Monday, June 10, 2013

தோட்டம் 2012 – Part-3 (HITS – Vegetables)



தக்காளி, சின்ன வெங்காயம் விலை எல்லாம் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த பதிவு பொருத்தமானதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன் :-). போனவாரம் இங்கே தோட்டத்தில் ஒரு கிலோ போல சின்னவெங்காயம் கிடைத்தது. இன்னும் இரண்டு பாத்திகளில் வெங்காயம் தயாராக நிற்கிறது. கிலோ 100 விற்கும் போது இந்த மாதிரி ஒரே மூணு கிலோ கிடைத்தாலும் வீட்டில் ரொம்ப சந்தோசமா ஆகிடறாங்க (நமக்கு பாராட்டு வேற :-)). ஆனால் சில நேரம் தக்காளி காய்த்து கொட்டிக் கிடக்கும் போது, கடையில் ஒன்னரை கிலோ பத்து ரூபாய்க்கு வித்துக்கிட்டு இருக்கும். எது எப்படி என்றாலும், நம்ம வீட்டுத் தோட்டத்தில் இருந்து பறித்து சமைத்து சாப்பிடுவதில் ஒரு தனி சந்தோசம் இருக்கத் தான் செய்கிறது. போன வருடம் தோட்டத்தில் விளைந்த சில காய்கறி ஹிட்ஸ் இங்கே.

தோட்டத்தில் முதன்மை காய்கறிகளாக தக்காளி, கத்தரியை கூறலாம். இரண்டிலும்  நாட்டு ரகமும் உண்டு, ஹைப்ரிட் வகைகளும் உண்டு. பொதுவாய் கடைகளில் கிடைக்கும் விதைகள் ஹைப்ரிட் வகைகளாக தான் இருக்கின்றன. நாட்டு ரகம் வேண்டும் என்றால் கடையில் வாங்கும் பழத்தின் விதைகளை போட்டு உருவாக்கலாம். கத்தரியில் தான் நாட்டு ரகம் (வெள்ளை) கொண்டு வருவதற்குள் இரண்டு வருடம் ஆகிவிட்டது. கத்தரி வளர்ந்து காய்க்கவே நான்கு-ஐந்து மாதம் ஆகி விடும். ஆனால் நீண்ட நாள் காய்த்துகொண்டு கிடக்கும்.

இரண்டாவதாக முக்கிய காய்கறிகள் என்று பார்த்தால் வெண்டை, அவரையை கூறலாம். எல்லா பருவத்திலும் காய்க்கும். விதை, எல்லா உரக்கடைகளிலும், சில நர்சரி கார்டன்களிலும் கிடைக்கும். வெண்டை விதைத்து இரண்டு மாதத்திலேயே அறுவடை கிடைக்கும். கொஞ்சம் திட்டம் இட்டு விதைத்தால் வருடம் முழுவதும் வெண்டை, அவரைக்கு கடைக்கு செல்ல வேண்டியதில்லை  


முட்டை கோஸ், காலி ஃப்ளவர், கேரட் எல்லாம் ஒரு சோதனை முயற்சியாக செய்து பார்த்தது தான். எந்த வித பிரச்சனையும், நோயும் இல்லாமல் வந்தது ஆச்சரியம். இதன் விதைகள் பொதுவாக பொருள்காட்சி, கண்காட்சி நடக்கும் இடங்களில் விதை கடை இருந்தால் அங்கே கிடைக்கிறது. விளைச்சல் குறைவாக தான் கிடைக்கும். அதை விளைவிக்க ஆகும் நாட்களை கணக்கு பார்த்தால், ரெகுலராக தோட்டத்தில் வளர்ப்பது தேவை இல்லை தான் (நிறைய இடம் இருந்தால் போட்டு விடலாம்).



 தேங்காய், இடம் இருந்தால் இரண்டு தென்னை வைத்து விடலாம். சிலர் வீட்டில் தென்னை வளர்ப்பதில் சிக்கல் இருப்பதாக சொல்கிறார்கள் (காற்றில் மட்டை, தேங்காய் விழுந்து காயப்படுத்தலாம் என்று). வீட்டில் தென்னை இன்னும் கொஞ்சம் உயரே போனதும் கீழே மொத்தமாய் கம்பி வலை அமைத்து விடலாம் என்றிருக்கிறேன். வீடு வாங்கும் போதே இரண்டு தென்னைகளும் இருந்தன. எனவே வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டேன். இளநீருக்கும், தேங்காய்க்கும் வீட்டில் பஞ்சம் இல்லை.  ஒரு தென்னை நன்றாக காய்கிறது. இன்னொன்று இப்போது தான் காய்க்க ஆரம்பித்திருக்கிறது. 





