Monday, September 29, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-6 (விளைச்சல் – கொடிகள் & English Vegetables)

இந்த சீசனின் மிக பெரிய சொதப்பல் இந்த ஏரியா தான். மூன்று பந்தல் தயார் செய்தும் ஒன்றிலும் சாதிக்க முடியவில்லை. புடலை, பாகல், சுரை, பீர்க்கங்காய் என்று அனைத்தையும் முயற்சி செய்து அதனையும் ஊற்றிக் கொண்டது. ஒரு பக்கம் மற்ற காய்கறிகள் எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்தாலும் கொடி என்னமோ சரியாய் வருவதில்லை.

செடிகள் பொதுவாய் சரியான வெயில், நல்ல மண், சரியான தண்ணீர் இருந்தால் வளர்ந்து விடும். வளர்ந்த பிறகு பூப்பதிலும், பிஞ்சி பிடிப்பதியும் பெரிதாய் பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் கொடிகள் அப்படி இல்லை. முதலில் வளர்ந்து வருவதில் இருந்தே பிரச்னை ஆரம்பித்து விடுகிறது. ஒரு ஐந்து-ஆறு இலைகள் வந்த பிறகு அப்படியே நரங்கி போய் விடுகிறது. சில நம் உயரத்திற்கு வளர்ந்த பிறகு அதன் குருத்து உயிரே இல்லாமல் கொடியின் வளர்ச்சி அப்படியே நின்று போய் விடுகிறது. புடலை செடியும், சுரையும் இப்படி தான் போனது. எவ்வளவோ முயற்சி எடுத்தும் தேற்ற முடியவில்லை.


அடுத்தது பீர்க்கங்காய். இங்கே வேற பிரச்னை. மூன்று கொடிகள் விட்டிருந்தேன். அவ்வளவு செழிப்பாக வளர்ந்தது. கொஞ்சம் ஓவராகவே வளர்ந்தது. இங்கே பிரச்னை காய்ப்பதில். கிட்டதட்ட மூன்று மாதம் ஆகியும் மொட்டு எதுவுமே வைக்க வில்லை. பிடுங்கி போட்டு விடலாம் என்று நினைக்கும் போது மொட்டு வைக்க ஆரம்பித்தது. நிறைய காய் மொட்டுகள் வைத்தாலும் பிஞ்சி பிடித்தது என்னமோ ஒன்றே ஓன்று தான். மற்ற எல்லாமே வெம்பி விடுகிறது, இல்லை பூப்பதே இல்லை. சாம்பிளுக்கு ஒரு காய் மட்டும் கிடைத்தது. அவ்ளோ தான். இவ்வளவு செழிப்பாய் வந்தும் இங்கே ஊற்றிக் கொண்டது.





ஊற்றிய தண்ணீருக்கும், செலவிட்ட நேரத்திற்கும் கொஞ்சம் உருப்படியாய் வந்தது பாகல் மட்டும். ஆனால் இங்கே வேற மாதிரி பிரச்சனை. செடி நன்றாக காய்த்தாலும் பீர்க்கங்காய் கொடிக்கு இடையே மாட்டிக் கொண்டு அமுங்கி போய் விட்டது. அதனாலயே சரியாய் இடம் கிடைக்காமல், வெயில் கிடைக்காமல் காய் குறைந்து விட்டது (பீர்க்கங்காய் இப்படி அநியாயத்துக்கு வளரும் என்று எதிர்பார்க்கவில்லை)


