Friday, September 21, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – தென்னை


 வீடு வாங்கிய போதே இரண்டு தென்னை மரங்கள் வீட்டின் முன்பே வைத்திருந்தார்கள். அவ்வளவாக திட்டமிட்டு வைத்தது மாதிரி தெரியவில்லை. ஒரு மரம் சுவற்றின் அருகிலேய இருந்தது. இரண்டுமே வெவ்வேறு வகை என்றும், ஓன்று சீக்கிரமே காய்க்கும் என்றும் கூறினார்கள். 

Pic A
தென்னை கொஞ்சம் சிக்கலான மரம் போல தான் தெரிகிறது. இணையத்தில் வாசித்த பொது எக்கச்சக்க பூச்சிகள், வண்டுகள், நோய்கள் என்று பட்டியல் இட்டிருந்தார்கள். மேலும் தென்னையில் ஏறி நம்மால் பராமரிக்கவும் முடியாது. இங்கே கோவையில் பொதுவாக இப்படி தென்னையை பராமரிக்கிறேன் என்று ஒரு கூட்டம் கையில் ஒரு அரிவாள், பையில் கொஞ்சம் மருந்து என்று சுற்றி கொண்டிருக்கும். நமக்கும் தேங்காய் பறித்து போட இவர்களை தான் நாடி ஆக வேண்டும். ஆனால் இந்த கூட்டம் பொதுவாக நம்மளிடம் ஆட்டையை போடுவதிலேயே குறியாக இருக்கும். 

இப்படி தான் ஒரு நாள் ஒரு நபர் மடமட என்று ஒரு தென்னையில் ஏறி ஒரு பெரிய வண்டு (Golf Ball சைஸ் இருக்கும்) ஒன்றை பிடித்து போட்டார். கூன் வண்டோ, காண்டா மிருக வண்டோ ஏதோ சொன்னார். அது நேரே குருத்தையே காலி செய்து கொண்டிருந்திருக்கிறது. அது சவைத்து துப்பிய இலை குருத்து மரத்தில் நிறைய இடத்தில் தேங்கி இருந்தது. விட்டா  மரத்தை மொத்தமாக முடித்திருக்கும் போல. அப்புறம் இதை கட்டுப்படுத்த ஏதோ மருந்து வேண்டும் என்றும், அது அவினாசியில் தான் கிடைக்கும் என்றும் சொன்னார் (அப்போ தான நம்ம போய் வாங்க மாட்டோம் :-) ). அவரிடமே அந்த மருந்து இருப்பதாக கூறி ஒரு ரூ.400 வாங்கி மஞ்சளாய் ஒரு கரைசலை ஊற்றி சென்றார். எப்படியோ மரத்தை வண்டிடம் இருந்து காப்பாற்றியதில் ரூ.400 பெரிதாக தெரியவில்லை. 

ஒரு மாதம் போய் இருக்கும். மீண்டும் அதே நபர். வந்தார். மரத்தை பார்த்தார். கொஞ்சம் பதட்டம் ஆனார் (அவ்வவ்.. மறுபடி 400:-( ). மடமட என்று அதே மரத்தில் ஏறினார். ‘என்னங்க. சரியா பாக்கறது இல்லையா. பாருங்க. இலை எல்லாம் காய்ஞ்சு போய் இருக்கு’. ஆமாங்க. அது போன தடவை நீங்க கொன்னு போட்ட வண்டு கடிச்ச இலை. இப்போ அந்த இலை வளர்ந்திருக்கு.வண்டு பாதி சாப்பிட்டதாலே அப்படி தெரியுதுநான்  (நாங்கெல்லாம் ரொம்ப அலர்ட் :-)). ஒ! இவன் ரொம்ப யோசிக்கிறான் என்று நினைத்திருப்பார் போல, சட்டென்று பக்கத்து மரத்தை பார்த்தார், மறுபடியும்  ஒரு பதட்டம். 

அதில் ஏறினார். ‘பாருங்க இங்க மட்டையை கடிச்சிருக்கு. குருத்தை வேற கடிச்சி வச்சிருக்கு. அதே வண்டு தான் (அதான் செத்து போச்சே)அவர். செத்துப் போன வண்டு தான் பொழுது போகாம பக்கத்து மரத்தையும் லேசா கடிச்சி பார்த்திருக்கும் என்பது என் கணக்கு. ‘சரிண்ணே. அப்போ அந்த வண்டை புடிச்சி போடுங்க உறுதி செய்து கொள்ளனும் இல்லையா. ‘அந்த வண்டு இப்போ இல்ல தம்பி. அது ராத்திரி தான் வரும் (எத்தன மணிக்கு?). பகலில் இருக்காது. அவர். அதான அதான் ஒரு மாசத்துக்கு முந்தியே செத்து போச்சே. இல்லாத வண்டு எங்கேயோ வேலை விசயமா வெளிய போயிருக்கு என்கிற ரீதியில் அவர் கதை சொன்னார். 