வெங்காயம், கிலோ 100 ரூபாய், 110 ரூபாய் என்றெல்லாம் போய்விட்டது. சின்ன வெங்காயம் விதை இங்கே கோவை விவசாய கல்லூரியில் கிடைக்கிறது. பெரிய வெங்காயம் விதை நானே ஒரு செடியை பூக்க விட்டு உருவாக்கினேன் (முந்தைய வெங்காயம் பற்றி பதிவில் விவரமாக எழுதி இருக்கிறேன்). நாற்று தயார் செய்து பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு நடலாம். விதைத்து நான்கு-ஐந்து மாதத்தில் அறுவடைக்கு தயார் ஆகிவிடும். இதுவரை நோய் என்ற பிரச்சனை வந்ததில்லை. கடையில் வாங்கும் சின்ன வெங்காயத்தை கூட முளைக்க வைத்து வளர்க்கலாம்.


சுண்டைக்காய், இது ஒரு காட்டு செடி மாதிரி தான். அது பாட்டுக்கு வளர்ந்து காய்த்து கொண்டு கிடக்கும். எந்தவித பராமரிப்பும் தேவை இல்லை. மரம் போல பெரிதாய் வரும். அதனால் அதற்கு ஏற்றார் போல இடம் தெரிவு செய்து நடவும். இதை மோரில் ஊற வைத்து, வற்றலாக்கி பொறித்து சாப்பிடலாம். இப்போது வீட்டில் இதை வைத்து துவையல் எல்லாம் செய்கிறார்கள். கசப்பு எல்லாம் இல்லை. தவிர, இதை சில முறைகளில் வடாகம் கூட செய்ய முடிகிறது. ஒரு செடி, நம் தேவைக்கு மிக அதிகமாகவே காய்கிறது.




வீட்டுத் தோட்டத்தில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டியது கீரைகள். வளர்க்க எளிதானதும் கூட. இங்கே தோட்டத்தில் முக்கியமாக மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முருங்கை கீரைகள் வருடம் முழுவதும் கிடைத்துக்கொண்டு இருக்கும். மணத்தக்காளி பழுத்தவுடன் அதில் இருந்து விதைகள் எடுத்து வைத்துக் கொள்ளலாம். பொன்னாங்கண்ணி சின்னதாய் ஒரு குச்சி ஒடித்து வைத்தால் வந்துவிடும். மாடியில் தொட்டியில் அழகாய் வளர்கிறது. தேவை படும் போது வெட்டி எடுத்துக்கொள்ளலாம். தானாக தளிர்த்து வளர்ந்து கொள்ளும். அரைக்கீரை/சிறுகீரை விதைகள் நிறைய உரக்கடைகளில்  கிடைக்கும். அரைக்கீரைகளில் கொஞ்சம் பூச்சி அரிப்பு வருகிறது. சாம்பலை தூவி கட்டுபடுத்தலாம்.





2013 புதுவரவுகள் 



வெள்ளை கத்தரி – ஒரு வழியாய் பல முயற்சிகளுக்கு பிறகு வெள்ளை கத்தரி கொண்டு வந்திருக்கிறேன். ஊரில் சந்தைக்கு போனால் நம்மை பளீரென்று வரவேற்பது இந்த வெள்ளை கத்தரி தான். ஆனால் இங்கே கோவையில் எந்த கடையிலும் கிடைப்பது இல்லை. வெள்ளை கத்தரி விதை என்று கடையில் சொல்லி கொடுத்ததெல்லாம் கடைசியில் ஊதா நிறமாக தான் வந்திருக்கிறது. கடைசியில் இந்த வருடம் வெற்றிகரமாக விளைவித்தாகி விட்டது .அதனால் முதல் காயை விதைக்கு விட்டு விட்டேன்.