மொத்தத்தில் இந்த சீசனில் கொடி ஏரியா செம ஊத்தல். நிறைய பிரச்சனைகள். அவற்றில் சில

·         நாம் பொதுவாய் நாற்று விடும் போது ஐந்து செடியாவது விடுவோம். பிறகு அதில் ஓன்று-இரண்டு செடி மட்டும் வைக்காமல் அத்தனையையும் வைத்து விடுவோம் (தூர ஏறிய மனம் இல்லாமல்). இனி ஓன்று இரண்டு செடியோடு விட்டு விடனும்.
·         சில செடிகள் முளைத்து வரும் போதே ஒரு செழிப்பற்ற, உயிரற்ற ஒரு தோற்றத்திலேயே வளர்கிறது. விதை தரமற்றதாக, பழையதாக இருக்கலாம். இப்படி வரும் செடியை அவ்வளவு எளிதாக தேற்ற முடிவதில்லை. பிடுங்கி போட்டு விட்டு உடனே அடுத்த செடியை நடுவது நேரத்தை மிச்சப் படுத்தும்.
·         கொடிகளில் மட்டும் தான் இரண்டு விதமான பூக்கள் வரும் (காய் மொட்டு, வெறும் பூ மொட்டு – Male & Female flowers). காய் மொட்டு நிறைய வராமல் பிரச்னை வரும். இதற்கு எதாவது செய்யமுடியுமா என்று பார்க்க வேண்டும்.
·         கொடிகளில் இன்னொரு பிரச்னை தண்டு தடித்து போகுதல். பாகலில் பொதுவாய் இந்த பிரச்னை வரும். தண்டு பகுதி தடித்து போய் வளர்ச்சி அப்படியே நின்று போய் விடும். இதற்கு ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன். விவரமாய் பிறகு எழுதுகிறேன்.

கோஸ், காலி ஃப்ளவர் மற்றும் Broccoli

 இந்த ஏரியாவும் கொஞ்சம் ஊற்றிக் கொண்டது என்று தான் சொல்லவேண்டும். முக்கிய காரணம் தேவையான சத்து பற்றாக்குறை. முதன் முதலாக Grow Bag-ல் முயற்சித்தது. செடிகள் எல்லாம் ரொம்பவே செழிப்பகவே வந்திருந்தது. பிரச்னை எங்கே வந்தது என்றால், பூ வைக்கும் பருவத்தில். பொதுவாக காலி ஃப்ளவர் மற்றும் Broccoli-ஐ ‘heavy eater என்பார்கள். அதாவது இவைகள் நிறைய சத்தை உறிஞ்சும். Grow Bag-ல் வைத்ததனால் முதலில் போட்ட உரம் எல்லாம் இவை வளர்வதற்கே காலி ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். Broccoli-ல் முதல் பூ ரொம்ப சிறிதாக வந்த போதே இது தெரிந்தது. ஆனால் பிறகு நாம் மண்புழு உரம் போட்டு, அதை செடி கிரகிப்பதர்க்குள் செடி எல்லாம் பூத்து விட்டது. காலி ஃப்ளவர்–ம் அதே கதை தான். Chemical Fertilizer பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை வராது. நாம் உரம் போட்டதும் செடிக்கு சேர்ந்து விடும். Organic முறையில் போகும் போது, மண்புழு உரம் போட்டவுடனே செடிக்கு போய் சேராது. கொஞ்சம் காலம் எடுக்கும். அடுத்த முறை கொஞ்சம் திட்டமிட்டு வைக்க வேண்டும்.



காலி ஃப்ளவர் ஒரு வருடத்திற்கு முன்பு தரையில் போட்ட போது நன்றாகவே வந்திருந்தது (கீழே படம்)
Cauliflower in 2012 in my garden
இந்த முறை கோஸ் Grow Bag-ல் நன்றாகவே வந்தது. ஒரு ஐந்து பூ கிடைத்தது.     


வழக்கம் போல முள்ளங்கி நன்றாக வந்திருந்தது.  
   


(அடுத்த பதிவில் கீரை தோட்டம் எப்படி வந்திருந்தது என்று எழுதுகிறேன்)   








Friday, September 12, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-5 (விளைச்சல் – அடிப்படை காய்கறிகள்)

பதிவுக்கு போவதற்கு முன்பு, கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். இந்த வாரம் (இன்றும், நாளையும் – 13, 14 Sep 2014) இங்கே Vijaya Trade Center-ல் (சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில்) அக்ரி எக்ஸ்போ ஓன்று போய் கொண்டிருக்கிறது. Grow Bags, Coir Pith Bock, Seeds கிடைக்கும். முடிந்தால் போய் பாருங்கள்.  

