Wednesday, December 24, 2014

தோட்டத்து விருந்தாளிகள்

தோட்டத்தில் விதை போடுகிறோம், செடி வளர்க்கிறோம். அறுவடை செய்கிறோம். அதை சமைத்து சாப்பிடும் போது ஒரு பெரிய சந்தோசம். அதிகமாய் வரும் போது அதை சொந்த பந்தங்களுக்கு கொடுக்கிறோம். அதிலும் ஒரு சந்தோசம். அதையும் தாண்டி இவ்வளவு பசுமையாய் செடியும் மரங்களுமாய் உருவாக்கிய இடத்தில் சில பறவைகளுக்கும், அணில்களுக்கும் கொஞ்சம் இடமும் உணவும் கொடுத்தால் இன்னும் சந்தோசம் தானே.

விவசாயம் என்பதே பிற உயிர்களுக்கும் உணவளிப்பதாக இருக்க வேண்டும் என்று மறைந்த நம்மாழ்வார் ஐயா கூறுவார். இயற்கையின் அமைப்பு அப்படித்  தான் இருந்தது. நாம் ரசாயன உரங்களை அள்ளிப் போட்டு நிலத்தில் இருக்கும் நுண்ணுயிர்கள், மண்புழு என்று அத்தனை உயிர்களையும் அழித்தோம். பிறகு பூச்சிக் கொல்லி என்ற பெயரில் அத்தனை விஷத்தையும் தெளித்து அதை கொஞ்சம் சாப்பிட்டு கொண்டு அலைந்த பறவைகளையும் அழித்து, நாமும் அழிந்து கொண்டிருக்கிறோம். இப்படி தான் நமது விவசாயம் போய் கொண்டிருக்கிறது.

தோட்டம் ஆரம்பிக்கும் போதே சின்னதாய் அணில்களுக்கு ஒரு தட்டு செய்து அதில் கொஞ்சம் சூரியகாந்தி விதைகள் போட்டு வைத்த போது நிறைய அணில்கள் வந்து போவதை தொடக்கத்தில் இங்கே எழுதி இருந்தேன்.




பிறகு நிறைய பறவைகளும் வருவதை பார்த்து அவைகளுக்கு என்று நிரந்தரமாய் ஒரு வீடு ஒன்றை கட்டினேன். வீட்டை சுற்றி வளர்ந்த புல்லை வெட்டி கூரை எல்லாம் வேய்ந்து ஒரு வீடு. அதில் அவைகள் குடிக்கவும், நீந்தி விளையாடவும் சில தண்ணீர் தொட்டிகள் (Plastic Trays). அணிகளுக்கு சூரியகாந்தி விதை கிண்ணம், பறவைகளுக்கு பழங்கள் வைக்க தட்டு என்று அமைத்தேன். நிறைய அணில்களும், பறவைகளும் வர ரெகுலராக ஆரம்பித்தது. அவைகள் நான் வைத்திருக்கும் தண்ணீரில் குளித்து கும்மாளம் போடும் அழகே தனி. இதை எல்லாம் ஒரு ஓரமாய் அமர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கலாம். மனதுக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கும்.















எங்க வீட்டை சுற்றி எப்பவுமே அராஜகம் செய்துகொண்டு சுற்றும் ஒரு பறவை கூட்டம் பூணில் (இந்த பறவையை நீங்கள் எப்படி கூறுவீர்கள் என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் Jungle babblers என்கிறார்கள்). அவைகளின் கூடு ஓன்று எப்பவுமே எங்க வீட்டு ஜாதி மல்லி கொடியில் இருக்கும். அவை முட்டையிட்டு குஞ்சு பொறித்து பறக்கும் வரை ஒரு தொடர் புகைப்படம் கூட எடுத்திருக்கிறேன். முட்டையில் இருந்து வெளியே வந்து வெறும் பத்தே நாளில் பறந்து விடுகிற அளவுக்கு வேகமாய் வளர்வது ஆச்சரியம். 