கரும்பு – போன வருடம் முயற்சித்து உருப்படவில்லை. இந்த வருடம் ஓரளவுக்கு கொண்டு வந்திருக்கிறேன். இறுதியில் விளைச்சல் எப்படி என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Friday, May 24, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – கொண்டை கடலை



இங்கே கோவையில் ஆபிசுக்கு வரும் வழியில் நிறைய விளைநிலங்களை பார்க்கலாம். ஆனால் பெரிதாய் ஏதும் நடுவதில்லை. பொதுவாய் கால்நடை தீவன பயிர்கள் அல்லது கொண்டை கடலை. இவை இரண்டும் தான். நீர் ஆதாரம் அவ்வளவாக இருப்பதில்லை என்று நினைக்கிறேன். இந்த கொண்டை கடலை செடியை ‘இது என்னவாய் இருக்கும் என்று வரும் போதெல்லாம் பார்த்துக்கொண்டே வருவேன். செடியில் சின்னதாய் குண்டு குண்டாய் தொங்கி கொண்டிருக்கும் பை போன்ற காய்கள். அந்த பைக்குள் என்ன இருக்கும் என்று தெரியவில்லை. ஒருநாள் வரும் போது பைக்கில் இருந்து வயலில் இறங்கி காயோடு இரண்டு செடிகளை பறித்து வந்தேன். பார்த்தால் கொண்டை கடலை. நான் கொண்டை கடலை பீன்ஸ் மாதிரி காய்க்கும், உள்ளே வரிசையாய் கடலை இருக்கும் என்று நினைத்திருந்தேன். இப்படி தனி தனி கடலைக்கு கவர் எல்லாம் போட்டு இருக்கும் என்று நினைக்கவில்லை :-) . அதை பறித்து வந்து இங்கே Project  மக்களிடம் ஒரு போட்டி வேறு வைத்தேன். யாருமே கண்டுபிடிக்கவில்லை (என்னடே, கோவில்ல நல்லா சுண்டல் வாங்கி திங்கறீங்க. சுண்டல் எப்படி காய்க்கும்னு தெரியாதா :-) )

தோட்டத்தில் ஒரே வகை காய்கறிகளை பயிரிட்டால் நிலம் மேம்படாது. ஒவ்வொரு செடியும் வெவ்வேறு சத்துக்களை நிலத்தில் இருந்து எடுக்கும், அதே சமயம் வெவ்வேறு சத்துக்களை நிலத்திற்கு அளிக்கும். அதனால் ஒரே இடத்தில் வேறுவேறு செடிகளை பயிரிடுவது அவசியமாகிறது. அப்போது தான் நல்ல மகசூல் கிடைக்கும். நிலமும் பன்பட்டிருக்கும். ஒரு முறை தக்காளி போட்டால், அடுத்த முறை அதே இடத்தில் அவரை போடலாம், அடுத்த முறை வெண்டை. இப்படி பயிர் சுழற்சி (crop rotation) மிக அவசியம்.

பட்டாணி, அவரை, கொண்டை கடலை பயிர்களில் வேர்முண்டுகள் (root nodules) பற்றி படித்திருப்போம். இவைகள் மண்ணில் நைட்ரஜன் சுழற்சிக்கு (Nitrogen fixation) பெரிதும் உதவுகின்றன. பயிரிடப்படும் மண்ணுக்கு மீண்டும் நைட்ரஜன் சக்தியை மீட்டு வளர்ந்த மண்ணை வளமாக்கும். இவற்றின் வேர்களில் வளரும் ஒருவித பாக்டீரியா காற்றில் உள்ள நைட்ரஜனை செடிகளுக்கு தேவையான சத்துக்களாக மாற்றி வேர் முண்டுகளில் (root nodules) சேர்த்து வைக்கும். அதனால் பயிர் சுழற்சியில் இவைகள் முக்கியமான பயிர்கள்.

நான் கொண்டை கடலை பயிரிட்டது இந்த காரணமாக தான். மற்ற படி கொஞ்சமாய் பயிரிடும் போது பெரிதாய் மகசூல் எல்லாம் எடுக்க முடியாது. ஒரு செடியில் பத்தில் இருந்து இருபது வரை மட்டுமே கடலை காய்க்கிறது. இவைகள் வறட்சியை தாங்கி வளரும் செடி. அதனால் இங்கே பாசனம் இல்லாமலேயே அறுவடை செய்கிறார்கள். மழை காலத்தில் விதைக்கிறார்கள். நீர்பாசனமே கிடையாது. மழையிலும், டிசம்பர் மாத பனிபொழிவில் வளர்த்து விடுகிறது.