இந்த சீசனை தொடங்கி மூன்று மாதம் முடிந்து விட்டது. கொஞ்சம் தோட்டம் பக்கம் போய் தற்போதைய நிலவரம், அறுவடை பற்றி பார்க்கலாம்.

இந்த சீசன் எப்படி என்றால், பரவாயில்லை என்று தான் சொல்ல முடிகிறது. ‘ரொம்ப சூப்பர் என்று சொல்ல முடியவில்லை. ஓவராய் காற்று, கொஞ்சம் பூச்சி தொல்லைகள் என்று சில சவால்கள் இருந்தன. சில செடிகள் ரொம்பவே சொதப்பி விட்டன. ஆனால் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பிரச்னை இல்லாமல் எடுக்க முடிந்தது. அதனால் தேவை பூர்த்தியானது மாதிரி தான்.

கடந்த இரண்டு மாதமாக வெங்காயம், தக்காளி இரண்டை தவிர வேறு ஒன்றும் கடையில் நாங்கள் வாங்க வில்லை (உண்மையாகவே). அப்படி பார்த்தால் வெற்றி தான். (தக்காளி கொஞ்சம் சொதப்பி விட்டது. நம்ம ஆளுங்க வெங்காயம் பயன்படுத்தும் அளவுக்கு நிரந்தர அறுவடை வேண்டும் என்றால் இன்னும் ஒரு கிரவுண்டு இடம் வேண்டும் J. வேறு வழி இருக்கிறதா என்று பார்க்கலாம்)

கீழே பார்ப்பது ஒரு நாளின் அறுவடை. ஒரு கூடை கொண்டு போய் தோட்டத்தில் இன்றும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தால் அரை கிலோவில் இருந்து ஒரு கிலோ வரை எதாவது காய்கறி கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் பறித்து எடுத்த படங்களோடு ஒவ்வொரு ஏரியாவா பார்க்கலாம்.

தக்காளி, கத்தரி மற்றும் மிளகாய்

கத்தரியில் வெள்ளை, வயலெட் இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. இந்த வெள்ளை கத்தரி இரண்டு வருடத்திற்கு முன்பு ஊரில் வாங்கி வந்த விதையில் இருந்து கொண்டு வந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து கொள்வேன். அதை அடுத்த முறை பயன்படுத்தி கொள்வேன். இது வரை விளைச்சலில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை.
வயலட் கத்தரி இங்கே DIY-ல் கொடுத்த ஹைப்ரிட் செடி. காய் ரொம்ப பெரிதாய் இருக்கும் என்று நினைத்தேன் (முன்பு TNAU-ல் இதே போல ஒரு வெரைட்டி கிடைக்கும். அது காய்த்து கொட்டும். காயும் பெரிதாய் இருக்கும்). இந்த வெரைட்டி நன்றாக காய்க்கிறது. காய் போக போக கொஞ்சம் சிறிதாகி விட்டது.

கத்தரி நீண்ட நாள் விளைச்சல் கொடுக்கும். இன்னும் இரண்டு மாதத்திற்கு விளைச்சல் இருக்கும் என்று நினைக்கிறேன்.




தக்காளி இந்த முறை பெரிய சொதப்பல் என்று தான் சொல்லணும். ஜூன் மாதத்தில் அடிக்க ஆரம்பித்த காற்று இன்னும் விட்ட பாடில்லை. சரியாய் காற்றடிக்கும் வழியில் மாட்டிகொண்டது.

