Saturday, March 26, 2016

தோட்டம் 2.0 (பகுதி-1)




தோட்டம் இணையதளத்தை ஒரு புதிய தளத்தில் ஆரம்பித்த கையோடு தோட்டத்தையும் ஒரு புதிய தளத்திற்கு மாற்றி அமைத்திருக்கிறேன். இது ஒரு நீண்ட பயணமாகவே இருந்தது. அதை சில தொடர்களாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். Please visit thoddam.wordpress.com

நண்பர்கள் தோட்டம்.wordpress.com -ல் உங்கள் மெயில்-ஐடி கொடுத்து புதிய பதிவுகளுக்கான மடலை subscribe செய்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

Saturday, March 19, 2016

தோட்டம்.com




www.thoddam.com

புதிய ஒரு தளத்தில் எனது தோட்டத்தை தொடங்க இருக்கிறேன் . ப்ளாக் உலகில் இருந்து தனி ஒரு இணைய தளமாக எனது தோட்டம் இப்போது thoddam.wordpress.com (தோட்டம். Com). தோட்டம் ப்ளாக் தொடங்கும் போது பெரிதாய் திட்டமோ, தோட்டம் பற்றி நாமும் ஏதாவது எழுத முடியும் என்ற நம்பிக்கையோ கிடையாது. இன்றைக்கு நண்பர்கள் உங்களது மேலான ஆதரவில் 400+ நண்பர்கள் எனது தோட்டம் ப்ளாக்-ஐ தொடர்கிறார்கள். ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது. என் முயற்சிகள் ஒரு சில பேருக்கு பயன்படுவது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி. 


தனி ஒரு வெப்-சைட் தொடங்க மனதில் ஒரு திட்டம் இருந்தாலும் எட்டு மாதத்திற்கு முன்பு தான் அதற்கு ஒரு முழுமையான வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். எனது கல்லூரி நண்பன் ஒருவர் சென்னையில் சின்னதாய் Web design கம்பெனி ஓன்று நடத்தி வந்தான். அவனுடன் பேசிய போது, சின்னதாய் ஒரு பட்ஜெட்டில் ஆரம்பிக்கலாம் என்று என்ன மாதிரி வெப்-சைட் வேண்டும் என்று நானே ஒரு டிசைன் போட்டு கொடுத்து ஓரளவுக்கு ஆரம்பித்தோம். இரண்டு மாதம் ஓடிப் போனது. சில வேலை காரணங்களால் நண்பன் பெங்களுருக்கு இடம் மாற்றிய போது வெப்-சைட் வேலையை தொடர முடியாமல் போனது. மொத்தம் இருபது சதவீதம் தான் செய்திருப்போம். அதை தொடர முடியாமல் அப்படியே விட்டு விட்டோம்.

நான் மென்பொருள் துறையில் இருந்தாலும், டெக்னிகலா எனது ஏரியா Mainframe என்று சொல்லப்படுகிற 1960s டெக்னாலஜி தான். வெப் டிசைன் பற்றி சுத்தமாய் தெரியாது. அதுவும் மேனேஜர் ஆன பிறகு மேய்த்தல், காத்தல், அழித்தல் போன்ற வேலைகள் மட்டுமே செய்வதால் டெக்னாலஜி கொஞ்சம் தூரமாய் போய்விட்டது. வெளிய கொடுத்து செய்யும் அளவுக்கு பட்ஜெட் திட்டமிடவில்லை. வேறு வழி இல்லாமல் நானே எடுத்து செய்து பார்க்கலாம் என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு மாதத்திருக்கு பிறகு இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறேன். சில கட்டத்தில் என்பது சதவீதம் முடித்து சில பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் மறுபடி முதலில் இருந்து செய்யும் படி ஆனது. நிறைய கற்றுக் கொண்டேன். வெப்சைட் எனக்கு திருப்தியாகவே வந்திருக்கிறது. இந்த வெப்சைட்-ல் உள்ள ஒவ்வொரு விசயமும் நானே உருவாக்கியது என்பதில் சந்தோசமே. முடிந்த அளவுக்கு எந்த பெரிய பிரச்சனையும் தெரியவில்லை. நண்பர்கள் நீங்களும் பார்த்து, உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

‘தோட்டம்’ என்னும் அடைமொழி தானாகவே என்னுடன் ஒட்டிக்கொண்டு ‘தோட்டம்’ சிவா ஆகிப் போனேன் (மொட்ட சிவா, கெட்ட சிவா மாதிரி இந்த ‘தோட்டம்’ சிவாவும் ஒரு ஓரமாய் இருந்து விட்டுப் போகிறான்.. சரி தானே J ). வெப்-சைட்-க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து kovai-garden, kovai-thoddam, siva-thoddam என்றெல்லாம் யோசித்து கடைசியில் நம்ம trade-mark தோட்டத்தையே வைத்து விட்டேன்.  