கீழே உள்ள படங்கள் தோட்டத்தில் மா மரத்தில் தையல் பறவை (Tailor Bird) ஓன்று கூடு கட்டியபோது எடுத்தேன்.








வீடு என்று இருந்தால் சிட்டுக்குருவி இல்லாமலா?. சில பறவைகள் மனிதனை நம்பி வாழ்பவைகளாகவே அமைந்தவை. அதில் சிட்டுக்குருவியும் ஓன்று. முன்பெல்லாம் வீட்டில் சமையல் பாத்திரம் எல்லாம் கழுவ வெளியே எடுத்து போட்டிருப்பார்கள். அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் சோற்றை சிட்டுக் குருவிகள் சாப்பிட்டுக் கொள்ளும். கோழிகளுக்கு தூவும் அரிசி, கம்பு போன்றவற்றை நிறைய குருவிகளும் கோழிகளோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொள்ளும். நெல் அவித்து காய போட்டிருப்பார்கள், தானியங்கள் காய வைத்திருப்பார்கள் அவைகள் மூலம் நிறைய பறவைகள் பசியாற்றிக் கொள்ளும்.

ஊரில் அம்மா வீட்டில் இப்போதும் ஒரு பெரிய சிட்டுக் குருவி கூட்டமே சுற்றிக் கொண்டிருக்கும். அவை பாட்டுக்க வீட்டிற்குள்ளேயே வந்து அம்மா போட்டு வைத்திருக்கும் அரிசியை சாப்பிடும். நாம் வாசலிலேயே அமர்ந்திருந்தாலும் மதிக்கவே செய்யாது. தைரியமாய் உள்ளே வந்து போகும்.




இப்போது யாரும் சமையல் பாத்திரம் கழுவ வெளியே போடுவதில்லை. அப்படியே போட்டாலும், நாம் பயன்படுத்தும் dish washer liquid எல்லாம் கலந்த சோற்றை சாப்பிட்டால் இருக்கிற கொஞ்சம் குருவிகளும் காலி ஆகிவிடும். மருந்துக்கு கூட வீட்டுக்கு வெளியே உணவு பொருட்கள் கொட்டாத  அளவுக்கு வாழ்க்கை முறை மாறிவிட்டது   (ஆனால் மூட்டை மூட்டையாய் பாலிதீன் கவரில் குப்பையை கொட்டுவோம்..அது வேற). இதனாலயே சிட்டுக்குருவிகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து விட்டது.

தொடக்கத்தில் இங்கே தோட்டத்தில் நிறைய பறவைகள் வந்தாலும் சிட்டுக்குருவிகள் வந்ததில்லை. பக்கத்துக்கு தெருவில் நிறைய பார்த்திருக்கிறேன். ஒரு நாள் ஒரே ஒரு குருவி எதேச்சையாய் வீட்டின் அருகில் மரத்தில் அமர்ந்திருந்தது. நான் ஓடி போய் கொஞ்சம் அரிசி கொண்டு வந்து அதன் பார்வையில் படும் படி வைத்தேன். அடுத்த நிமிடமே வந்து சாப்பிட்டு போனது. அடுத்த நாளே நமது உணவு கூடத்தின் புதிய கிளை ஒன்றை வீட்டின் முன்னால் திறந்து கொஞ்சம் அரிசியும், தண்ணீரும் வைக்க கொஞ்சம் கொஞ்சமாய் குருவி கூட்டம் வர ஆரம்பித்தது. இப்போது பத்து குருவிகள் வரை கூட்டமாய் வருகிறது.