மறுபடி ரூ.400, அவினாசி, மஞ்சள் கரைசல். நான் இந்த தடவை Option A, அவினாசியை தேர்ந்தெடுத்தேன் :-). ஒரு பேப்பரும் பேனாவும் அவர் கையில் கொடுத்து அந்த மருந்த எழுதி கொடுங்கண்ணே என்றேன். கடுப்பில் கிளம்பி விட்டார். அவர் போனதும் சுவற்றில் ஏறி, மரத்தில் ஏறி குருத்து வரை ஏறி பார்த்தேன். ஒரு மட்டையில் சின்னதாய் ஒரு இஞ்ச் அளவுக்கு லேசாக கடித்திருந்தது. வேறு ஒரு அடையாளமும் இல்லை. அதற்கப்புறம் அவரை உள்ளே விடுவதே இல்லை.   

சரி. கதை அவ்வளவு தான். கதையின் நீதி என்னன்னா, தென்னை இருந்தா கொஞ்சம் அடிக்கடி எட்டி பார்க்கணும். இலை ஏதாவது கடித்து துப்பிது போலவோ, இலை, குருத்து காய்ந்து தெரிந்தாலோ உடனே கவனிக்கணும்.
பூச்சி கட்டுபடுத்தலுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேப்பம் புண்ணாக்கு மரத்திற்கு 5 கிலோ என்ற கணக்கில் வைத்து விடுவேன் (இங்கே அன்னூரில் கிடைக்கும்). குரும்பல் பிடிப்பதை அதிகரிக்கச் செய்ய தென்னை டானிக் (ஊட்டச்சத்து கரைசல்) இங்கே விவசாய கல்லூரியில் வாங்கி வேர் மூலம் உட் செலுத்தலாம். ஒரு பெரிய வேரை கண்டுபிடித்து ஒரு டானிக் பாக்கெட்டை கட்டி விட்டால், மரம் உறிஞ்சிக் கொள்கிறது. இதை தவிர உரத்திற்கு மண்புழு உரம், சாணி உரம் இடுவதுண்டு.
ஒரு மரம் இந்த வருடம் காய்க்க துவங்கி உள்ளது. முதலில் வந்த சில பாளைகளில் காய் ஏதும் இல்லை. பிறகு ஒரு காய், மூன்று என்று இப்போது நிறைய காய்க்கிறது. அடுத்த மரம் அடுத்த வருடம் காய்க்கும் என்று நினைக்கிறேன். 

இளநீர் உடம்புக்கு நல்லது என்ற கட்டத்தை தாண்டி ரொம்ப ரொம்ப நல்லதாகி விட்டது இப்போது. இளநீர் பயன்கள் பற்றி இணையத்தில் தேடினால் எக்கச்சக்கமாய் கிடைக்கிறது. மக்களும் அதை புரிந்து கொண்டு விலையை கன்னாபின்னா என்று விலையை ஏற்றி விட்டார்கள் (ரூ.20 வரை விற்கிறார்கள் :-( ). அதனால் இப்போதைக்கு இதை இளநீராகவே வெட்டி பயன்படுத்திக் கொள்ள யோசித்திருக்கிறேன். இப்போது  காய்த்திருக்கும் மரத்தின் காய் நன்றாக பெரிய உருண்டை காய். ஒரு காயில் இளநீர் கிட்டத்தட்ட 600 ml இருக்கிறது ( 3 Glass of 200 ml each  ). இப்போது காலைல நெனைச்சா ஒரு இளநீ வெட்டி குடிச்சிக்கலாம் :-).  

ஒரு சின்ன டிப்ஸ், தென்னை மரம் லேசாக சாய்ந்து பக்கத்து வீட்டை நோக்கி வளைந்தால் (பின்னர் வரும் பிரச்சனையை சமாளிக்க), சில தேங்காய் சிரட்டைகளை எடுத்து சில மட்டைகளுக்கு இடையில் மரத்தோடு வைத்து நன்றாக இறுக்கமாக அடித்து வைத்து விட்டால், அதற்கு எதிர் திசையில் மரம் வளைய ஆரம்பித்து விடுகிறது. என்னுடைய ஒரு மரத்தை இப்படி தான் திசையை திருப்பி விட்டிருக்கிறேன் :-). இதோ சில படங்கள்,
Pic 1

Pic 2

Pic 3

Pic 4

Pic 5

Pic 6

Pic 7

Pic 8

Pic 9
Pic 10

Pic 11

Pic 12




Saturday, September 1, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – ஜாதி (பிச்சி) பூ


நம்ம ஊர் பெண்களுக்கு பூ எவ்வளவு பிடிக்கும் என்று தனியாக எழுத வேண்டியதில்லை. தோட்டத்தில் எவ்வளவு தான் நாம் காய்கறிகளும், பழங்களும் விளைய வைத்து கொடுத்தாலும், ரெண்டு பூ செடி இல்லன்னா வீட்டில் நம் தோட்டத்திற்கு  ஆதரவு திரட்டுவது கடினம் தான். ரொம்ப குட்டீஸ் கூட ரெண்டு மூணு வயசிலயே பூ வைத்து விட சொல்லி அடம் செய்வத்தும், வைத்த பூவை தலையில் இருக்கிறதா என்று தொட்டு பார்த்துக் கொண்டே சுற்றுவதும் பார்பதற்கு அழகு.

