாமல் செழிப்பாக வந்தது. 

மாடி தோட்டத்தில் முக்கிய பிரச்சினை, மண் இறுகி போவது. நாம் என்ன தான் மணலையும், செம்மண்ணையும் கலந்து, தேவையான அளவு உரம், இலை மக்கு எல்லாம் போட்டு கலந்து எடுத்தாலும், நீர் ஊற்ற ஊற்ற மெதுவாக மண் இறுகி போகிறது. ரோஸ் மாதிரி செடிகள் தாக்கு பிடித்து விடுகின்றன. ஆனால் கீரை, காய்கறி செடிகள் திணற ஆரம்பிக்கிறது. மேலும், காற்றின் வேகமும் மேலே அதிகமாக இருப்பதால் இலைகள் வேகமாய் வறட்சி ஆகி வளர்ச்சி சரியாய் இருப்பதில்லை. 

முன்பு கலந்து கொண்ட ‘மாடி தோட்டம் ஒரு நாள் பயிற்சியில் இருந்து சில விவரங்களை சேகரித்து சின்னதாய் ஒரு மாடி தோட்டம் அமைக்க ஆரம்பித்திருக்கிறேன். 

மாடி தோட்டத்தில் மிக முக்கியமாய் மணலை விட்டுவிட்டு தேங்காய் நார் தூள் பயன்படுத்த வேண்டும்( Coir Pith / Coco Peat). தேங்காய் நாரில் இருந்து கயிறு திரிக்கும் தொழில்சாலைகளில், தேங்காய் நாரில் இருந்து பவுடர் போல உதிர்ந்து விழும் Saw Dust போன்ற பொருள் தான் இந்த Coir Pith. நாம் ஒரு தேங்காய் மட்டையை எடுத்து லேசாய் உதிர்த்து பார்த்தாலே தூசி போல கொட்டும். இந்த பவுடர் இப்போது நிறைய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. அங்கே இதை மண்ணிற்கு பதிலாக பயிர் வளர்க்க பயன்படுத்துகிறார்கள். இங்கே பொள்ளாச்சி பக்கத்தில் நிறைய தொழில்சாலைகள் இருக்கின்றன. இந்த பவுடரை Compress செய்து ஒரு கிலோ, ஐந்து கிலோ கேக் வடிவில் கிடைக்கிறது. 

Coir Pith block ஐ உடைத்து நீரில் ஒரு இரண்டு நிமிடம் ஊற வைத்தால் உதிர்ந்து விடுகிறது. தேங்காய் நார் தயாரிக்க பொதுவாய் Saline Water ல் ஊற வைக்க படுகிறது. இதனால் இந்த பவுடரில் கொஞ்சம் உப்பு தன்மையும், அதிகமாக Electrical Conductivity யும் இருக்கும். அப்படி இருந்தால் அது செடி வளர ஆகாது. இதை EC Value கொண்டு ‘Low EC block’ ‘High EC block’ என்று குறிப்பிடுகிறார்கள்.  மேலும் இந்த பவுடரை Compress செய்யவும் கொஞ்சம் bonding material பயன்படுவார்கள். இதை எல்லாம் நீக்க நாம் நீரில் ஊறவைத்து கொஞ்சம் கழுவி/அலசி எடுத்து கொள்வது நல்லது. அப்போது தான் செடி நன்றாக வரும். 
         
இந்த பவுடர் வெறும் ஊடகம் அவ்வளவு தான். அதில் செடிக்கு தேவையான எந்த கனிமங்களோ, சத்துகளோ கிடையாது. நீரை பிடித்து கொள்ளவும், செடியின் வேர் எளிதாய் போகவும் ஒரு நல்ல மீடியா. அவ்வளவு தான். அதனால் இந்த பவுடருடன், எதாவது Organic Compost மற்றும் கொஞ்சம் செம்மண் கலந்து நாம் தயார் செய்ய வேண்டும். எந்த விகிதத்தில் என்பது ஒவ்வொருவரும் வேறு வேறு விகிதம் சொல்கிறார்கள். நான் இரண்டு விதமான கலவைகள் எடுத்து முயற்சிக்கிறேன். ஓன்று, Coir Pith : Red Sand  : Vermi Compost 2:2:1 விகிதத்தில், இன்னொறு கலவை  Coir Pith : Red Sand: Vermi Compost : 2:1;2  விகிதத்தில். இரண்டிலும் வரும் செடியில் ஏதும் வித்தியாசம் வந்தால் பார்க்கலாம்.  தோட்டத்தில் இங்கே எதுவுமே இப்படி தான் என்று கிடையாது. எல்லாம் நம் முயற்சி தான். செடி ஒழுங்காய் வந்தால் அது வெற்றி தான்.  

