அவரையில்
இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று செடியில் காய்ப்பது (குத்து அவரை), இரண்டாவது
கொடியில் காய்ப்பது (பந்தல் அவரை). செடி அவரை என்று ஒன்று இருப்பதை இங்கு கோவை
விவசாய கல்லூரியில் தான் பார்த்தேன். எல்லாம் அறிவியல் வளர்ச்சி தான். இனி
செடியில் புடலை, பாகற்காய் கூட காய்க்கலாம் :-).
கொடி வகைகளில்
அவரை தான் ரொம்ப அடர்த்தியாக நிறைய இடத்தை நிரப்பிக் கொண்டு வளரும். ஆனால் நிறைய
காய் கொடுக்கும். நீண்ட காலத்துக்கு அறுவடை எடுக்கலாம். செடி அவரை வளர்ப்பதில்
நமக்கு பந்தல் தேவை இல்லை. தவிர விதைத்து இரண்டு மாதத்தில் காய் பறிக்கலாம்.
அவரை செடியை ஒரு
அடி இடைவெளியில் விதைத்தால் போதும். செடிக்கு ஐந்து, ஆறு கிளைகள் மட்டும் தான்
வரும். ஒவ்வொரு கிளையிலும் பத்தில் இருந்து பதினைந்து காய் வரை கிடைக்கும். ஒரு
பன்னிரண்டு செடி வைத்தால் ஒரு வீட்டுக்குப் போதுமானதாக இருக்கும்.
காய்கறிகளில்
நிறைய பூச்சித் தாக்குதல், செடி அவரையில் தான் வருகிறது. இங்கே பொதுவாய் வரும்
பிரச்சனை, அசுவினி போன்று சாறு உறுஞ்சும் பூச்சி. இவைகள் கூட்டமாய் செடியின்
தளிர்கள், பூக்களில் இருந்து சாற்றை உறிஞ்சி செடியை வாடிப்போக வைத்து விடும். இது
தவிர காய் துளைப்பான் பூச்சி தொந்தரவும் இருக்கிறது. இவைகள் காயில் துளை போட்டு
அவரை விதையை சாப்பிடும். துளைபோட்ட அவரையை நாம் சமையலுக்கு பயன்படுத்த முடியாது.
பறித்து தூர தான் போட வேண்டும். இயற்கை விவசாயத்தில் நிறைய பூச்சிக்கொல்லி முறைகள்
இருக்கின்றன. வேப்பிலை, இஞ்சி, பூண்டு, மிளகாய் போன்றவைகளின் கலவையில் நிறைய
மருந்து தயாரிக்கலாம். நான் இன்னும் இது போன்று ஆரம்பிக்கவில்லை. இந்த வருடம்
முயற்சிக்க வேண்டும்.
இப்போதைக்கு
நம்ம பூச்சிக் கொல்லி, சாம்பல் தான் :-). நிறைய எடுத்து தினமும் செடிமேல் தூவி வர,
ஒரு வாரத்தில் எல்லாம் காணமல் போய் விடும். சாம்பல் பயன்படுத்துவது இயற்கை
விவசாயத்தில் பரிந்துரைக்கப்படும் ஒன்றே. இங்கே என் Office-க்கு இரண்டு வாரத்திற்கு முன்பு வந்திருந்த
நம்மாழ்வார் ஐயாவும் சாம்பல் பயன்பாடு பற்றி கூறினார். சாம்பல் பயன்படுத்துவதால் செடிக்கோ,
பூவுக்கோ எந்த பாதிப்பும் வராது. இப்போதைக்கு என்னுடைய முக்கியமான பூச்சிக் கொல்லி
இது தான்.