பொதுவாய் சிட்டுக்குருவிகள் வீட்டில் எங்கேயாவது இருக்கும் இடைவெளிகளில் கூடுகட்டி வாழும். காங்க்ரீட் வீடுகள் வந்த பிறகு அதற்க்கும் இடம் இல்லாமல் ஆக்கி விட்டோம். மொபைல் டவர் கதிர்வீச்சால் அவைகள் குறைந்து விட்டதாக கூறுவதெல்லாம் சரி இல்லை என்றே கூறுகிறார்கள். அவைகள் குறைந்து போனதற்கு முக்கிய காரணம் உணவு கிடைக்காமல் போனதும் (வயலில் கிடைக்கும் நெல்லிலும், கம்பிலும் எவ்வளவு பூச்சி மருந்து இருக்கும் என்று சொல்ல தேவை இல்லை), வசிக்க இடம் இல்லாமல் போனதும் முக்கிய காரணம் (அதற்கு காரணம் நாம் தான்). இங்கே Nest Box சில வைத்து விடலாம் என்று இருக்கிறேன். விசாரித்து பார்த்ததில் கோவையில் எங்கும் கிடைக்கவில்லை. நானே செய்து வைத்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.   

ஒரு முறை இங்கே மைனா கூட்டம் ஓன்று இடம் இல்லாமல் மூடிக்கிடக்கும் கடை ஒன்றின் ஷட்டர் இடைவெளியில் கூடுகட்டி வைத்திருந்தது. அந்த ஷட்டரை திறந்தால் அவ்ளோ தான். அவைகளுக்கு சுத்தமாய் இடமே இல்லாமல் போனது நன்றாகவே தெரிந்தது. இதை பார்த்த பிறகு வீட்டில் நான் சில ஓடுகளை வாங்கி சில அமைப்புகளை உருவாக்கி வைத்தேன். இன்னும் ஏதும் கூடு கட்டவில்லை. எதாவது கூடு காட்டுகிறதா என்று பார்க்கலாம்.





   இப்போது எங்க வீட்டில் சரியாய் காலை 7 மணிக்கு பார்த்தால் ஒரு ஜோடி Bulbul பறவை வந்து பழம் வைக்க வில்லை என்றால் வீட்டை சுற்றிக் கொண்டே இருக்கும். அணில் கூட்டம் எல்லாம் அவ்வளவாய் மாதுளை பழங்களை சேதம் பண்ணுவதில்லை. வந்து கொஞ்சம் சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டுவிட்டு போய்விடும். மைனா கூட்டமும், பூணில் கூட்டமும் குளித்து கும்மாளம் இட்டுக்கொண்டிருக்கும். சிலநேரம் மரங்கொத்தி, செம்பருந்து என்று பெரிய சில பறவைகளும் வந்து நீரருந்தி செல்கிறது.




நண்பர்கள் முடிந்தால் வீட்டில் சின்னதாய் இரண்டு Tray வாங்கி ஒன்றில் தண்ணீரும், ஒன்றில் அரிசி, தானியம் எதாவது போட்டு வையுங்கள். முக்கியமாய் கோடை காலங்களில் அவை தண்ணீருக்கு ரொம்பவே கஷ்டப்படும். தண்ணீராவது ஒரு நிழலில் வைத்து பாருங்கள். கண்டிப்பாய் நமது தோட்டம் இன்னும் அழகாய் மாறும்.




Friday, December 5, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – காளான்



இது உண்மையில் என் வீட்டுத் தோட்டத்தில் இருந்து அல்ல. சகோதரி பவித்ரா தோட்டத்தில்/வீட்டில் இருந்து. தோட்டம் ப்ளாக் மூலமாக நிறைய நண்பர்கள் அறிமுகம் கிடைத்திருக்கிறது. தோட்டம் பற்றி தகவல் பரிமாற்றம், உதவிகள், விதைகளை பகிர்ந்து கொள்ளுதல் என்று நான் நினைத்த மாதிரியே நண்பர்கள் வட்டம் அமைய எனக்கு இந்த தோட்டம் ப்ளாக் ரொம்பவே உதவியாக இருக்கிறது. நான் இந்த ப்ளாக் ஆரம்பித்தன் காரணமும் அது தான். நண்பர்கள் மூலமாக நான் அறிந்து கொண்ட, கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம்.