ப்ளாக்-ஐ விட தனி வெப்-சைட் என்று போகும் போது நிறைய விசயங்களை செய்ய முடியும் என்று நினைக்கிறேன் (என்ன.. கொஞ்சம் செலவு தான் ஆகிறது :) ). சில புதிய பகுதிகளை (Showcase your Garden, Join with Thoddam) அறிமுகப்படுத்தி இருக்கிறேன். வீடியோ மற்றும் படங்களுக்கு என்று தனியாக ஒரு பகுதி கொடுத்திருக்கிறேன். இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஒரு மன்றம் (Discussion Forum) ஒன்றை அறிமுகப் படுத்த திட்டம் இருக்கிறது.

பழைய பதிவுகளில் சில formatting (spacing between Paragraphs) பிரச்சனைகள் இருக்கும். Blogger-ல் இருந்து அப்படியே இங்கே எடுத்துப் போட்டால் சில formatting பிரச்சனைகள் வருகிறது. அதை இப்போதைக்கு அப்படியே விட்டுவிட்டேன். Subscribe செய்ய நீங்கள் மெயில் ஐ.டி கொடுத்து submit செய்ததும் அந்த பாக்ஸ் கொஞ்சம் கீழே வருகிறது. இதனால் பெரிதாய் ஒன்றும் பிரச்னை இல்லை. இது தவிர வேறு ஏதும் பிரச்சனைகளை பார்க்கவில்லை.

எல்லா பகுதிகளையும் பாருங்கள். ஏதும் பிரச்னை தெரிந்தால் கூறுங்கள். அதை சரி செய்த எனக்கு உதவியாக இருக்கும். முக்கியமாக mail subscription பகுதியில் ஏதும் பிரச்சனை வந்தால் உடனே கூறுங்கள். இதை ரெடி செய்ய தான் நான் ரொம்ப திணறி போனேன். நண்பர்கள் எல்லோரும் எனது ப்ளாக்கில் கொடுத்த உங்களது வழக்கமான மெயில் ஐடி-யை மறுபடி ஒருமுறை இந்த வலைத்தளத்திலும் கொடுத்து subscribe செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் subscribe செய்தவுடன் உங்கள் மெயில் ஐடி-க்கு subscription-activate செய்ய ஒரு லிங்க் வரும். அதை க்ளிக் செய்தால், புதிய பதிவுகள் பற்றிய notification வர ஆரம்பிக்கும். இதில் ஏதும் பிரச்சனை என்றால் உடனே கூறுங்கள்.

 இந்த வெப்-சைட் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கு உதவியாக இருக்கும். எல்லாம் நல்லபடியாக போனால் அடுத்த பதிவில் இருந்து புதிய தோட்டத்திலேயே (தோட்டம்.wordpress.com) தொடரலாம் என்று இருக்கிறேன்.

Saturday, February 27, 2016

விதை சேகரிப்பு (கத்தரிக்காய்) - வீடியோ பதிவு



இந்த வாரம் செம கடுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. கூகிள் எனது thoddamsiva அக்கவுண்டை சஸ்பெண்ட் செய்து விட்டது. இப்போது அதில் நான் வைத்திருந்த எனது தோட்டம் வீடியோ சேனல் எல்லாம் காலி. ஏற்கனவே அப்லோட் செய்த வீடியோ லிங்க் இப்படி வருகிறது.  



