Showing posts with label crop rotation. Show all posts
Showing posts with label crop rotation. Show all posts

Friday, May 24, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – கொண்டை கடலை



இங்கே கோவையில் ஆபிசுக்கு வரும் வழியில் நிறைய விளைநிலங்களை பார்க்கலாம். ஆனால் பெரிதாய் ஏதும் நடுவதில்லை. பொதுவாய் கால்நடை தீவன பயிர்கள் அல்லது கொண்டை கடலை. இவை இரண்டும் தான். நீர் ஆதாரம் அவ்வளவாக இருப்பதில்லை என்று நினைக்கிறேன். இந்த கொண்டை கடலை செடியை ‘இது என்னவாய் இருக்கும்’ என்று வரும் போதெல்லாம் பார்த்துக்கொண்டே வருவேன். செடியில் சின்னதாய் குண்டு குண்டாய் தொங்கி கொண்டிருக்கும் பை போன்ற காய்கள். அந்த பைக்குள் என்ன இருக்கும் என்று தெரியவில்லை. ஒருநாள் வரும் போது பைக்கில் இருந்து வயலில் இறங்கி காயோடு இரண்டு செடிகளை பறித்து வந்தேன். பார்த்தால் கொண்டை கடலை. நான் கொண்டை கடலை பீன்ஸ் மாதிரி காய்க்கும், உள்ளே வரிசையாய் கடலை இருக்கும் என்று நினைத்திருந்தேன். இப்படி தனி தனி கடலைக்கு கவர் எல்லாம் போட்டு இருக்கும் என்று நினைக்கவில்லை :-) . அதை பறித்து வந்து இங்கே Project  மக்களிடம் ஒரு போட்டி வேறு வைத்தேன். யாருமே கண்டுபிடிக்கவில்லை (என்னடே, கோவில்ல நல்லா சுண்டல் வாங்கி திங்கறீங்க. சுண்டல் எப்படி காய்க்கும்னு தெரியாதா :-) )

தோட்டத்தில் ஒரே வகை காய்கறிகளை பயிரிட்டால் நிலம் மேம்படாது. ஒவ்வொரு செடியும் வெவ்வேறு சத்துக்களை நிலத்தில் இருந்து எடுக்கும், அதே சமயம் வெவ்வேறு சத்துக்களை நிலத்திற்கு அளிக்கும். அதனால் ஒரே இடத்தில் வேறுவேறு செடிகளை பயிரிடுவது அவசியமாகிறது. அப்போது தான் நல்ல மகசூல் கிடைக்கும். நிலமும் பன்பட்டிருக்கும். ஒரு முறை தக்காளி போட்டால், அடுத்த முறை அதே இடத்தில் அவரை போடலாம், அடுத்த முறை வெண்டை. இப்படி பயிர் சுழற்சி (crop rotation) மிக அவசியம்.

பட்டாணி, அவரை, கொண்டை கடலை பயிர்களில் வேர்முண்டுகள் (root nodules) பற்றி படித்திருப்போம். இவைகள் மண்ணில் நைட்ரஜன் சுழற்சிக்கு (Nitrogen fixation) பெரிதும் உதவுகின்றன. பயிரிடப்படும் மண்ணுக்கு மீண்டும் நைட்ரஜன் சக்தியை மீட்டு வளர்ந்த மண்ணை வளமாக்கும். இவற்றின் வேர்களில் வளரும் ஒருவித பாக்டீரியா காற்றில் உள்ள நைட்ரஜனை செடிகளுக்கு தேவையான சத்துக்களாக மாற்றி வேர் முண்டுகளில் (root nodules) சேர்த்து வைக்கும். அதனால் பயிர் சுழற்சியில் இவைகள் முக்கியமான பயிர்கள்.

நான் கொண்டை கடலை பயிரிட்டது இந்த காரணமாக தான். மற்ற படி கொஞ்சமாய் பயிரிடும் போது பெரிதாய் மகசூல் எல்லாம் எடுக்க முடியாது. ஒரு செடியில் பத்தில் இருந்து இருபது வரை மட்டுமே கடலை காய்க்கிறது. இவைகள் வறட்சியை தாங்கி வளரும் செடி. அதனால் இங்கே பாசனம் இல்லாமலேயே அறுவடை செய்கிறார்கள். மழை காலத்தில் விதைக்கிறார்கள். நீர்பாசனமே கிடையாது. மழையிலும், டிசம்பர் மாத பனிபொழிவில் வளர்த்து விடுகிறது.

விதை என்று தனியாக வாங்க வேண்டியதில்லை. கடையில் வாங்கும் கொண்டை கடலையில் கொஞ்சம் எடுத்து விதைக்க வேண்டியது தான். நான் கருப்பு கடலை எடுத்து விதைத்தேன். எடுத்து அப்படியே விதைக்க வேண்டியது தான். வாரம் ஒரு முறை லேசாய் நீர் விட்டால் போதும். காய்த்து செடிகள் எல்லாம் காய ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யலாம். வேறு எந்த பராமரிப்பு தேவை இல்லை. முக்கியமாக அறுவடைக்கு பிறகு வேரோடு செடியை அதே பாத்தியில் தோண்டி வைத்து விடவும்.

தோட்டத்தில் இருந்து சில படங்கள்