விதை என்று தனியாக வாங்க வேண்டியதில்லை. கடையில் வாங்கும் கொண்டை கடலையில் கொஞ்சம் எடுத்து விதைக்க வேண்டியது தான். நான் கருப்பு கடலை எடுத்து விதைத்தேன். எடுத்து அப்படியே விதைக்க வேண்டியது தான். வாரம் ஒரு முறை லேசாய் நீர் விட்டால் போதும். காய்த்து செடிகள் எல்லாம் காய ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யலாம். வேறு எந்த பராமரிப்பு தேவை இல்லை. முக்கியமாக அறுவடைக்கு பிறகு வேரோடு செடியை அதே பாத்தியில் தோண்டி வைத்து விடவும்.

தோட்டத்தில் இருந்து சில படங்கள்
















Monday, May 6, 2013

தோட்டம் 2012 – Part-2 (HITS – Flowers)


பழங்களுக்கு அடுத்த படியாக பூக்களை பார்க்கலாம். கலர்புல்லா ஒரு பதிவு.இதில் கொடுக்கபட்டுல சில படங்கள் Photography என்ற வகையில் என் தோட்டத்தில் நான் முயற்சி செய்த சில படங்கள்.

ஜாதி(பிச்சி)ப் பூ:

இடம் இருந்தால் நம்ம ஆளுங்க முதலில் வைக்க ஆசைப்படும் ஒரு பூ. இதை பற்றி விவரமாக முன்பே எழுதிவிட்டேன். சொந்தகாரர் வீட்டில் இருந்து பதியம் போட்டு கொண்டு வந்த கொடி, சீசனில் 2000 பூக்கள் வரை பறித்திருக்கிறோம். கடையில் வாங்குவதை விட, பதியம் போட்டு கொண்டு வரும் போது அந்த செடி கொடுத்தவரின் நினைவாக இருப்பதும், அவர்கள் வீட்டுக்கு வரும்போது ‘நான் கொடுத்த செடி தானே என்ற சந்தோசமும் கூடுதல். பொதுவாய் ஜூலை ஆகஸ்ட்-ல் பூக்க ஆரம்பிக்கிறது. மூன்று மாதங்கள் தொடர்ந்து பூ கிடைக்கிறது. சீசன் முடிந்ததும் கிளைகளை வெட்டி விடுவது அவசியம். இதில் பூச்சி தொல்லை என்று ஏதும் இது வரை பார்த்ததில்லை. 




ரோஜா

ரோஜாவை பொதுவாய் இரண்டு வகை படுத்தலாம். நாட்டு ரோஜா (பன்னீர் ரோஜா), மற்றொன்று ஓட்டு வகைகள் (ஹைப்ரிட்). இதில் நிறத்திலும் சரி, மணத்திலும் சரி நாட்டு ரோஜா அருகில் எந்த ஹைப்ரிட் ரோஜாவும் வரமுடியாது. பன்னீர் ரோஜா இதழ்களை குழந்தையை குளிப்பாட்டும் போது அரைத்து பூச சிலர் பறித்து போவார்கள். இதழ்களை பறித்து உலர வைத்து தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். 

ஹைப்ரிட் ரோஜா வாங்கும் போது செழிப்பாக வருகிறது. ஒரு தடவை பூத்த பிறகு தான் எல்லா பிரச்சனையும் ஆரம்பிக்கிறது. இலைகள் பழுத்து போவது, பூக்கள் மொட்டிலேயே கருகுவது, செடி வளர்ச்சி இல்லாமல் போவது என்று எக்கச்சக்க பிரச்சனைகள். இதனால் வைத்த நிறைய ஹைப்ரிட் செடிகளை ஒரு கட்டத்திற்கு பிறகு பிடுங்கி போட்டுவிட்டேன். இங்கே நர்சரி கார்டன்களில் ரோஜாவுக்கென்று நிறைய உரம் விற்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் பெரிதாக வேலைக்காகவில்லை. ஹைப்ரிட் செடிகளுக்கு உப்பு தண்ணீர் (போர் தண்ணீர்) சரி வராது. நல்ல தண்ணீர் (சப்ளை செய்யப்படும் ஆற்று நீர்) தான் சரிவரும் என்று நண்பர் ஒருவர் கூறினார். இதை முயற்சித்து பார்க்க வில்லை.  

