தோட்டம்
என்று முழு மூச்சில் தொடங்கி இரண்டு வருடம் ஆகி விட்டது. 2010 ல் கோவை வந்து, வீடு வாங்கி, கொஞ்சம்
கொஞ்சமாய் தோட்டத்திற்கான வேலைகளை ஆரம்பித்து, நிறைய கற்றுக் கொண்டு, கொஞ்சமாய்
அதில் வெற்றி கொண்டு , போய் கொண்டிருக்கிறது என் தோட்டம். 2012 தான் கிட்டதட்ட எல்லா மாற்றகளையும் செய்து
தோட்டத்தை முழுமையாக ஆரம்பித்தேன். இந்த தொடரில் அதைப் பற்றி சின்னத்தாய் ஒரு அலசல். நான் கற்றுக்கொண்ட சில விஷயங்கள்
சிலருக்கு பயன்படலாம் என்று நினைக்கிறேன்.
தோட்டம்
என்றால் சில செடிகள்/மரங்கள் நாம் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்திருக்கும், சில
நாம் எளிதாய் நினைத்து ஆனால் உருப்படியாய் ஒன்றும் வந்திருக்காது. அப்படி 2012-ல் ஹிட் அடித்த சில பழ மரங்களை இந்த
பதிவில் கொடுக்கிறேன்.
பப்பாளி - 2012 –
ல் உருப்படியாய் விளைந்தவைகள் என்று பார்த்தால முதலில் பப்பாளியை சொல்லலாம். பழமுதிர் சோலையில் வாங்கிய ஒரு பழத்தின் விதை
போட்டு உருவாக்கிய மூன்று மரம், இவ்வளவு பலன் கொடுக்கும் என்று தொடக்கத்தில்
நினைக்கவில்லை. இதுவரை உரம் என்று ஓன்று வைத்ததில்லை. பூச்சி தாக்குதல் (பொதுவாய்
வரும் மாவுபூச்சி) ஓன்றும் இருந்ததில்லை. இப்போது நன்றாக உயரத்தில் போய்விட்டது. பொதுவாய்
உயரத்தில் போனபிறகு காய் சிறுத்து போகும் என்பார்கள். இது மேலே போக போக தான்
பெரிதாய் காய்க்கிறது. இப்போது ஒரு பன்னிரண்டு அடி உயரம் வளர்ந்து விட்டது. சமீபத்தில்
பறித்த ஒரு காயின் எடை 2
½ ல் இருந்து 3 கிலோ இருக்கும் (என் வீட்டு தராசில் இரண்டு
கிலோ தான் Limit. அதனால் எடை பார்க்க முடியவில்லை :-)). வாரத்திற்கு எப்படியும் ஒரு பத்து பழம்
பறிக்கலாம். அக்கம் பக்கம், சொந்தம் பந்தம் என்று எல்லோருடைய வீட்டிற்கும்
தோட்டத்தில் இருந்து தவறாமல் வாரா வாரம் சப்ளை ஆகும் ஒரு பழம் பப்பாளி தான் :-).
இந்த
மரங்கள் இன்னும் ஆறு மாதம் தான் நன்றாக காய்க்கும் என்று நினைக்கிறேன். இப்போதே
எட்டாத உயரத்திற்கு போய் விட்டது. இதில் இருந்து விதை எடுத்து இந்த வருடத்திற்கான
மரங்கள் ஏற்கனவே வளர்ந்து கொண்டிருக்கின்றன.
மாதுளை
– திசையன்விளை
சந்தையில் இருந்து வாங்கி வந்த செடி. காபூல் மாதுளை (பிங்க் தோல் உள்ளது)
வேண்டாம், நாட்டு மாதுளை (பச்சை) தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி வந்த செடி. மாதுளை
பொதுவாக வருடம் முழுவதும் காய்க்கும் (மூன்று பருவமாவது கிடைக்கும்). ஒரு
பருவத்தில் காய்த்த காய் பழுக்கும் போது மறுபடி பூத்து பிஞ்சி பிடிக்க ஆரம்பித்து
விடும். இதனால் வருடம் முழுவதும் பழம் கிடைக்கிறது. இதுவரை அதிகபட்சமாக ஒரு பழம் 450 gms அளவில் காய்த்திருக்கிறது :-). இந்த வருடம் இன்னொரு மாதுளையும் வைத்து
விடலாம் என்று ஊரில் இருந்து ஒரு செடி வாங்கி வந்திருக்கிறேன். அதை தவிர இதன்
விதையில் இருந்து நாற்றும் தயார் செய்து பார்த்தேன். சில செடிகள்
முளைத்திருக்கிறது.
கொய்யா – தானாக வளர்ந்த மரம். எடுத்து நட்டக் கூட
செய்யவில்லை. அதுவே வளர்ந்து காய்க்க ஆரம்பித்து விட்டது. நாட்டுக் கொய்யா
(சிவப்பு) என்றதும் கூடுதல் சந்தோசம். நிறையவே காய்க்கிறது. பொதுவாய் நவம்பர்,
டிசம்பரில் பூக்க ஆரம்பித்து பெப்ரவரி-ஏப்ரல் மாதங்களில் பழங்கள் கிடைக்கிறது. இதன்
பழங்களை சாப்பிட்டு விட்டு அம்மா ஊரிலும் இதே மாதிரி ஒரு நாட்டு மரம் வைக்க
கேட்டார்கள். இப்போதெல்லாம் ஒட்டு ரகங்கள் தான் கிடைக்கிறது. நாட்டு கொய்யா நாற்றுகள் கிடைப்பதில்லை. இதன் விதைகளில் இருந்து இப்போது தான் நாற்று வளர ஆரம்பித்திருக்கிறது.
அடுத்த முறை ஊருக்கு போகும் போது நாற்று ரெடியாக இருக்கும்.
சீத்தா – இதுவும் ஊரில் இருந்து கொண்டு வந்த
நாற்று தான். இந்த வருடமும் நன்றாக பிஞ்சு பிடித்திருக்கிறது. வருடம் ஒரு முறை
தான் காய்க்கிறது. பொதுவாக ஜனவரி-பெப்ரவரி மாதங்களில் பூ பிடிக்க ஆரம்பித்து, மே-ஜூன்
மாதங்களில் நமக்கு பழங்கள் கிடைக்கிறது. இன்னொரு மரமும் தோட்டத்தில் சேர்க்கலாம்
என்று வாங்கி வைத்திருக்கிறேன். சாக்கு பையில் தான் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இன்னும் ஒரு மாதத்தில் அதற்கு ஒரு இடம் பார்த்து கொடுக்க வேண்டும்.