நான் இந்த அக்கவுண்டை வீடியோ பதிவுக்காக மட்டுமே ரெடி செய்திருந்தேன். அது தவிர சில நண்பர்கள் தோட்டம் சம்பந்தமாக ஏதும் மடல் அனுப்பிக் கேட்டால் பதில் அனுப்புவது உண்டு (எனது ப்ளாக் அக்கவுண்ட் மெயில் வேறு.. அது thooddamsiva.. two ‘oo’s.. ). அதை தவிர நான் இந்த மெயில் ஐடி-யை பயன்படுத்தியது கூட இல்லை. திடிரென்று நீங்கள் terms & conditions-ஐ மீறி விட்டீர்கள் என்று ஒரு மெசேஜ் வருகிறது. முதல் முதலாய் இப்படி கூட நமது மெயில் அக்கவுண்ட்டை கூகிள் காலி செய்யும் என்று பார்க்கிறேன். இதை நான் கேள்விப் பட்டது கூட இல்லை.

பதிவுக்கு வரலாம். விதை சேகரிப்பு பற்றிய ஒரு சின்ன வீடியோ தொகுப்பு. பொதுவாய் வெண்டை, அவரை மற்றும் எல்லா கொடி வகைகளை காய்களை நன்றாக முற்ற விட்டு நாம் விதை எடுத்துக் கொள்ளலாம். மிளகாய்க்கு வற்றலாக விட்டு விதை எடுத்துக் கொள்ளலாம். தக்காளிக்கு கூற வேண்டியதில்லை. நல்ல கனிந்த பழத்தை எடுத்தாலே போதும். கத்தரி மட்டும் கொஞ்சம் tricky . அதுபற்றிய ஒரு வீடியோ.

நாட்டு காய்களில் இருந்து மட்டும் இப்படி நாம் அடுத்த சீசனுக்கு விதை எடுப்பது நல்லது. விதைகளை ஒரு வருடம் வரை மட்டும் வைத்து பயன்படுத்தலாம். காலாவதி ஆகிய விதைகள் நிறைய பிரச்சனை கொடுக்கக் கூடும் (நோய் தாக்குதல் அதிகமாக இருக்கலாம், விளைச்சல் சரியாக இருக்காது).

ஹைப்ரிட் செடிகளில் இருந்து விதை எடுத்தால் செடி முளைக்குமா என்றால், முளைக்கும். ஆனால் சரியான விளைச்சல் கிடைக்காது. செடியும் நன்றாக வராது. ஒரு வேலை அடுத்த சீசன் மட்டும் ஓரளவு விளைச்சல் கொடுத்தாலும் மீண்டும் அதில் இருந்து விதை எடுக்க அதன் விளைச்சல் குறைந்து கொண்டே போகும். முடிந்த அளவுக்கு ஹைப்ரிட் செடிகளில் இருந்து விதை எடுப்பதை தவிர்க்கலாம்.

கத்தரியில் விதை சேகரிப்பு பற்றிய வீடியோ இதோ,


Sunday, February 14, 2016

என் வீட்டுத் தோட்டத்தில் – சொடக்கு தக்காளி



தேவையான காய்கறிகள் விளைவிப்பது தவிர்த்து வீட்டுத் தோட்டத்தின் இன்னொரு முக்கிய பங்கு குழந்தைகளுக்கு இயற்கை மீது ஈடுபாடு கொண்டு வருவது. அதற்காக குட்டீஸ்களுக்கு தோட்டத்தில் வைத்து பாடம் எல்லாம் எடுத்தால் ஓடி விடுவார்கள். அவர்களை செடிகள் மீதான ஈடுபாட்டை அவர்களுக்கு பிடித்த விசயங்களை தோட்டத்தில் கொண்டு வருவதன் மூலம் உருவாக்கலாம். எங்க வீட்டுக்கு வரும் குட்டீஸ் முதலில் கொய்யா மரத்தை பார்ப்பார்கள். பிறகு மணத்தக்காளி பழுத்து கிடந்தால் அதை பறிப்பார்கள். அடுத்தது சொடக்கு தக்காளி செடியை உலுப்பி பழம் தேடுவார்கள். இப்படி தோட்டத்தில் குழந்தைகளுக்கு பிடித்த செடிகள் வைப்பது இன்னும் தோட்டத்தை அழகாக்கும். 

சொடக்கு தக்காளி. இது நிறைய பேருக்கு ஒரு புது பெயராக இருக்கும். கீழே பார்க்கும் பழத்தை உங்க ஊரில் என்னவென்று சொல்வீர்கள் என்று தெரியவில்லை.