இப்போது நிறைய நாட்டு ரோஜாக்கள் தான் இருக்கிறது. தொட்டியில் வைத்து கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் வெட்டிவிட்டால் செழுசெழு என்று தளிர்த்து, கொத்து கொத்தாக போகிறது. உரம் என்றோ, பராமரிப்பு என்றோ பெரிதாய் ஒன்றும் கிடையாது. கீழே இருக்கும் படம் போன மாதம் எடுத்தது தான். 

 


 ரோஜாவில் இன்னொரு பயன், நிறைய படங்கள் எடுக்கலாம். அப்படி முயற்சி செய்த சில படங்கள். 






செம்பருத்தி மற்றும் தங்கஅரளி (மஞ்சள் அரளி)

செம்பருத்தி. பார்க்க ரொம்ப சாதாரணமாக தெரியும் ஒரு பூ. ஆனால் நிறைய பயன்கள். வீட்டின் முன் கேட்டுக்கு வெளியே இடப்புறம் ஒரு செம்பருத்தியும், வலப்புறம் தங்கஅரளி (மஞ்சள் அரளி) ஒன்றும் வைத்து விட்டேன்.

செம்பருத்தியில் கூட இப்போது ஹைப்ரிட் கிடைக்கிறது. மஞ்சள் நிறம், பிங்க் நிறம் என்று நிறைய நிறத்தில் கிடைக்கிறது. ஆனால் அவைகள் எல்லாம் வெறும் பார்வைக்கு தான். மருத்துவ குணம் ஓன்று கூட கிடையாது. செம்பருத்தியின் பயன்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். முதலில் நினைவுக்கு வருவது முடிவளர ஒரு சிறந்த மூலிகை பூ. பூக்களை பறித்து காய வைத்து எண்ணையில் காய்த்து பயன்படுத்துவார்கள். செம்பருத்தி இலையை பறித்து அரைத்தும் தலையில் தேய்த்தால் முடிக்கு நல்லதாம். நிறைய பேர் பறித்து போவார்கள். 

பூவை பக்கத்து பிள்ளையார் கோவிலுக்கு பறித்து போவார்கள். வீட்டில் பூவை பறித்து நீர் ஊற்றி அவித்து குளிர வைத்து ஜூஸ் கூட செய்யலாம் (பக்கத்து வீட்டில் கேட்டு தெரிந்து கொண்டது). ஜூஸ் நன்றாக தான் இருக்கிறது. நல்லதும் கூட. செம்பருத்தி பூவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. தினமும் ஓன்று அல்லது இரண்டு பூக்களை சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு நல்லது (Hibiscus can effectively lower high blood pressure and reduce high cholesterol levels)



தங்கஅரளி பூ அழகாய் மஞ்சளாய் வீட்டை அலங்கரித்து நிற்கும். இதை பூஜைக்கும் பறித்து போகிறார்கள். தவிர நிறைய சின்ன சின்ன பறவைகள் (தேன்சிட்டு போல) இந்த பூக்களில் இருந்து தேன் எடுப்பதை பார்க்க முடிகிறது. அதனால் இந்த மரத்தில் எப்பவும் நிறைய குருவிகளை பார்க்கலாம்.


வெல்வெட் பூ

இதன் பெயர் சரியாக தெரியவில்லை. நாகர்கோவிலில் இருந்து சொந்தகாரர் ஒருவர் 
கொடுத்தது. வெல்வெட் பூ என்று பெயர் சொல்லி கொடுத்தார்கள். சின்னதாய் சில குச்சி மட்டும் கொடுத்தார். வைத்தவுடன் தளிர் விட்டு வந்துவிட்டது. செடி பார்ப்பதற்கு புல்செடி மாதிரி சாதரணமாய் தெரிந்தாலும், பூ அவ்ளோ அழகு. கருஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கிறது. 



2013 ல் புது வரவுகள்  

இந்த வருடம் தோட்டத்தை அலங்கரிக்க புதிதாக இந்த பூக்களை சேர்த்திருக்கிறேன். விவரமாக வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

முல்லை (கொடி)

மல்லி பூ 


பவள மல்லி


சாமந்தி