ஊரில் இதை பிச்சிப் பூ என்பார்கள், எங்கே ஜாதி பூ என்கிறார்கள். மல்லி பூ போல, மிகவும் வாசமான ஒரு பூ. நம்ம ஊரில் ரொம்ப எளிதாக வரும் ஒரு செடி.  

ஜாதி பூ நாற்றுக்கள் நர்சரி கார்டனிலேயே கிடைக்கிறது. அதை விட நன்றாக பூக்கும் செடியில் இருந்து பதியம் போட்டு நாற்று எடுப்பது ரொம்ப எளிது. நான் வீட்டில் வைத்திருக்கு செடி அப்படி நாற்று எடுத்தது தான். பதியம் போடுவதற்கு ஒரு சிமென்ட் சாக்கு பை ஓன்று எடுத்து பாதி அளவுக்கு மண் எடுத்து கொள்ளுங்கள் (செம்மண், மணல்,, மக்கிய செடி குப்பை, கொஞ்சம் சாணி உரம் கலவை). நன்றாக பூக்கும் ஒரு செடியில் இருந்து, நீளமாக திரட்சியாக உள்ள ஒரு கிளையை வளைத்து (வெட்ட கூடாது), ஒரு கணு மண்ணில் புதைந்து இருக்குமாறு பையில் வைத்து, மேலும் ஒரு கால் பாகம் மணலை போட்டு நிரப்பவும். 



அசையாத ஒரு இடத்தில் இதை வைத்து தினமும் நீருற்றி வரவும். புதைத்து வைத்த கணுவில் இருந்து வேர் விட ஆரம்பிக்கும். செடியும் மறு பக்கத்தில் தளிர்க்க ஆரம்பிக்கும். செடியில் நன்றாக தளிர் வந்ததும், செடியை தாய் செடியில் இருந்து வெட்டி, அசையாமல் ஒரு இடத்தில் வைத்து மேலும் ஒரு மாதம் வளர்க்கவும். நன்றாக வேற விட்டு, செடி வளர்ந்ததும் தரையில் வைக்கலாம்.    

அடுத்து செடிக்கு பந்தல் அமைப்பது. ஜாதி பூ நிறைய வருடம் இருக்கும் ஒரு செடி. அதனால் பந்தல் அமைக்கும் போதே உறுதியாக அமைப்பது அவசியம். பந்தல் ஒரு சுவர் ஓரமாக அமைத்தால் செடி படர்வதர்க்கும், பூ பறிப்பதர்க்கும் வசதியாக இருக்கும். இரண்டு சிமெண்ட் போஸ்ட், கொஞ்சம் சவுக்கு கம்பு வைத்து பந்தல் அமைக்கலாம். இரண்டு பக்கம் போஸ்ட், மறு பக்கம் சுற்றை வைத்தால் பந்தல் உறுதியாக இருக்கும். நான்கு பக்கமும் சவுக்கு கம்பு வைத்து, குறுக்கே உறுதியான கட்டு கம்பு (துணி காயபோட கட்டும் கம்பி) வைத்து கட்டலாம். பந்தல் ஒரு 4 அல்லது 4 ½  அடி இருந்தால் போதும். ரொம்ப உயரம் இருந்தால் பிறகு பூ பறிக்க கடினமாக இருக்கும்.

செடியை பந்தல் எட்டும் வரை மேலே கொண்டு வர ஒரு சிறிய கம்பு வைத்து செடியோடு கட்டி வைக்கவும். செடி படர ஆரம்பித்தவுடன் இந்த சப்போட் தேவை படாது. முடிந்த அளவு நிறைய கிளை இல்லாமல் ஒரு 3 – 4 கிளைகள் மட்டும் பந்தல் வரை கொண்டு வரவும் (இல்லாவிட்டால் செடி கீழேயே படர ஆரம்பித்து விடும்). படர்த்தவுடன் சில தளிர்களை ஒடித்து விட்டு நிறைய கிளைகளை உருவாக்கலாம்.  

பூச்சி தொல்லை என்பதெல்லாம் இந்த செடியில் வருவதில்லை. தவறாமல் நீருற்றி, அவ்வப்போது உரமிட்டு வந்தால் போதும். இப்போது ஜூலையில் இருந்து நன்றாக பூக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு செடியில் இருந்து,  தினமும் 1000 – 1500 வரை பூ கிடைக்கிறது. பூத்து ஓய்ந்ததும் நன்கு இடைவெளி வரும்படி நறுக்கி கிளைகளை (கவாத்து செய்தது) விடவேண்டும். அப்போது தான் மறுபடி தளிர்த்து மொட்டு வைக்கும்.