எங்க ஊரில் சொடக்கு தக்காளி. இதன் காய் ஒரு பலூன் போல இருக்கும். உள்ளே பழம் பொதிந்து இருக்கும். நாங்கள் இதை வாயில் வைத்து ஊதி அதை அடுத்தவன் மண்டையில் ஓங்கி அடிப்போம். சொடக்கு விடுவது போல சத்தத்தோடு வெடிக்கும். அதனால் இதற்கு சொடக்கு தக்காளி என்று பெயர். எங்கள் விளையாட்டுகளுள் இதுவும் ஓன்று. தவிர நாங்கள் வீட்டில் இருந்ததை விட தேரிக்காட்டுக்குள் சுற்றியதும், ஊரை சுற்றி கருவேலங்காட்டுக்குள் காட்டுப்பயல்களாக சுற்றியதும் தான் அதிகம். அது ஒரு தொலைந்து போன சொர்க்கம். சொடக்கு தக்காளி, புட்டு முருங்கை என்று காட்டில் பழுத்து கிடக்கும் அத்தனை பழங்களையும் இஷ்டத்துக்கு பறித்து சாப்பிட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்போம். இதை பற்றி எழுத ஆரம்பித்தால் போய்க் கொண்டே இருக்கும், So.. Back to gardening..

சொடக்கு தக்காளியில் இரண்டு வகை உண்டு. ஓன்று சாதாரணமாக பச்சை நிறத்தில் இருக்கும்.  இது பொதுவாக ஊரில் எல்லா இடத்திலும் முளைத்து கிடக்கும். நிறமும் ருசியும் கொஞ்சம் குறைவு.




இன்னொன்று ‘நெய்’ தக்காளி என்போம். அதன் பழம் கொஞ்சம் வரி எல்லாம் போட்டு இருக்கும். பழமும் கூடுதல் ருசியோடு இருக்கும். (அதனால் நாங்கள் ‘நெய்’ தக்காளி என்போம்). இதில் நெய் தக்காளி இங்கே கோவையில் தோட்டத்தில் நிறைய தானாக வளரும். நானும் ஒரு சில பைகளில் விட்டு வைத்து நிறைய பழம் பறிப்போம். 




இதில் மூன்றாவது வகை தான் இந்த பதிவில் கொடுத்திருப்பது. இதன் இலை கொஞ்சம் பவுடர் பூசியது போல மென்மையாக இருக்கும். பழமும் கொஞ்சம் மஞ்சள்-ஆரஞ்சு கலரில் இருக்கும்.           

நான் பொதுவாய் ebay இணையதளத்தில் விதைகள் வாங்க பரிந்துரைப்பதில்லை. பத்து ரூபாய்க்கு கிடைக்கும் விதைகள் ebay-ல் ஐம்பது ரூபாய் இருக்கும். தனி நபர் வர்த்தகம் என்பதால் கூரியர் செலவு,பேக்கிங் செலவு என்று பார்த்தால் அவர்கள் பத்து ரூபாய்க்கு விற்க முடியாது தான். ஆனால் நிறைய ஏமாற்று வேலை தான் நடக்கும். ‘வாங்கின விதை ஒரு மாசமாச்சு...முளைக்கவே இல்லை’ என்று நூறு ரூபாய் கொடுத்து விதை வாங்கினவன் ஒரு Negative Feedback கொடுத்து சாணி அடிச்சா, அங்கே இருந்து விற்றவன் ‘Germination depend on so many factors and weather condition. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாமே. மூஞ்சில குத்தறதுக்கு முன்னாடி (negative comment) சொல்லிட்டு குத்தவும்’ என்று இவனும் இங்கே இருந்து சாணி அடிப்பான். நிறைய ebay பரிமாற்றங்கள் இப்படி தான் இருக்கும்.

