Showing posts with label மிளகாய். Show all posts
Showing posts with label மிளகாய். Show all posts

Wednesday, July 10, 2013

தோட்டம் 2012 – Part-4 (FLOPS)



வரிசையா பழங்கள், பூக்கள், காய்கறிகள் ஹிட்ஸ் பற்றி எழுதியாச்சு. தோட்டத்தில் சில FLOPS-ம் இருக்கிறது. ஒரு சில செடிகள் நாம் எதிர்பார்க்காமலேயே அட்டகாசமாய் வரும். சிலவற்றை நாம் எளிதாய் நினைப்போம், ஆனால் சரியாய் வராது. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லலாம். சரியான பருவநிலை, அந்த செடிக்கேற்ற மண்ணின் தன்மை, விதை தேர்வு, நோய் எதிர்ப்பு திறன் இப்படி நிறைய சொல்லலாம். இதில் எதாவது ஒன்றில் குறை என்றாலும் வளர்ச்சியிலோ, விளைச்சலிலோ பாதிப்பு இருக்கும். அப்படி சிலவற்றில் கோட்டை விட்ட சில செடிகள் இதோ :-)

பீட்ரூட்
 கேரட், காலி ஃப்ளவர் வரிசையில் வித்தியாசமாய் முயற்சித்தது. இதன் விதைகள் எங்காவது பொருள்காட்சியில் விதை கடைகளில் தேடினால் கிடைக்கும். வழக்கம் போல சின்னதாய் ஒரு பாத்தி தயார் செய்து நேரடியாய் விதைத்து விட்டேன். ஒரு வாரத்திலேயே முளைத்து, செடியும் செழிப்பாக வளர்ந்தது. செடியை பார்க்கும் போது அவ்ளோ செழிப்பாக இருந்தது.

நான் முன்பு எழுதிய மாதிரி, கிழங்கு வகை செடிகளில் ஒரு பிரச்னை, மண்ணுக்கு கீழே என்ன நடக்கிறது என்று தெரியாது. கிழங்கு வைக்கிறதா இல்லையா, திரட்சியாக வருகிறதா இல்லையா என்று அவ்வளவு எளிதாக கணிக்க முடியாது. சில செடிகளில் பீட்ரூட் வெளியே தெரியும் படி வந்தது. அவைகள் பார்ப்பதற்கு நன்றாகவே தெரிந்தது.
அறுவடை செய்த போது தான் தெரிந்தது, பீட்ரூட் எதுவும் சரியாக வரவில்லை என்று. சில கிழங்குகள் நிறமே வராமல் வெளிறிப் போய் இருந்தன. ஆனால் இலைகள் அவ்ளோ நன்றாக இருந்தன. கிழங்கு வராட்டா என்ன, இலையை வைத்து கீரை கூட்டு செய்து விட்டோம் :-).. கீரை, உண்மையாகவே செம ருசி.

என்னுடைய கணிப்பு படி, மண் கொஞ்சம் இறுகிய செம்மண்ணாய் போய் விட்டது. இன்னும் கொஞ்சம் மணல் கலந்து, இலை சருகுகள் கலந்து தயார் செய்திருக்க வேண்டும். இந்த வருடம் முயற்சிக்கலாம் என்று ஒரு திட்டம் இருக்கிறது. பார்க்கலாம். 








மிளகாய்
ஆமாம். மிளகாயே தான். 2012 ல் கிட்டத்தட்ட மூன்று பருவம் முயற்சி செய்து ஊற்றிக் கொண்டது. முட்டை கோஸ், காரட் எல்லாம் கலக்கலாய் கொண்டுவந்து, கடைசியில் மிளகாயில் கோட்டை விட்டாச்சு :-) . 2011 ல் மாடியில் காய போட்ட வற்றல் விதைகளை எல்லாம் மழை நீர் அரித்துக்கொண்டு போய், கீழே விழுந்து  சும்மா வளர்ந்த செடியில் எல்லாம் கிலோ கணக்கில் மிளகாய் பறித்தோம். ஆனால் போன வருடம், செடி பக்கத்துல போய் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் வருவேனா என்று அப்படியே நின்று போனது.

முதல் பிரச்னை, விதை தேர்வு. ஒரு பருவத்தில் எங்கோ கண்காட்சியில் வாங்கிய ஒரு விதையை போட்டேன். செடியும் நன்றாகவே வந்தது. மிளகாயும் கொத்து கொத்தாகவே காய்த்தது. ஆனால் மிளகாய் தான் ஏதோ ஹைப்ரிட் வகை போல. சுத்தமாய் காரம் கிடையாது. பார்த்தாலே இளம் பச்சை நிறத்தில் வெளிறிப்போய் இருந்தது. சட்னியில் பத்து மிளகாய் போட்டாலும் காரம் இல்லை. 

அந்த விதைகளை தூக்கிப் போட்டுவிட்டு கடையில் வாங்கிய வற்றலில் இருந்து விதை போட்டு அடுத்த முறை நட்டேன். இந்த முறை என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, ஏதோ நோய் தாக்குதல். செடி எதுவுமே தரையை விட்டு எந்திரிக்கவே இல்லை. இலை எல்லாம் கொஞ்சம் சுருண்டு கொண்டு வளர்ச்சி இல்லாமல் அப்படியே நின்று விட்டது. மற்ற செடிகள் எல்லாம் பக்கத்து பாத்திகளில் நன்றாக தான் வளர்ந்தன. 

மொத்தத்தில் தோட்டத்தில் மிளகாய் கொஞ்சம் சிக்கலான செடியாகவே இருந்து வருகிறது. இந்த வருடம் மீண்டும் இப்போது நாற்று விட்டிருக்கேன். பார்க்கலாம்.










(தொடரும்)