Showing posts with label சாம்பல் பூசணி. Show all posts
Showing posts with label சாம்பல் பூசணி. Show all posts

Monday, May 5, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – சாம்பல் பூசணி



ஒரு பக்கம், நிறைய திட்டமிட்டு, நிறைய கவனம் செலுத்தி, உரம் எல்லாம் போட்டு கொண்டு வந்தாலும் சின்னதாய் ஒரு பூச்சி கூட்டம் வந்து எல்லாவற்றையும் காலி செய்து போய்விடும் (இந்த முறை அவரைக்கு இந்த நிலை தான் ஆனது). இன்னொரு பக்கம், எந்த கவனமும் இல்லாமல் அதுவாகவே வளர்ந்து பக்காவாய் பலன் கொடுக்கும்.

தோட்டத்தில் வருடத்திற்கு ஒரு செடி எப்படியும் தானாகவே வளர்ந்து பலன் கொடுத்து விடுகிறது. போன முறை, ஒரு தர்பூசணி செடியை பற்றி எழுதி இருந்தேன். இந்த வருடம், ஒரு சாம்பல் பூசணி (Ash Gourd).
நாங்கள் சாம்பல் பூசணியை பயன்படுத்தியது கிடையாது. மஞ்சள் பூசணி மட்டும் ஒரு முறை எதிர்வீட்டில் இருந்து, தோட்டத்தில் காய்த்ததாக கொடுத்தார்கள். இந்த செடி முளைத்து வந்த போது, அந்த விதை விழுந்து மஞ்சள் பூசணி என்று வருகிறது என்று நினைத்திருந்தேன்

இந்த மாதிரி கொடி வளர்ப்பதில் ஒரு பிரச்னை, இதற்கு நிறைய இடம் தேவை. கன்னா பின்னாவென்று கிளை விட்டு கிடைத்த இடம் எல்லாம் அதன் கிளைகளை பரப்பி விடும். அதனால் நான் இதை இதுவரை பட்டியலில் சேர்த்தது கிடையாது. இந்த செடி தானாய் வளர்ந்தததால், இரண்டு இலை வந்தபோதே ரொம்ப செழிப்பை தெரிந்ததால் விட்டுவிட்டேன்.

தவிர, தக்காளி, மிளகாய் பாத்தி எல்லாம் முடியும் தருவாயில் இருந்ததால் அதில் படர்ந்து விட்டு போகட்டும் என்று விட்டு விட்டேன். செடி, படத்தில் பார்ப்பதை விட இன்னும் ஒரு மடங்கு (இன்னொரு பக்க கிளையோடு) இருந்தது. எங்க வீட்டு நாய் குட்டி பாதி செடியை அதற்கு விளையாட ஆட்டையை போட்டு விட்டது (பிறகு வாங்கிய அடியில் மிச்ச பாதியை விட்டுவிட்டது)

பூசணிகாய், பலூன் மாதிரி தான், தினமும் ஒரு வளர்ச்சி. பிஞ்சி பிடித்து இரண்டு வாரத்தில் காய் பறிக்கும் அளவுக்கு வந்து விட்டது. ஒரே ஒரு காய் தான் பிடித்திருந்தது. முற்றிவிட கூடாது என்பதால் கொஞ்சம் சீக்கிரமே பறித்து விட்டேன். இன்னும் கொஞ்சம் விட்டிருக்கலாம். பூசணியின் மேலே வெள்ளையாய் ஒரு படலம் இருக்கிறது. தொட்டால் கையில் லேசாய் குத்துகிறது (கரும்பின் நுனியில் இருப்பது போல). அந்த வெள்ளை படலம் போகும் வரை காயை விடலாம் என்றார் எதிர்வீட்டில் இருப்பவர். இருந்தாலும் ஒரே ஒரு காய் என்பதால், நல்ல தரம் வந்ததும் பறித்து விட்டேன். எடை, ஏழு கிலோ இருந்தது. வழக்கம் போல அக்கம் பக்கம் எல்லோருக்கும் கொடுத்தோம். நாங்களும் இரண்டு மூன்று நாள் சாம்பார் வைத்துக் கொண்டோம். நமக்கு தோட்டம் கொடுத்த இந்த வருடத்தின் போனஸ் இது தான்.