இப்போது கலவை தயார். அடுத்தது செடி வைக்கும் தொட்டி.. மாடி தோட்டத்திற்கு என்று நிறைய வகைகளில் Grow Bags கிடைக்கிறது. நம்மிடம் இருக்கும் பழைய பிளாஸ்டிக் பக்கெட், பெயின்ட் டப்பா இருந்தாலும் பயன்படுத்தலாம். Grow Bags பயன்படுத்தும் போது முதலில் சில தேங்காய் மட்டைகளை ஒரு அடுக்கில் போட்டுவிட்டு பிறகு coir pith கலவையை கொட்டவும். இது நல்ல ஒரு அஸ்திவாரமாய் இருக்கும். கலவையை மேலே வரை கொட்டி விட்டு விதை போட வேண்டியது தான். கீரை விதை என்றால் மேல் அடுக்கில் லேசாய் தூவி, அதன் மேல் இன்னும் ஒரு அடுக்கு கலவையை தூவி விட்டால் போதும். 

முதல் கட்டமாய் கீரை வகைகள் சிலவும் (பாலக்கீரை, பருப்பு கீரை, புளிச்ச கீரை, சிறு கீரை, கொத்தமல்லி), முள்ளங்கி, கேரட் என்று சில கிழங்கு வகையும் போட்டிருக்கிறேன். கீரை வழக்கமாய் தரையில் வருவதை விட செழிப்பாக வளர்ந்திருக்கிறது. 
       
மாடி தோட்டம் பொதுவாய் Shade Net வைத்து ஒரு பசுமை குடில் போல (Green House) அமைத்து உருவாக்குகிறார்கள். முதல் மாடியில் தோட்டம் அமைக்க இது போன்ற அமைப்பு தேவை இல்லை என்று சொல்கிறார்கள். ரொம்ப உயரம் (இரண்டாவது மாடியும் அதற்கு மேலும்) போகும் போது வெயிலின் தாக்கமும், காற்றின் வேகமும் அதிகமாய் இருக்கும் போது கட்டாயம் இந்த பசுமை குடில் அமைப்பது தேவை. இங்கே சுற்றி வெறும் காலி இடம் என்பதால் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த முதல் மாடியிலேயே எனக்கு இந்த அமைப்பு தேவை படும். இப்போது இந்த தோட்டம் மாடிக்கும் கொஞ்சம் கீழே உள்ள இடத்தில் அமைத்திருக்கிறேன். சின்னதாய் ஒரு பசுமை குடில் அமைத்து சில முயற்சிகளை அடுத்து துவங்க வேண்டும். 

எல்லோருக்கும் வரும் இன்னொரு சந்தேகம், மாடி தோட்டம் என்றால் தண்ணீர் நம் வீட்டின் கான்ரீட் கூரையில் இறங்கி சேதம் ஆகிவிடுமோ என்று. நீர் தேங்கி இல்லாத வரை எந்த பிரச்னையும் இல்லை என்று தான் சொல்கிறார்கள். நான் பார்த்த சில பெரிய மாடி தோட்டங்களில் இதற்கான எந்த அமைப்பும் செய்யவில்லை. லேசாய் தண்ணீர் தெரிப்பதால் ஒன்றும் பாதகமில்லை. வேண்டும் என்றால் Plastic Paint மாதிரியோ, இல்லை என்றால் பெரிய பாலிதீன் விரிப்பு ஒன்றோ அமைத்துக் கொள்ளலாம். 
  
இந்த மாடி தோட்டத்திற்கு தேவையான Coir Pith Block, Grow Bag, Nursery Tray பற்றி கோவையை சுற்றி சில நிறுவனங்கள் பற்றி தகவல் சேகரித்து வைத்திருக்கிறேன். சீக்கிரம் அதை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.