அப்படி அறிமுகமான சகோதரி பவித்ரா (கோவை) அனுப்பிய மடலில் ஒரு முறை வீட்டிலேயே காளான் வளர்க்க ஆரம்பித்திருப்பதாக கூறி இருந்தார்கள். நான் ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருந்த விஷயம். முன்பு ஒரு முறை இங்கே விகடன் சார்பில் ஒரு தோட்டம் பயிற்சி முகாமுக்கு சென்ற போது காளான் வளர்ப்பு பற்றி ஒரு செய்முறை விளக்கம் காட்டினார்கள். ஆனால் அதை செய்ய நமக்கு தனியாக கீற்று கொட்டாய் போன்று அமைப்பு தேவை படும் என்பதால் அதை முயற்சிக்க யோசிக்க வில்லை. சகோதரி பவித்ரா மடலை பார்த்த போது உடனேயே விவரம் கேட்டுக் கொண்டேன்.

அவர்கள் facebook-ல் கொடுத்த விவரங்களை நான் தமிழில் மாற்றி இங்கே கொடுக்கிறேன். ஏதும் கேள்வி, சந்தேகம் இருந்தால் கமெண்ட்-ல் கேளுங்கள். பதில் கிடைக்கும். இப்போது பதிவு..

தேவையான பொருட்கள்

Oyster mushroom spawn
பிளாஸ்டிக் பை
வைக்கோல்

காளான் விதைகள் பொதுவாய் சோளம் மாவு போன்ற ஒரு மாவில் கலந்து கொடுக்கிறார்கள். விதைகள் சிறியதாக இருப்பதால் கையாள எளிதாக இப்படி கொடுக்கிறார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் நிறைய காளான் வளர்ப்பு பண்ணைகள் சுற்றி இருக்கிறது. விசாரித்து தேவையான spawn வாங்கி கொள்ளலாம்.  

வைக்கோல் தான் காளானுக்கு உணவு, சத்து எல்லாமே. பக்கத்தில் யாரவது மாடு வைத்திருந்தால், வைக்கோல் வைத்திருந்தால் கொஞ்சம் வாங்கி கொள்ளலாம். வைக்கோலை கண்ணாடி பொருட்களை பேக்கிங் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். எதாவது தெரிந்த கடைகளில் கேட்டுப் பார்க்கலாம். தவிர காளானுக்கு முளைத்து வளர குளிர்ச்சியான, சுத்தமான, இருட்டான இடம் வேண்டும்.

இப்போது விவரமாக பார்க்கலாம். 

 
செய்முறை  


1.     வைக்கோலை 3 செ.மீ அளவுக்கு கத்தரியால் வெட்டி கொள்ளவும்
2.     ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து கொதிக்க வைக்கவும். வெட்டிய வைக்கோலை நீரில் போட்டு ஒரு மூடியால் மூடி, லேசான தீயில் ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கவும். பிறகு நன்றாக நீரை வடித்து விட்டு ஒரு நியூஸ் பேப்பரில் நீர் வடியும் உலர விடவேண்டும். சுத்தமாக உலர்ந்து விடக் கூடாது. பிழிந்தால் நீர் கொட்டக் கூடாது. ஆனால் நன்றாக ரம் இருக்க வேண்டும் (60 %  ரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்).
3.     ஒரு நீளமாக பிளாஸ்டிக் பேக் ஒன்றை எடுத்து (spawn வாங்கும் இடத்திலேயே கிடைக்கலாம்) முதலில் 3 இஞ்ச உயரத்திற்கு தயார் செய்த வைக்கோலை இறுக்கமாக அடுக்கவும். வைக்கோலை சடை போல சுற்றி அடுக்கலாம். நாம் எவ்வளவு இறுக்கமாக அடுக்குகிறோமோ அந்த அளவுக்கு காளான் நன்றாக வரும். அடுக்கிய பிறகு நன்றாக கைகளால் அழுத்தி இறுக்கமாக்கலாம் (கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது ரொம்ப முக்கியம்)
4.     பிறகு ஒரு உள்ளங்கை அளவுக்கு spawn எடுத்து பையின் ஓரத்தில் சுற்றி தூவவும் (நடுவில் போட கூடாது. ஓரத்தில் இருந்து மட்டுமே காளான் முளைத்து வரும்)
5.     பிறகு அதற்கு மேலே 2 இஞ்ச அளவுக்கு இன்னொரு அடுக்கு வைக்கோலை இறுக்கமாக அடுக்கவும். பிறகு அதில் spawn தூவவும்.
6.     பிறகு இன்னொரு அடுக்கு, spawn. கடைசியாக வைக்கோலை அடுக்கி பையை இறுக்கமாக ஒரு கயிற்றால் கட்டவும்.
7.     காற்று போக அங்கே அங்கே சிறியதாக ஒரு துளைகளை போடவும் (லேசாய் குத்தி விட்டால் போதும்) 

