Friday, January 18, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – கேரட்



கோஸ், காலி ஃப்ளவர் வரிசையில் இப்போது கேரட். இங்கே கோவையில் சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் இரண்டாவது மாடியில் தோட்டம் அமைத்திருக்கிறார். என்னை போலவே வீட்டுத் தோட்டம் அமைப்பதில் அவர்களுக்கு ரொம்ப விருப்பம் உண்டு. அங்கே ஒரு தடவை கேரட் நிறைய விளைந்திருந்தது. கேரட் என்றாலே ஊட்டி மாதிரி மலை பிரதேசங்களில் மட்டும் வரும் என்று நினைத்த எனக்கு இங்கேயே அதுவும் இரண்டாவது மாடி வெயிலிலே வந்திருப்பதை பார்த்து ரொம்ப ஆச்சரியம். பிடுங்கி சாப்பிட்டு பார்த்தபோது நன்றாக இருந்தது. 

செடியை பற்றி விசாரித்த போது கேரட்டுக்கும் விதைகள் கிடைக்கும் என்று தெரிந்தது. போன ஜுனில் இங்கே அக்ரி இன்டெக்ஸ் போன போது கேரட் விதைகள் கிடைத்தது. விதைகள் சீரகம் போல இருக்கிறது. கேரட் செடியை அப்படியே விட்டு விட்டால் பூக்குமாம் (சில வருடங்கள் எடுக்கும் போல). அதில் இருந்து தான் விதை எடுக்கிறார்கள்.



மலைபிரதேச செடி என்பதால் கொஞ்சம் உயரமான படுக்கை போல ஒரு பாத்தி எடுத்துக்கொண்டேன் (செங்கலை செங்குத்தாக வைத்து அமைக்கலாம்). இதனால் நீர் தேங்கி நிற்பதை தவிர்க்கலாம். ரொம்ப வெயிலை தவிர்க்க கொஞ்சம் வெயிலும் நிழலுமான இடம் இருப்பதும் நல்லது. லேசாக கிளறி விதைகளை தூவி விட்டேன். ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பித்து விட்டது. 

முதலில் செடி அவ்வளவாக நன்றாக வரவில்லை. கொஞ்சம் சுருண்டு கொண்டு வளர்ச்சி சரி இல்லாதது போல தெரிந்தது. பிறகு எதிர்பார்த்ததை விட செழுமையாக வளர ஆரம்பித்து விட்டது. செடி எந்த வித நோய் தாக்குதலும் இல்லாமல் வந்தது ரொம்ப ஆச்சரியம். 

கிழங்கு வகைகள் வளர்ப்பதில் ஒரு பிரச்னை மண்ணுக்குள் என்ன நடக்கிறது என்று ஒன்றும் தெரியாது. கிழங்கு வைக்கிறதா இல்லையா, ஏதும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்கிறதா இல்லையா என்று சில செடிகளை அவ்வப்போது கிளறி தெரிந்து கொள்ளலாம். 

டிசம்பரில் அறுவடை செய்தபோது எதிர்பார்த்ததை விட நல்ல விளைச்சல். கேரட்டும் நல்ல திரட்சியாக வந்திருந்தது. கொஞ்சம் தான் அறுவடை செய்திருக்கிறேன். இன்னும் நிறைய செடிகள் பறிக்காமல் நிற்கிறது. நிறைய செடிகள் ரொம்ப நெருக்கமாக போய் விட்டது. நாற்று எடுத்து சரியான இடைவெளி விட்டு நட்டிருக்கலாம். மண்ணை நிறைய மணல், இலை கழிவுகள் கொண்டு இன்னும் கொஞ்சம் தளர்வாக தயார் செய்திருக்கலாம்.

கேரட் அறுவடை செய்ய கிட்டத்தட்ட ஆறு மாதம் பிடிக்கிறது. தக்காளி, வெண்டை மாதிரி வீட்டு உபயோகத்திற்கு என்று பயிருட்டு விளைச்சல் எடுப்பது கடினம் தான். ஆனால் ஆசைக்காக ஒரு ஓரமாக கொஞ்சமாக போட்டு வைக்கலாம்.