பருப்பு கீரை

பாலக்கீரை

கொத்தமல்லி

முள்ளங்கி




Monday, December 30, 2013

தோட்ட உலா – டிசம்பர் 2013



அடுத்த சீசன் – ஜனவரி To ஜூன்
அடுத்த சீசனுக்கான காய்கறி தோட்டம் தயாராகி கொண்டிருக்கிறது. வழக்கம் போல ஒரு பட்டியல் போட்டு, ஒவ்வொரு காய்கறிக்கும் இட ஒதுக்கீடு போட்டு ஒரு Layout தயார் செய்தேன். பொதுவாய் டிசம்பர், ஜனவரி-ல் நாற்று எடுத்து விட்டால் வளர்ந்து மார்ச் வாக்கில் காய்க்க ஆரம்பிக்கும். ஏப்ரல் – ஜூன் வரை நல்ல  விளைச்சல் கிடைக்கும் (காய்கறியை பொறுத்து). நல்ல வெயில் காலம் என்பதால் விளைச்சல் நன்றாகவே இருக்கும். 2014- க்கான காய்கறி பட்டியல் என்று பார்த்தால்,
   
வழக்கமான காய்கறிகள் - தக்காளி, கத்தரி, மிளகாய், செடி அவரை, வெண்டை, புடலை, பாவற்காய், சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம்  

புதிதாய் சேர்த்திருக்கும் காய்கறிகள் – சுரை , மிதி பாவற்காய், தர்பூசணி (சிறியது), பீன்ஸ், முலாம் பழம் (Musk Melon), கேரளா சிறிய கார மிளகாய், தட்டை பயறு, முள்ளங்கி

இவற்றில் எத்தனை சரியாய் வருகிறதென்று பார்க்கலாம். தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற சிறிய விதை செடிகளை நாற்று எடுத்து நடலாம். அதற்கு Nursery Tray பயன்படுத்தலாம். இல்லை என்றால் தனியாய் ஒரு சிறிய பாத்தி தயார் செய்து நடலாம். ஓரளவுக்கு வளர்ந்த பிறகு எடுத்து தகுந்த இடைவெளி விட்டு பெரிய பாத்திகளில் நடலாம். நான் இந்த முறை தனியாய் ஒரு பாதியில் விதை போட்டு எடுத்து நட்டேன். அவரை, வெண்டை போன்ற பெரிய விதைகளை நேரடியாக தகுந்த இடைவெளி விட்டு விதைக்கலாம். 

பொதுவாய் மண்ணில் நேரடியாய் விதைக்கு போது முளைக்கும் விகிதம் கொஞ்சம் குறைவு. Nursery Tray-ல் வளர்க்கும் போது அந்த பிரச்னை வராது.  





இந்த மாத அறுவடை 

சின்ன நெல்லி – இந்த மரம் வைத்து இரண்டு வருடமாகிறது. இது வரை காய்க்கவில்லை. ‘உனக்கு இன்னும் ஒரு வருடம் தான் டைம். அதுக்குள்ள   காய்க்கலன்னா நீ காலிஎன்று கொஞ்சம் மிரட்டி வைத்திருந்தோம் :-). ஊரில் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க ‘மரம் காய்க்கலன்னா வெளக்குமாற வெச்சி மரத்த அடிக்கணுமாம். அது ரோசம் வந்து காய்ச்சிருமாம்:-). அதே மாதிரி, மரம்/செடி வைக்கும் போது ஒரு நாலணா,எட்டணா அந்த குழில போட்டு அப்புறம் செடிய வைக்கணும் என்பாங்க. அப்போ அது நெறைய காய்க்குமாம். பொழுதடைஞ்ச (இருட்டின) பிறகு மரத்தில் இருந்து ஒரு இலை பறித்தாலும் திட்டு விழும். மரம் தூங்கும் போது தொல்லை பண்ண கூடாது என்பார்கள். இதெல்லாம் அர்த்தமில்லாமல், காமெடியா தெரிந்தாலும், பெரியவங்க எவ்வளவு இயற்கையோடு ஒன்றிய ஒரு வாழ்க்கையை கொண்டிருந்தார்கள் என்று புரியும்.

நம்ம நெல்லியை போன வாரம் சும்மா பார்த்துக் கொண்டிருந்த போது, ஆச்சரியமாய் ஒரே ஒரு காய் கண்ணில் தட்டுபட்டது. இந்த வருடம் இந்த ஒரு காய் தான் காய்திருக்கிறது :-). வீட்டில் எல்லோருக்கும் ஒரே சந்தோசம். அடுத்த வருடம் நிறைய காய்க்கும் என்று நினைக்கிறேன்.         


   
எலுமிச்சை – இந்த மாதம் அறுவடை செய்தாகி விட்டது. ஐந்து கிலோ மொத்தம் கிடைத்து. இன்னும் கொஞ்சம் காய் கிடக்கிறது. இந்த எழுமிச்சையையும் அதன் விளைச்சலையும் பார்க்கும் எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி ‘என்ன உரம் போடுகிறீர்கள் என்று. இது வரை இந்த செடிக்கு விசேஷமாய் எந்த உரமுமோ, பூச்சி மருந்தோ அடித்து இல்லை. எப்போதாவது கொஞ்சம் மண்புழு உரம் (ஆறு மாதத்திற்கு ஒரு முறை) வைப்பதோடு சரி. அதனால் இந்த செடி நம்ம தோட்டத்தின் ஒரு தனித்துவமான செடியா போய் விட்டது.   