இப்போது காளான் முளைக்க தயார். அடுத்ததாக அதை வைத்து வளர்க்க ஒரு அறை ஓன்று வேண்டும். நம் வீட்டில் பகலில் கூட நன்றாக இருளாக இருக்கும் ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கவும் (அலமாரி அல்லது கட்டிலின் கீழ்)

1.     தேர்ந்தெடுத்த இடத்தை டெட்டால் போட்டு கழுவி நன்றாக சுத்தம் செய்யவும். காளான் வளர்ப்பில் இந்த சுத்தம் ரொம்ப முக்கியம்.
2.     பிறகு தயார் செய்த காளான் பைகளை அதற்குள் வைக்கவும். சில அரிசி சணல் சாக்கு பைகளை அந்த இடத்தை சுற்றி கவர் செய்யவும்.
3.     ரப்பதத்தை ஒரே அளவில் வைத்துக் கொள்ள ஒரு நாளைக்கு இரண்டு முறை அந்த சாக்கு பையில் நீர் தெளித்து வரவும்
4.     மூன்று நான்கு நாளில் பையில் இருந்து பூஞ்சை மாதிரி (mycelium) வளர ஆரம்பிக்கும். இரண்டு வாரத்தில் பை முழுவதும் படந்து இருக்கும்.
5.     பையை வெளியே எடுத்து வைக்கோல் அடுக்கு இடைவெளிகளில் (spawn தூவி mycelium வளர்ந்திருக்கும் இடங்களில்) சுத்தமான கத்தி ஒன்றை வைத்து எதையும் சேதப் படுத்தாமல் X போன்று கீறி விடவும்.
6.     இப்போது இந்த பைகளை நல்ல வெளிச்சம் இருக்கும் இடத்திற்கு மாற்ற வேண்டும். வெளிச்சம் பட்டு தான் காளான் வெளியே வரும். தினமும் மூன்று முறை நீர் தெளித்து வரவும் (தேவையானால் ஐந்து முறை கூட தெளிக்கலாம். சரியான ரப்பதம் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்)
7.     கொசு, பூச்சிகள் உட்காராமல் இருக்க கொசுவலை போன்று ஒரு அமைப்பை சுற்றி வைக்கலாம். பூச்சி, கொசு அமர்ந்தால் காளான் சரியாய் வராது.
8.     ஓரிரு நாளில் X கட்டிங் வழியாக காளான் மொட்டுக்கள் வெளியே வர ஆரம்பிக்கும். தொடந்து நீர் தெளித்து வரவும்
9.     3 – 5 நாட்களில் காளான் முழுமையாக வளர்ந்திருக்கும்.


காளான் நுனி கீழ் நோக்கி வளைந்திருக்கும் போதே அறுவடை செய்து விடவேண்டும். முற்ற ஆரம்பித்து விட்டால் நுனி மேல் நோக்கி வளைய ஆரம்பிக்கும். அப்புறம் பறித்தால் காளான் ருசி இருக்காது.


 விவரங்களை படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பவித்ரா.