நான் பொழுது போகவில்லை என்றால் ebay-ல் தோட்டம் சம்பந்தமான பொருட்கள், விதைகள் பட்டியலை பார்த்துக் கொண்டிருப்பேன். Rainbow ரோஸ், 12 கலரில் ரோஸ் (அதுவும் விதையாகவே கிடைக்கும்) என்று பார்த்தாலே கலர்புல்லா இருக்கும். அப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த சொடக்கு தக்காளி விதையும் கண்ணில் பட்டது. அமெரிக்காவில் இருக்கும் போது அங்கே உழவர் சந்தையில் இதை ஒரு பண்டமாக விற்பதை பார்த்திருக்கிறேன். சாதாரண சொடக்கு தக்காளியை விட பெரிதாக, நல்ல நிறமாக இருக்கும். விலையை கேட்டால் 5 டாலர் என்பார்கள். போன வேகத்தில் திரும்பி வந்து விடுவோம். அமெரிக்கா போய் சேர்ந்தவுடன் நம்ம மண்டைல ஒரு டாலர்-to-ரூபாய் கால்குலேசன் ஓன்று ஒட்டிக் கொள்ளும். எதை பார்த்தாலும் அது நாற்பதால பெருக்கி பார்த்து கொள்ளும் நமது புத்தி. சொடக்கு தக்காளிக்கு இருநூறு ரூபாயா என்று எட்டிப்பாராமல் வந்து விடுவேன் (அப்போது டாலர் விலை Rs.38 – Rs.40 தான் இருந்தது). இருந்தாலும் நாம் சாதரணமாய் பறித்து சாப்பிட்டு சுற்றிக் கொண்டிருந்த ஓன்று அமெரிக்காவில் ஒரு பண்டமாய் பார்த்ததில் சந்தோசம். 

Farmers Marker - Minneapolis (USA)

Farmers Marker - Minneapolis (USA)


அதையே இங்கே ebay-ல் பார்த்த போது வாங்கி முயற்சித்து தான் பார்க்கலாமே என்று இருந்தது. Ground Cherry அல்லது Gooseberry  என்கிறார்கள். வெறும் பத்து விதைக்கே விலை Rs.120 என்று இருந்தது. விதை இங்கே கொடைக்கானலில் இருந்து விற்கிறார்கள் என்று தெரிந்ததும் ஓரளவுக்கு நம்பிக்கை வந்து ஆர்டர் செய்து விட்டேன். (இதன் விதை இப்போது Omaxe தளத்தில் கூட கிடைக்கிறது). ஒரு வாரத்திலேயே விதை வந்துவிட்டது. பத்து விதை என்று சொன்னாலும் இருபது விதை வரை பாக்கெட்டில் இருந்தது. கூடவே இலவசமாய் ஒரு காரட் விதை பாக்கெட்டும்.

அதிக விலை கொடுத்து வாங்கியதால் கொஞ்சம் அதிக அக்கறையோடு ஒரு நர்சரி ட்ரேயில் போட்டு நீர் ஊற்றி வந்தேன். விதை முளைக்குமா, இல்லை நாமும் ஒரு கூடை சாணி அடிக்க வேண்டுமா என்று ஒரு சின்ன கவலை. முதலில் நினைத்தது மாதிரி நிறைய விதைகள் முளைத்தது. இருபதில் பதினைந்து போல முளைத்தது. அவற்றை ஓன்று விடாமல் காப்பாற்றி தனி தனி பையில் வைத்து விட்டேன் (ஒரு அடி அகல HDPE Grow Bags).

முதலில் நன்றாக வந்து கொண்டிருந்த செடிகள், ஒரு அளவுக்கு மேல் இலை சுருட்டு நோய் தாக்கியது போல ஆனது. சரி, இது கொடைக்கானல் மாதிரி மலைபிரதேசத்திற்கு தான் லாயக்கு போல என்று நினைத்த வேளையில் தொடர் மழை வந்து காப்பாற்றியது. ஒன்றுமே செய்யவில்லை, இரண்டு நாள் மழைக்கே இலை சுருட்டல் எல்லாம் போய் செடிகள் எல்லாம் செழிப்பாகி விட்டது. இப்படி நிறைய சூழ்நிலைகளில் மழை வந்து காப்பாற்றுவது உண்டு.

இலை சுருட்டல் நோய்  

மழைக்கு முன்


மழைக்கு பின் - செழிப்பாய் செடிகள் 


பழத்தின் ருசி என்று பார்த்தால் ரொம்ப விசேசமாய் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என் தோட்டத்தில் சாதாரணமாய் வளர்ந்து காய்க்கும் ‘நெய்’ தக்காளியே இதைவிட இனிப்பாக இருக்கும். இருந்தாலும் ஆசையாய் வாங்கி வளர்த்து வெற்றிகரமாய் பழம் பறித்து சாப்பிட்டதில் சந்தோசமே.