மிளகாய் – அடுத்த சீசனுக்காக பாத்தி ரெடி பண்ணுவதற்காக மொத்தமாய் பறித்து விட்டேன். இந்த முறை மிளகாய் விளைச்சல் கலக்கலோ கலக்கல். கடைசியாய் பறித்தது மொத்தம் ஒரு கிலோ வந்தது. பறிக்க கொஞ்சம் தாமதமாய் போனதால் கொஞ்சம் பழுத்து விட்டது. 


டெக்னாலஜி

Nursery Pouch
      இங்கே ஒரு நாள் தோட்டக் கலை பயிற்சிக்கு போன போது வாங்கினேன். Nursery Tray-க்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். அரிதான, விலை அதிகமான செடியின் விதையில் இருந்து நாற்று கொண்டு வர இதை பயன்படுத்தலாம். சாதாரணமாக நாற்று எடுக்கவும் பயன்படுத்தலாம். இது Coir Pith (தேங்காய் நார் தூள்) மற்றும் Compost (உரம்) கலந்து Compress செய்யபட்டு ஒரு மாத்திரை வடிவில் கிடைக்கிறது. கொஞ்சம் நீர் விட்டதும் உப்பி பெரிதாய் வரும். அதில் விதையை போட்டு கொஞ்சம் நீர் தெளித்து வந்தால் செடி அட்டகாசமாய் வளர்ந்து வரும். நன்றாய் வளர்ந்ததும் அப்படியே எடுத்து நட வேண்டியது தான். ஒரு வில்லையின் விலை 2 ரூபாய் தான்.  


  

2014 Plans

என்னுடைய நீண்ட கால திட்டம் மாடியில் பெரிதாய் ஒரு தோட்டம் அமைப்பது (Terrace Garden) . இதை 2015 திட்டமாக வைத்திருக்கிறேன். வெறுமனே மாடியில் செடி வைத்தால் சரியாய் வருவதில்லை. முக்கிய காரணம் அதிக வெயில் மற்றும் வேகமாய் காற்று அடிப்பது. அதனால் செடி சீக்கிரம் வறட்சி ஆகி விடுகிறது. வளர்ச்சியும் சரியாய் இல்லை. சாதாரணமாய் கீழே வரும் செடி, மாடியில் வைத்தால் சரியாய் வருவதில்லை. 

Terrace Garden-ன் முதல் கட்டமாய் 2014-ல் சிறியதாய் செய்து பார்க்க திட்டம். முக்கியமாய் Soilless Gardening பற்றி சில முயற்சிகள். Soilless Gardening என்றால் மணல் இல்லாமல் Coir Pith (தேங்காய் நார் தூள்) கொண்டு அமைப்பது. இதில் முக்கியமான நன்மை என்று பார்த்தால், எளிதாக செடி வளரும் (வேர் போக எளிது), வேண்டிய சத்துக்களை எளிதாய் எடுத்து கொள்ளும். கிழங்கு வகைகள் நன்றாக வரும். கீரைகள் நன்றாக வரும். பிரச்னை என்று பார்த்தால், Coir Pith–ல் சத்து எதுவுமே கிடையாது. வெறும் சக்கை தான். மண்ணில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் எதுவும் செடிக்கு கிடைக்காது. அத்தனை சத்துக்களையும் நாம் உரமாகவோ, மற்ற மீடியம் மூலமாகவோ கொடுக்க வேண்டும்.

இங்கே போன மாதம் Horti Tech 2013 ல் Coir Pith block கிடைத்தது. முதல் முயற்சியாக சில கிழங்கு வகை பூ செடிகள் (Gerbera, Dahlia) வைத்து விட்டிருக்கிறேன். சில செடிகள் முளைத்து விட்டன. நீண்ட கால செடிகளுக்கு Coir Pith based garden எப்படி வருகின்றது என்பதை இந்த வருடம் கற்று கொள்ள வேண்டும். பிறகு பெரிய அளவில் Terrace Garden அமைக்க ஆரம்பிக்கலாம். 

அடுத்த பதிவில் இதை பற்றி விவரமாய் எழுதுகிறேன்.