பாதி செடி வானகம் ஸ்டாலில் வாங்கிய நாட்டு வகையும் பாதி DIY-ல் கொடுத்த ஹைப்ரிட் வகையும் போட்டு விட்டிருந்தேன். நாட்டு வகை சரியாய் வரவில்லை. காய் ரொம்பவே சின்னதாய் வந்திருக்கிறது (சில பழங்கள் முன்னால் செர்ரி தக்காளி எல்லாம் தோற்று விடும் அவ்ளோ சின்னது). ஹைப்ரிட் தான் ஊற்றிய தண்ணீருக்கு ஏதோ தக்காளியை கண்ணில் காட்டியது.




மிளகாய், DIY-ல் கொடுத்த ஹைப்ரிட் வகை. ஐந்து செடி தான் விட்டிருந்தேன். வீட்டு தேவைக்கு சரியாய் காய்த்துக் கொண்டிருக்கிறது. காயும் நீளமாய் நல்ல திரட்சியாய் இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் விளைச்சல் வரும் என்று நினைக்கிறேன்.



வெண்டை, அவரை மற்றும் கொத்தவரை    
      
நம்ம வீடு சமையலின் அடுத்த முக்கிய காய்கறிகள். இந்த மூன்றுமே இந்த முறை நாட்டு வகைகள் (வானகம்).

வானகம் விதைகள் முளைப்பு திறன் ரொம்பவே குறைவாகவே இருந்தது. 30% - 50% தான். பத்து விதைகள் போட்டால் மூன்று அல்லது நான்கு தான் முளைக்கிறது. அதனால் செடி பற்றாக்குறைக்கு வெண்டையில் மட்டும் கொஞ்சம் ஹைப்ரிட் விதைகள் போட்டு விட்டேன் (DIY-ல் கொடுத்தது).
மூன்றுமே நன்றாக வந்தது. நமது வார தேவைக்கு போக கொஞ்சம் அதிகமாகவே கிடைத்தது.   

நாட்டு காய்களின் தரம் என்பதை இந்த செடிகளில் தான் காண முடிந்தது. குறிப்பாக அவரை. ஹைப்ரிட் அவரை பொதுவாய் ஒரு காய்ப்புக்கு ஓய்ந்து விடும். ஆனால் இந்த நாட்டு காய் அதே காயத்த கிளையில் இருந்தே மறுபடி மொட்டு வந்து மறுபடி காய்க்கிறது. விளைச்சல் நீண்ட காலம் கிடைக்கிறது. காயும் அவ்ளோ ருசி (ஹைப்ரிட் காய் வெறும் நார் போல இருக்கும். இவை ரொம்ப திரட்சியாய் ஒரு நல்ல ருசியோடு இருக்கிறது. எங்களிடம் வாங்கி சமைத்த சொந்தங்கள் கூட அடுத்த முறை பார்க்கும் போது ‘அவரை ரொம்ப நல்ல இருந்திச்சி. என்ன காய்? என்று விசாரித்ததில் நாட்டு காயின் அருமை தெரிந்தது). கொஞ்சம் விதைக்கும் விட்டு எடுத்து வைத்திருக்கிறேன்.

வானகம் விதை முளைப்பு திறன் குறைவாக இருந்ததின் காரணம் கொஞ்சம் பழைய விதையாக இருந்திருக்கலாம். நான் விதைக்கு எடுத்த வெண்டை விதைகளில் 100% முளைப்பு திறன் கிடைத்தது.

மெதுவாய் நாட்டு ரகங்களுக்கு மாறுவது தான் எனது நீண்டகால திட்டம். அதன் ஒரு முயற்சியாகவே இந்த வெண்டை, அவரை, கொத்தவரை தோட்டத்தை அமைத்து இருந்தேன். நாட்டு ரகங்களின் வித்தியாசத்தை நன்றாகவே உணர முடிகிறது (வளர்ச்சியிலும் சரி, காயின் ருசியிலும் சரி). இதை அடுத்த முறையும் தொடர வேண்டியது தான். மற்ற செடிகளையும் மெதுவாய் மாற்ற வேண்டும்.










அடுத்த பதிவில் ஆங்கில காய்கறிகள், கீரைகளின் விளைச்சல் பற்றி கொடுக்கிறேன்.